ஊர் மெச்ச வாழனும் சபை மெச்ச ஆடனும்
தெருக்கூத்து நிகழ்கலையின் தேர்ந்த கலைஞர் தென்நெற்குணம் தேவராசு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் தென்நெற்குணம் என்ற ஊரில் 1959 ம் ஆண்டு பிறந்தவர். வாழ்நாள் தெருக்கூத்து கலைஞராய் வாழ்ந்த அவர் கடந்த செப்டம்பர் 13 ம் தேதி நம்மை விட்டு பிரிந்தார். சுத்துப்பட்டு ஊர்ல பேர் போன கூத்தாடி, படித்தது மூன்றாவது வரை மட்டும் தான், அம்மா ஊமை (பேசமுடியாதவர்), அப்பா வேறு மனைவி கட்டிக்கொண்டு வெளியூர் சென்று வாழ்ந்து இறந்து விட்டார் . இவர் குடும்பத்தின் (தாய், தந்தை வழி) நான்காவது தலைமுறை கூத்தாடி . இவரின் தாய் மாமன் அர்ச்சுனன் ஊரில் கூத்து வாத்தியார், கூத்தின் மீது ஈடுபாடு கொண்ட தேவராசு , தன்னுடைய 13 வயதில் கூத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் மத்தளம், ஆர்மோனியப் பெட்டி என சுமந்து சென்றார்.
தெருகூத்துல ஆடாத வேஷம் இல்லை, தொடாத பவுடர் இல்லை, பாரதம், ராமாயணம், தனிக்கதை, புராணம் என அத்தனையும் அத்துபடி. பெரும்பாலும் கட்டியது பெண் வேசம்தான், கொண்டைக்காரர..., என அன்போடு கூத்தாடிகள், ஊர் மக்கள் என எல்லோரும் அழைப்பர். கர்ண மோட்சத்துல பொன்னுருவி , துகிளுரில திரௌபத, கிருஷ்ணன் பிறப்புல யசோத, இதெல்லாம் பெண் வேஷம், ஆண் வேசமா இருந்தா, பதினெட்டுல துரியோதணன்,விதுரன் விருந்துல கிருஷ்ணன், இப்படி இவர் ஆடினால்தான் ஊர் சனங்களுக்கு புடிக்கும்.கூத்து சம்பளம் பட்டுவாடா இல்லாம இவர் பாடும் திருப்புகழுக்கும், கீர்த்தனைக்கும், விருத்தத்துக்கும் கொண்டாடும் பணம் தனி.
அரக்கு மாளிகையில் பாண்டவரும் சேர்ந்து எரிந்ததாய் கேள்விப்பட்டு , தன் மகள் பாஞ்சாலியை யாருக்கு மணம் முடிப்பது ? என எண்ணி ,
"என்னா சொல்வேன் எந்தன் மனக்குறை.. என் மந்திரி ....
எண்ணிய எண்ணங்கள் ஈடேரவில்லையே..
பண்ணிய சபதங்கள் பாழாகப் போச்சுதே..."
என்று அன்று பாஞ்சால மன்னனாய் வந்து அவர் அழுத அழ , இன்று அவர் சொந்த வாழ்வுக்கு சொந்தமாகிவிட்டது. கூத்து தான் வாழ்க்கை. வாழ்க்கை பாதியில் முடிஞ்சதால அவர் குடும்பம் கூத்தாடுது.
இவரின் கடைசி பத்தாண்டுகளுக்கு மேலான வாழ்க்கை பாரதகூத்தில் கழிந்தது. பாரதத்தில் தபசு மரம் ஏறியதை தன் வாழ்நாள் பெருமையாக கருதியவர். தனியே கூத்து ஜமா வைத்து நடத்த எண்ணினார். அவரின் குடும்ப சூழல், பொருளாதார சிக்கல், சாதி போன்ற காரணங்களால் நிறைவேறாமல் போனது. பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள், கலைத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள் தன்னை நாடி நேர்காணல் கண்டதையும், புத்தகத்தில் தன் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு பேரானந்தம் அடைந்தார். புத்தகத்தை பிள்ளைகளிடம் காட்டி "என் திறமைக்கு இருக்கிற மரியாதையை பார். பட்டப்படிப்பு படிக்கல, என் தொழிலில இருக்கிற நேர்மைதான், எல்லாரையும் என்ன தேட வைக்குது" என்பார்.

மிகப்பெரிய தெருக்கூத்துப் பாரம்பரியத்தின் கடைசி வாத்தியாரானர். வாத்தியார்களுக்கெல்லாம் வாத்தியாராய் வாழ்ந்தார். மிகப்பெரிய கலைஞ்சனை இழுந்து நிற்பது அவர் குடும்பம் மட்டுமல்ல, அவர் குரல் கேட்டு கூத்து பார்க்க ஓடி வந்த கூட்டங்களும், எண்ணற்ற கூத்து ஜமாக்களும், தாம்பூலம் வைக்க வரும் நாட்டமைகாரர்களும், இன்னும் அவர் வீட்டில் உள்ள அவர் தொட்ட பவுடரும் , அவர் கட்டிய சலங்கையும், அவர் கைக்குள் அகப்பட்டு போன ஆர்மோனியப் பெட்டி, தாளம் என சொல்லிக் கொண்டேபோகலாம்.
No comments:
Post a Comment