Saturday, 16 June 2012

புளிய மரப் பேருந்து

புளிய மரப் பேருந்து 
வாரா வாராம் சுற்றுலாதான்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மூன்றாவது படிக்கும் போதே
டிரைவர் கண்டக்டர் ஆகிவிட்டோம்
போன ஊரே திரும்பவும்
சலித்ததில்லை ஒரு நாளும்


மேல்மா புளிய மரம் நிறுத்தம்
மேல்மா அம்பேத்கர் போர்டு நிறுத்தம்
பேருந்து குலுங்கியபடி செல்லும்
கண்ணம்மா ஆயா புளிய மரத்தில்


மேல்மா முதலியார் வீடு நிறுத்தம்
மேல்மா ஆச்சாரி வீடு நிறுத்தம்
மேல்மா கன்னியப்பன் கவுண்டன் டீ கடை நிறுத்தம்
வேகமாக குலுங்கும் கிளை
மேல்மா கூட்ரோடு வந்ததும் இறங்கி விடுவோம்


திரும்பவும் ஏறுவதற்குள்
கண்ணம்மா ஆயா
'உங்கள அள்ள துள்ள வாரிக்கினு போவ 
வாந்தி பேதி வந்து தூக்கினு போவனு' கழுவி ஊத்த 
நாலா மூலையா ஓடுவோம்,


புளிய மரம் இருந்த இடத்தில் இன்று
கண்ணம்மா ஆயா வீட்டு பாத்ரூம்
பார்த்து வெறிக்க முடிகிறது....

     - கவிஞர். கலை அமரேசன்.



Thursday, 14 June 2012

எழுச்சி


எம் தலைவா
எழுச்சித் தமிழ் மகனே
எழுந்து வரும் சூரியனே
எங்க நெஞ்சி வானத்துல
மொளைச்ச நட்சத்திரமே...

அங்கனுர் மண்ணுல
உதித்த என் ராசா
எங்கள காக்க வந்த
என் சேரி மகராசா
என் முறுக்கு மீசை காராமுன்னேறும் எந்தலைவா
உன் பேச்சு இடி முழக்கம்
பேரலையை வென்றுவிடும்

பார்ப்பனிய மண்ணிலே
பாராளுமன்றத்திலே
டெல்லி கோட்டையிலே
உன் உரைவீச்சு கேட்டுப்புட்டு
கன்னியாக்குமரிக் கடல்
கைத்தட்டி வாழ்த்துதடா....
          
-கவிஞர். கலை அமரேசன்.

வீறுகொண்ட அரிமா



முறுக்கு மீசையுடன்
முறைக்கும் பார்வையுடைய
புலியும் சிறுத்தையும்
உன்னை பார்த்து
பெருமை அடையுமா
பொறாமை கொள்ளுமா
தெரியவில்லை எனக்கு!

புகைபடத்தில் மாத்திரம்
கண்டு இருக்கிறேன்
புரட்சியாளர் அம்பேத்கரை
இப்பூமிக்கு புரியவைத்தாய்
இப்படிதான் இருந்திருபாரென்று
உன்னை கண்டு.


பாதிஉசிரு  போயிருச்சு
சாதிக் கொடுமையில
மீதிஉசிரு  உள்ளவரை
நீதி  கிடைக்கும்வரை
போராடும் சிறுத்தை

உன்னை எண்ணி
மார்தட்டிக் கொள்வதைவிட
உன்னைப்  போல
மீசைதொட்டு முறுக்கிவிடுவதிலேயே
பெருமை கொள்ளும்
எந்தன் கரம்.

பொடைக்குது நரம்பு
உம்பேரைச் சொல்லையிலே
சுண்டுது ரத்தம்
உம்பேச்சைக் கேட்கயிலே
பொங்குது வீரம்
உம்பின்னால் நடக்கையிலே

வீறுகொண்ட அரிமா
நம்ம அண்ணன்
திருமணமுடிக்கா திருமா!
                                      
-N.S.VINODJAGADISH.

தலித் ஆதார மையம்

மதுரை , அரசரடி தலித் ஆதார மையத்தில் 31.5.2012 அன்றுஎடுக்கப்பட்ட
புகைப்படங்கள்




புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 121 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 2012

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக தலித் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள்விழாபுகைபடங்கள்









Wednesday, 13 June 2012

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 121 வது பிறந்த நாள் ஏப்ரல் 14 2012

புது டில்லி அவர் வாழ்ந்த வீட்டில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழக மாணவர்கள்.





