Wednesday, 13 June 2012

பாசமுள்ள சொந்தங்களுக்கு




உறவின் வலிமை 
உங்கள் பிரிவில் தான் 
அர்த்தப்படுகிறது 

புற உலக சம்பந்தங்களில் 
தொடர்புண்ட சூழலில் 
அக உறவு நிலைகளில் 
அமைதிகாணும் எந்தன் ஆழ்மனம்
இன்று ஏனோ 
நிம்மதியிழக்கிறது
நீள்துயரம் கொள்கிறது

இரத்தபாசம் என்று சொல்வார்கள் 
அப்படி ஏதும் தெரியவில்லை 
உங்களுக்கும் எனக்கும்
ஆனாலும் 
இரத்ததில், சதையில் 
பிரித்துப் பார்க்க முடியாது 
இரண்டுமாய் 
அதாவது இரத்தமும் சதையுமாய் 
இருக்கிறோம் 
என்பதை உறுதிப்படுத்துகிறது
நம்முள் ஏற்பட்ட 
நமக்கான கோபம் 

தவறு என்னிடம்தான் 
அதில் ஏதும் குழப்பமில்லை
வெளிவந்த வார்த்தை 
வலி தரக் கூடியவைதான் 
என்பதை 
வலியோடு உணர வைத்தீர் 

சந்திக்க 
வாய்ப்புகள் அற்ற சூழலிலும்
தொலைபேசி அழைப்புகள் 
நினைக்கும்போது 
முடியாது என்ற போதும்,
எதேச்சையாக பார்க்கிறபோதும் 
அல்லது அதற்கான சூழல் ஏற்படுகிறபோதும்   
முகம் கொடுத்து பேச முடியாத
ஒரு பார்வை கூட 
பார்க்க முடியாத சூழலில் 
உறவின் வலிமை அதன் 
உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது 

இந்த கணத்தில் 
உங்களை எண்ணிப் பார்க்கிறபோது
கண்களின் கடை ஓரங்களில் 
வழிந்தோடும் 
கண்ணீர்த் துளிகளையன்றி 
வேறொன்றும் 
துணையாய்த் தெரிவதில்லை.
--         


No comments:

Post a Comment