'கோவிந்தம் கோவிந்தமே
எங்கள் கோபாலா ஆண்டவா
எனை ரட்சியும்' என்று
கிருஷ்ண பகவானுக்கு விதுரனாய்
நீ படைத்தாய் விருந்து.
இன்று விதுரன் நாங்கலானோம்
பகவான் நீயானாய்
படையல் சாவுச் சோறு
குறத்தி வேடமிட்டு
கந்தனுக்கு குறி சொன்ன நீ
குறையாய் விட்டு சென்றாய் எங்களை
குறிப்பாய் கூட ஏதும் சொல்லாமல்.
பதினெட்டாம் போரில் துரியோதனாய் வந்து
" பாராளும் திறமையெல்லாம் பாவியானேன்" என்று
அன்று சொன்ன வார்த்தை
வேஷம் களைத்த
உன் வீர வாழ்விலும் உண்மையானதே.
பாஞ்சால வேஷத்தில் வந்து
பஞ்ச பாண்டவர் அரக்குமாளிகையில்
மாண்டதாய் கேள்விப்பட்டு
தன் மகள் துரௌபதியை
யாருக்கு மணமுடிப்பேன் என
"என்னா சொல்வேன் எந்தன் மனக்குறை
என் மந்திரி " என்று நீ
அன்று அழுதது
இன்றும் எங்களை அழ வைக்கிறதே.
நீ எண்ணிய எண்ணங்கள் ஈடேரவில்லையே
பண்ணிய சபதங்கள் பாழாகப் போச்சுதே
கடலில் சென்ற கப்பல் கவிழ்ந்தது,
கரை தேடி தவிக்குது எங்கள் வாழ்வு.
வேலைக்கு சென்று வீடு திரும்பும்
உன் மகள்களுக்கும்
படிக்க சென்று வீடு திரும்பும்
உன் மகனுக்கும்
இன்னும்
சொல்லிக்கொண்டிருக்கிறாள் என் அத்தை
"அப்பா கூத்துக்கு போயிருக்கார்" என்று.
நீ இருந்த போது
யார் வீட்டிற்கும் எதற்காகவும் சென்றதில்லை
மானத்தோடும் வீரத்தோடும்
மரியாதையோடும் வாழ்ந்தாய்
வாழ வைத்தாய்
வழி காட்டிச் செல்லாமலேயே
பாதியிலேயே மறைந்துவிட்டாய்
பழிக்கும் பாவத்துக்கும்
ஆளாக்கிவிட்டாய்
உன்னைக் கண்டு
பயந்து நடுங்கி போனவர்களெல்லாம்
இன்று என் வீடு வந்து
படைஎடுப்பாரோ
உன்னிடம்
உபதேசம் கேட்டவரெல்லாம்
வீடு வந்து உரைப்பாரோ
ஊர் மதிக்க வாழ்ந்தாய் நீ
இன்று
ஊர் மிதிக்க வாழ்வோமோ நாங்கள்
புரியவில்லை
புலம்புகிறோம் உன்னை எண்ணி
கூத்தில் பலமுறை மாண்டதுண்டு நீ
அப்போதெல்லாம் அழுததுண்டு நாங்கள்
உன் கூத்தே மாண்டுவிட்டது
எங்கள் குலமே அழிந்துவிட்டது
கோபுரமே சாய்ந்துவிட்டது
யாரிடத்தில் புரண்டு அழ,
புலம்பி அழ.
இப்பொழுது நாங்களும்
வேஷம் கட்டுகிறோம்
உன்னை மறந்த நாடகத்தில் .
No comments:
Post a Comment