Wednesday, 13 June 2012

மனம் அர்த்தப்படும்


மனித வாழ்வு என்பது ஆண், பெண் எனும் இரு பெரும் இன உயிரினங்களின் சேர்க்கையும் பிரிவுமாக இருக்கிறது. மனம்  என்பது அன்பு, காதல், கருணை, அழகு, ஆணவம், ஆர்ப்பரிப்பு, இழப்பு, எதிர்ப்பு, வன்மம், வக்கிரம்  என பல நிலைகளில் நம்மை செயல்படுத்த வைக்கிறது. அதே வேளையில் நம்மை பக்குவப்படுத்தவும் பலப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் தன் இருப்பை மனம் வெளிப்படுத்துகிறது. சிந்தனை என்பது கூட இதன் ஊர் அங்கம்தான். பிறப்பெடுக்கும் அனைத்தும் இறப்பை சந்திக்கும். இதுதான் வாழ்க்கையின் நியதி. இறப்பு பல வகைகளில் நிகழும். இதனை நாம் நாம் வசதிக்கேற்ப வகைப்படுத்திக் கொள்ளலாம். நினைவுகளின் நீட்சிக்கு ஏற்ப துர்மரணம், இயல்பான மரணம் என வகைப்படுத்தலாம். 

இந்த வட்டத்திற்குள் நம்முடைய செயல்பாடு என்பதுதான் நம்மை நம் இருப்பை என்றும் உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன. எழுத்துக்களும், பேச்சுக்களும், சில நேரங்களில் பெரும்பாலோரின் செயல்பாடுகளாக இருந்தாலும் அவர்களின் எழுத்தோ, பேச்சோ சில செயல்பாடுகளில் மாற்றம் பெறுகிறபோது நாம் அவரை அவரின் பங்களிப்பை நாம் சந்தேகிக்க செய்கிறோம். எளிமையும், நேர்மையும் என்பது மனித செயல்பாட்டை கடந்த ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில் மனம் சந்திக்கும் நபரை, நபரின் நம்பகத்தன்மையை சோதிக்க உதவுகிறது. பல்வேறு வகைப்பட்ட, பல வகைப்பட்ட மனிதர்களை சந்திக்க கூடியவர்களாக நாம் இருக்கிறோம் உடன்பிறந்தவர், குடும்பம், சுற்றத்தார், உறவினர், அயலார், நண்பர், பகைவர், ஆசிரியர், தலைவர் என நீள்கிறது சந்திப்பு. ஆனால் நம்மில் நிலைப்பதும்  தொடர்வதும் ஒரு சில நட்புக்களே, உறவுகளே, தலைவர்களே, அயலார்களே, பகைவர்களே. 

சந்திப்பின் வலிமை மிக அபூர்வமானது. அது நம்மை வளப்படுத்தவும் செய்யும், பலப்படுத்தவும் செய்யும், சிறுமைபடுத்தவும் செய்யும்.சில நிவாரனமாய், சில ரணமாய் தொடர்கிறது நாம் வாழ்வில். புற உலக வாழ்வு தான் அடிப்படை அக உணர்வு வாழ்வை தீர்மானிப்பவையாக இருக்கிறது. இதில் புலன் உணர்வுகளின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணத்திற்கு சொற்களின் வலிமை. இது அன்பு உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும், நேர் எதிர் கருத்து உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும் ஏற்படுத்துவதை நம்மால் ஊகிக்க முடியும். மனம் ஒன்றுபடுகிறது சிலரை சந்திக்கிறபோது அவர்களோடு உரையாடுகிறபோது அவர்களின் செயல்பாடுகளோடு உறவாடுகிறபோது நம்முள் அக உணர்வு என்பதில் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றம் புற உலக உணர்வில் செயல்படுவதுமாய், புலன் உணர்வில் உறவாடுவதுமாய் வினை புரிகிறது. 

இங்கு பெரும்பாலும் அக உணர்வு வேண்டுவது நம் பாதுகாப்பை அதாவது நம்மீது உள்ள நமக்கான காதல். அதுதான் நம்மீது பிறர் காட்டும் அன்பு, பரிவு, காதல், ஆசை முதலானவற்றை எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அது நம்முள் நமக்கான தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுகிறது. 
எப்போது நான் பலரால் பேசப்படுகிறோனோ, எப்போது நான் பலரின் பாராட்டுகளை பெருகிறோனோ, எப்போது நான் பல நட்புக்களை காதல்களை எதிர்கொள்ள தயாராகிறேனோ அப்போதுதான் தான் நான் வாழ்வில் பெற்றதாக எவன் ஒருவன் எண்ணுகிறானோ அப்போதுதான் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான அர்த்தம் அங்கு உணரப்படுகிறது.

அனுபவ அறிவுக்கேர்ப்பதான் நம்முடைய எழுத்தும், சொல்லும், செயலும் வெளிப்படும். இங்கு நான் கூற விழைவது இளமைக்கால அனுபவங்களும், அடிப்படை உணர்வுகளும், புற உலக வசதிக்கும் என வகைப்படுத்தலாம். இங்கு சுமார் இருபத்தைந்து வயது என்பதை ஓர் வசதிக்காக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மானிடனும் ஏதோ ஒரு குடும்ப கூட்டமைப்பிலிருந்து தான் உருவாகிறான்.இங்கு தாய், தந்தை என்ற ஆண், பெண் உணர்வும் தமையன், தம்பி, அக்கா, தங்கை என உடன்பிறப்பின் வகைமையும் நீள்கிறது. பலருக்கு குடும்ப சூழல் ஒழுங்குற அமைகிறபோது அவர்களின் குடும்பம் தவிர்த்த வெளி வட்டார நட்பின் தொடர்பு ஒரு வகையாகவும், குடும்ப சூழலில் பிணக்கு ஏற்படுகிற போது, அன்பு விரிசல் அடைகிறபோது  அந்த குடும்ப சூழலில் இருந்து வெளிவரும் ஒருவரின் வெளிவட்டார நட்பு என்பது ஒரு வகையாக அமைகிறது. ஆக குடும்பம்தான் ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் ஈட்டித் தருகிறது. 