நாட்டுப்புறப் பாடல் 1




 ஏரிக்கரை ஓரத்தில இளவட்டமாய் நிற்பவளே 
தேருமேல ஏறி வாரேன் திரவியமே உன்ன பார்க்க.. - அடி 
கண்டால் நானும் இருப்பேன். - உன்னை 
காணாமல் நான் துடிப்பேன்.

அத்தமக ரத்தினமே என் அழகுக்கிளி பெட்டகமே
சித்திரமே உன்னழக செதுக்குகிறேன் எந்தன் நெஞ்சில் 
தாகம் தீர்க்கும் குடமே - நீ 
தாவணிப் பூ மடமே 

வஞ்சியாளே உன் விழியால் வாலிபன் நான் வாடுறண்டி 
நெஞ்சமெல்லாம் நெறஞ்சவளே கெஞ்சிடுறேன் ஏத்துக்கடி 
வாசமுள்ள பூவே - இனி 
நீதான் எந்தன் வாழ்வே.

ஆவாரம் தோட்டத்தில ஆடி வரும் பூமயிலே
தேவாரம் பாடி வந்தேன் தேனே உன்ன பார்க்கும் முன்ன
உலவ நீயும் வாடி - என்
உசுரக் கொஞ்சம் தாடி  

தாகம் தீர்

உனக்கும் எனக்குமான சண்டை 
இன்று நேற்றல்ல 
உன் இயலாமையை நீ 
உணர்ந்த நாளிலிருந்து தொடங்கிற்று .

சமமான  வாழ்வுதான்
வெற்றி எனக்கு மட்டுமானது
தோல்வி உன்னை மரணத்திற்கும் துரத்தியது.
கூட்டினாய் உன் கும்பலை
புரட்டினாய் வரலாற்றை 

மனம், மொழி, மெய் என 
என்னை திடப்படுத்தினேன்
தேடுகிறாய் நீ - உன் 
திருட்டு புத்தியை.
ஒரு மாயை நிலவுகிறது. 
'உன் அநீதிக்கு முன் 
என் நீதி மண்டியிட்டதாய்'.
உளறுகிறது உன் கூட்டம்.

பேனாவும் பிடிப்பேன், 
பீயையும் அள்ளுவேன்
ஆனால் நான் திணிக்க மாட்டேன் 
உன் மீது பீயை.

மண்ணுக்கு முதல்மகன் 
மூத்தகுடி நான்தான் 
வரலாற்றில் உனக்கு 
மரியாதை செலுத்தியே ஆக வேண்டும். 
பெற்றுக்கொள்  விருதை.
'சிறந்த பீ அள்ளி.

வரலாற்றை நான் 
எப்போதும் எழுதப் போவதில்லை 
உன் மகன் இருக்கிறான் 
வக்கிர வரலாற்றை எழுத,

புறப்பட்டுவிட்டான் 
என் மகன் பூர்வகுடி 
கூர்மையான  புத்தியோடும்
கொடூரமான கத்தியோடும்

ஓடிவிடு, ஒளிந்து கொள் 
தொடை நடுங்கினால் 
தேடு! என் பேரன் 
தொல்குடி இருப்பான்
பிடித்துக்கொள் 
உடனே குடித்துவிடு 
திடம் பெறுவாய். 

முன்னேறட்டும் 
உம்மினம் 
மூத்திரம் குடிப்பதில் 
முதலிடமென.

மனம் அர்த்தப்படும்


மனித வாழ்வு என்பது ஆண், பெண் எனும் இரு பெரும் இன உயிரினங்களின் சேர்க்கையும் பிரிவுமாக இருக்கிறது. மனம்  என்பது அன்பு, காதல், கருணை, அழகு, ஆணவம், ஆர்ப்பரிப்பு, இழப்பு, எதிர்ப்பு, வன்மம், வக்கிரம்  என பல நிலைகளில் நம்மை செயல்படுத்த வைக்கிறது. அதே வேளையில் நம்மை பக்குவப்படுத்தவும் பலப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் தன் இருப்பை மனம் வெளிப்படுத்துகிறது. சிந்தனை என்பது கூட இதன் ஊர் அங்கம்தான். பிறப்பெடுக்கும் அனைத்தும் இறப்பை சந்திக்கும். இதுதான் வாழ்க்கையின் நியதி. இறப்பு பல வகைகளில் நிகழும். இதனை நாம் நாம் வசதிக்கேற்ப வகைப்படுத்திக் கொள்ளலாம். நினைவுகளின் நீட்சிக்கு ஏற்ப துர்மரணம், இயல்பான மரணம் என வகைப்படுத்தலாம். 

