மதுரை எழுத்துப் பதிப்பகம், 'தலித் வரலாற்று நூல் வரிசை' என்ற முறையில் நான்கு நூல்களை அண்மையில்(2009) வெளியிட்டுள்ளது. இதில் 'தலித் மக்களும் கல்வியும்' என்ற மூன்றாவது நூல் தலித்துகளின் வரலாற்றை கட்டமைப்பதில் மிகவும் பிரதான இடத்தை வகிக்கிறது எனலாம். இந்திய மண்ணில் சாதியை ஆணிவேறாகக் கொண்ட இந்துமதம்,தலித்துகள் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று அடிமைப்படுத்தியும், கல்வி, நிலம் ஆகியவற்றை ஒரு சேரப் பறிப்பதன் மூலம் தலித்துகளின் வாழ்வியலையும், அடுத்த தலைமுறையின் தலைநிமிர்வையும் ஒடுக்கியே வைத்தது. இந்தச் சூழலில்தான் கிறித்தவ மிஷினரிகள், ஆங்கில அரசு, தலித் அமைப்புகள் போன்றவை தலித்துகளின் நலனில் அக்கறை செலுத்தியது. இதன் பின்னணியில் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்(1832-1907) என்ற பெளத்த சமயப் பற்றாளர், 1894, ஜூன் 18 ந் தேதி சென்னை அடையாரில் பஞ்சமர் இலவசப் பள்ளி ஒன்றினை தியோசபிகல் சொசைட்டி (இறையுணர்வு சங்கம்) மூலம் தொடங்கினார். பின் பண்டிதர் அயோத்திதாசரின்(1845-1914) வேண்டுகோளுக்கு இணங்க, கோடம்பாக்கம்(1898), தேனாம்பேட்டை(1899), மைலாப்பூர்(1901), கிருஷ்ணாம்பேட்டை(1906) ஆகிய இடங்களிலும் இலவசப் பள்ளிகளை நான்காம் வகுப்பு வரை ஏற்படுத்தினார்.
பண்டிதர் அயோத்திதாசர்,1898, ஜூன்8 ல் கர்னல் ஆல்காட் அவர்களுக்கு 'தன்னேரில்லாத விண்ணப்பம்' (A Unique petition) என்ற தலைப்பிலான கடிதம் ஒன்றை எழுதினார். . அதில் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாக பறையர்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை , "நாரதிய புராண சங்கைத் தெளிவு" என்னும் ஒலைசுவடியின் மூலமும், குரல், ஆத்திசூடி, சிலப்பதிகாரம் , மணிமேகலை, தொல்காப்பியம், நன்னூல், நிகண்டுகள் போன்ற இலக்கிய இலக்கண நூல்களில் பெளத்த ஞானம் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டி நிறுவுகிறார். மேலும் கர்னல் ஆல்காட் அவர்களிடம் பறையர்களின் கல்வி மேம்பாடு, பெளத்த மதமாற்றம் குறித்த உதவிகளையும் முன்வைக்கிறார். இதன் நீட்சியாக கர்னல் ஆல்காட் அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரையும் , பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி. கிருஷ்ண சாமியையும் (ஜூலை3,1898) இலங்கைக்கு அழைத்து சென்று தலைமைக்குரு சுமங்களா மூலம் பஞ்சசீலம் ஏற்கச் செய்தார். பஞ்ச சீலத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமர்கள் என்ற பேருண்மையை இந்நூலின் முகப்பு பகுதியும் பின்னிணைப்பும் நமக்கு தெரிவிக்கிறது.