இந்த சூழலில் குடும்பம் தவிர்த்த வெளி தொடர்புகளான கிராமம், பள்ளி,  பணிபுரியும் இடம், போன்ற சூழல்களில் நமக்கு கிடைக்கிற நட்பு, அன்பு, பரிவு, பாசம் என்பவை புதியதொரு மனிதனை உருவாக்குகிறது. இங்கு குடும்பம் என்பதை அகம் எனவும், கிராமம், பள்ளி, பணிபுரியும் இடம், சமூகம் என்பதை புறம் எனவும் கொண்டு பேச முற்படுவோமானால் அங்கு அகத்தின் நீட்சி புறத்திலும்  , புறத்தின் நீட்சி அகமுமாய் செயல்படுவதை உணர முடியும்.

பள்ளிபருவம் எனபது நாம் சமூகத்தில் ஒருவன் உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் கூடமாக இருக்கிறது. சில சூழல்களில் பள்ளி செல்லாதவர்களுக்கு குடும்பம், சமூகம் ஒழுங்கு படுத்துபவையாக இருக்கிறது. குறிப்பாக, பள்ளி வேளைகளில் சந்திக்கும் நபர்களின் பண்பும், பாசமும் நம்மை பக்குவப்படுத்துகிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் தொடக்கத்தை புரிய வைக்கிறது. இங்கு ஆண், பெண் நட்பின் புனிதம் கூட பெரும்பாலும் இங்குதான் உணரப்படுகிறது. குறிப்பாக ஆண் பெண்ணை கிண்டல், கேலி, கோபம், சிரிப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படுத்த விழைகிறான். அதே சூழலில் பெண்ணும் ஓர் ஆணின் ஏதோ ஒருவித எதிர் செயல்பாட்டை எதிர்பார்ப்பவளாய் இருக்கிறாள். ஆணுக்கு பெண்ணின் நட்பும் பெண்ணுக்கு ஆணின் துணையும் இங்கு அவசியமாகிறது. ஆண், பெண் நட்பு பரிமாற்றத்தில்தான் இந்த உலகம் அமைதியாகவும், அமைதியின்றியும் சுழல்கிறது. இங்கு ஆணும், பெண்ணும் சரிசம உணர்வு, நட்பு பரிமாற்றத்தில் நாட்டம் கொள்ளவே விழைகின்றனர். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓர் ஆணோ, பெண்ணோ எதிர் பால் ஈர்ப்பாளரின் துணையாய், நட்பை, பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதன் நீட்சி சில வேளைகளில் நல்ல குடும்ப அமைப்பையும், சில வேளைகளில் சமசீரற்ற, ஒழுங்கற்ற குடும்ப சூழலையும் உருவாக்குகிறது. ஆண், பெண் ஈர்ப்பு என்பது  இயல்பு என்பது உளவியல் தத்துவம். இங்கு சாதி, மத, இன, மொழி ரீதியில் மக்கள் பிளவுபட்டு இந்த உறவுமுறை, கொள்வதும், கொன்று புதைப்பதும் நிகழ்வதை நம்மால் காண முடிகிறது,ஓர் ஆணின் பெண்ணின் துணையின்றி வாழ்வதும் பெண் ஆணின் துணையின்றி வாழ்வதும் அதன் அர்த்தம் குறிப்பாக நபரின் இருபத்தைந்து வயதுகளில் உணரப்படுவதாக நான் நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேல் படிப்பு, வேலை, திருமண குறித்த சிந்தனைதால் தான் நம்மை வழி நடத்துகிறது. 

படிப்பு, வேலை, வருமானம் என நிகழ்ந்தாலும் கூடவே திருமணம் தன் இருப்பை கேள்வி கேட்ட வண்ணம் மனிதனை துரத்துகிறது. இந்த சூழலில் மனிதன் தன் நிலையை உணரவும், அதிலிருந்து மீளவும் தலைப்பட நினைக்கிறான். இங்கு நான் கூற வருவதன் சாராம்சம் என்பது குறிப்பாக திருமணம், ஆண், பெண் நட்பு என்பதாக அமைகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் நாம் பலவற்றை கடந்து வருகிறோம். இளமைப்பருவத்தில் தான் நம்மில் பலர் திசைமாறி செல்வதை நாம் அவதானிக்கிறோம். எனவே நட்பு என்பது இருபாலரிடத்திலும் இயல்பாக நிகழ வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் உள்ளார்ந்த அன்புகளை உடனிருந்து பரிமாறிக் கொள்ள வேண்டும். அதே வேளையில் சமூகத்தில் ஓர் உயர்ந்த சிந்தனையை போற்றிக் கொண்டும், பேணிக் காத்து கொண்டும் செல்ல வேண்டும். இங்கு தான் சுமுகமான வாழ்வு உள்ளதை அர்த்தப்படும். ஆக மனம்  , ஆண், பெண், நட்பு, காதல் என்பது முழுவதுமாய் தன்னை உணர்கிறபோது மட்டுமே அர்த்தப்படும் என்பதாய் நான் உணர்கிறேன்.  

No comments:

Post a Comment