இந்நூலின் இரண்டாவது பகுதியில், கர்னல் ஆல்காட் 1902, ஜூன் 17ல் எழுதிய 'பறையர் வரலாறு' (The Poor Pariah) என்ற கட்டுரையில், தலித்துகளின் கல்வி, நிலம், வாழ்வு, பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகளை முனைவர்.டங்கன், செல்வி.கார், அருள்திரு,எஸ்.மற்றீர், அருள்திரு.கௌடி, திரமேன்கிர் போன்ற அறிஞர்களின் கூற்றின் வழி அறியலாம். மேலும் தலித் குழந்தையின் உளவியல் தன்மைக்கேற்ப கரும்பலகையில் எழுதுதல், எழுதுக்கட்டியால் வரைதல் , களிமண்ணால் உருவங்களைச் செய்ததல், இலைவேலைகள் போன்ற பயிற்சிகள் கொடுத்து, குழந்தைகளின் சிந்தனைத் திறனை மழலையர் வகுப்புகளில் மேம்படுத்தியத்தை இந்நூலில் மூன்றாவது பகுதியில், பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் மேலாளராகப் பணிபுரிந்த கோர்ட்ரைட் அவர்கள், ஜூலை, 1906ல் எழுதிய 'பறையரை யாம் எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம்' (How We Teach the Pariah) என்ற கட்டுரையின் வழி அறியமுடிகிறது. இன்றைய கல்வி முறையின் மாற்றம் குறித்த பரிசீலனைக்கு இக்கட்டுரை அவசியமானதாகவும் உள்ளது.
"திருவள்ளூர் தாலுகாவிலுள்ள 300 கிராமங்களுள் தங்களூரில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பறையனாவது இருப்பதாகப் பெருமைபட்டுக் கொள்ள முடியாத 200 கிராமங்கள் உள்ளன. 272 கிராமங்களில் பள்ளிக்குச் செல்லும் ஒரு பறையன் கூட இல்லை". என்று பிரிட்டிஷ் கலெக்டர் திரமேன்ஹெர் 1891 ல் வருவாய் கழகத்திற்கு எழுதிய கட்டுரை தெரிவிக்கிறது . இந்தச் சூழலில் தலித் தலைவர்களுள் ஒருவரான இரட்டைமலை சீனிவாசன்(1860-1945) அவர்கள், தனது சுயசரிதையில், "தீண்டாதாருக்கு போதிக்க ஜாதி இந்துக்கள் முன் வராமலிருந்துவிட்டார்கள் . தீண்டாதாருக்கு ஜன சமூகத்தில் உபாத்தியாயர்கள் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நோக்க வேண்டியதாக உள்ளது.
.jpg)
தலித்துகள் கல்வி பெறுவதில் ஜாதி இந்துக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் கூட பல்வேறு நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன.குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பல்வேறு வடிவங்களில் சாதி செயல்பட்டு வருவதும் நாம் அறிந்த ஒன்றே."கல்வியாளர்களிடத்தில் நேர்மையும் எளிமையும் இல்லையானால் இது மிருகத்தை விட கொடுமையானது" என்பார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். கர்னல் ஆல்காட் அவர்களின் இறப்புக்கு பின் தியூசொபிகால் சொசைட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்த அன்னிபெசன்ட், தாழ்த்தப்பட்டார் மீது கொண்ட வெறுப்பினை பின்வரும் கூற்றின் வழி அறியலாம். "தாழ்த்தப் பட்ட வகுப்பினரை உடல் தூய்மையில் மற்றவர்களுக்கு இணையான நிலைக்கு நாம் உயர்த்த வேண்டுமே தவிர, சுத்தமானர்வகளை அழுக்கடைந்தவர்களின் நிலைக்கு தாழ்த்தி விடக் கூடாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இவ்விதம் உயர்த்தும் வரை மற்றவர்களோடு நெருங்கி உறவாடுவது விரும்பத்தக்கதல்ல" இதனை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
"திருவள்ளூர் தாலுகாவிலுள்ள 300 கிராமங்களுள் தங்களூரில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பறையனாவது இருப்பதாகப் பெருமைபட்டுக் கொள்ள முடியாத 200 கிராமங்கள் உள்ளன. 272 கிராமங்களில் பள்ளிக்குச் செல்லும் ஒரு பறையன் கூட இல்லை". என்று பிரிட்டிஷ் கலெக்டர் திரமேன்ஹெர் 1891 ல் வருவாய் கழகத்திற்கு எழுதிய கட்டுரை தெரிவிக்கிறது . இந்தச் சூழலில் தலித் தலைவர்களுள் ஒருவரான இரட்டைமலை சீனிவாசன்(1860-1945) அவர்கள், தனது சுயசரிதையில், "தீண்டாதாருக்கு போதிக்க ஜாதி இந்துக்கள் முன் வராமலிருந்துவிட்டார்கள் . தீண்டாதாருக்கு ஜன சமூகத்தில் உபாத்தியாயர்கள் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நோக்க வேண்டியதாக உள்ளது.
No comments:
Post a Comment