இந்த வட்டத்திற்குள் நம்முடைய செயல்பாடு என்பதுதான் நம்மை நம் இருப்பை என்றும் உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன. எழுத்துக்களும், பேச்சுக்களும், சில நேரங்களில் பெரும்பாலோரின் செயல்பாடுகளாக இருந்தாலும் அவர்களின் எழுத்தோ, பேச்சோ சில செயல்பாடுகளில் மாற்றம் பெறுகிறபோது நாம் அவரை அவரின் பங்களிப்பை நாம் சந்தேகிக்க செய்கிறோம். எளிமையும், நேர்மையும் என்பது மனித செயல்பாட்டை கடந்த ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில் மனம் சந்திக்கும் நபரை, நபரின் நம்பகத்தன்மையை சோதிக்க உதவுகிறது. பல்வேறு வகைப்பட்ட, பல வகைப்பட்ட மனிதர்களை சந்திக்க கூடியவர்களாக நாம் இருக்கிறோம் உடன்பிறந்தவர், குடும்பம், சுற்றத்தார், உறவினர், அயலார், நண்பர், பகைவர், ஆசிரியர், தலைவர் என நீள்கிறது சந்திப்பு. ஆனால் நம்மில் நிலைப்பதும்  தொடர்வதும் ஒரு சில நட்புக்களே, உறவுகளே, தலைவர்களே, அயலார்களே, பகைவர்களே. 

சந்திப்பின் வலிமை மிக அபூர்வமானது. அது நம்மை வளப்படுத்தவும் செய்யும், பலப்படுத்தவும் செய்யும், சிறுமைபடுத்தவும் செய்யும்.சில நிவாரனமாய், சில ரணமாய் தொடர்கிறது நாம் வாழ்வில். புற உலக வாழ்வு தான் அடிப்படை அக உணர்வு வாழ்வை தீர்மானிப்பவையாக இருக்கிறது. இதில் புலன் உணர்வுகளின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணத்திற்கு சொற்களின் வலிமை. இது அன்பு உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும், நேர் எதிர் கருத்து உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும் ஏற்படுத்துவதை நம்மால் ஊகிக்க முடியும். மனம் ஒன்றுபடுகிறது சிலரை சந்திக்கிறபோது அவர்களோடு உரையாடுகிறபோது அவர்களின் செயல்பாடுகளோடு உறவாடுகிறபோது நம்முள் அக உணர்வு என்பதில் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றம் புற உலக உணர்வில் செயல்படுவதுமாய், புலன் உணர்வில் உறவாடுவதுமாய் வினை புரிகிறது. 

இங்கு பெரும்பாலும் அக உணர்வு வேண்டுவது நம் பாதுகாப்பை அதாவது நம்மீது உள்ள நமக்கான காதல். அதுதான் நம்மீது பிறர் காட்டும் அன்பு, பரிவு, காதல், ஆசை முதலானவற்றை எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அது நம்முள் நமக்கான தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுகிறது. 
எப்போது நான் பலரால் பேசப்படுகிறோனோ, எப்போது நான் பலரின் பாராட்டுகளை பெருகிறோனோ, எப்போது நான் பல நட்புக்களை காதல்களை எதிர்கொள்ள தயாராகிறேனோ அப்போதுதான் தான் நான் வாழ்வில் பெற்றதாக எவன் ஒருவன் எண்ணுகிறானோ அப்போதுதான் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான அர்த்தம் அங்கு உணரப்படுகிறது.

அனுபவ அறிவுக்கேர்ப்பதான் நம்முடைய எழுத்தும், சொல்லும், செயலும் வெளிப்படும். இங்கு நான் கூற விழைவது இளமைக்கால அனுபவங்களும், அடிப்படை உணர்வுகளும், புற உலக வசதிக்கும் என வகைப்படுத்தலாம். இங்கு சுமார் இருபத்தைந்து வயது என்பதை ஓர் வசதிக்காக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மானிடனும் ஏதோ ஒரு குடும்ப கூட்டமைப்பிலிருந்து தான் உருவாகிறான்.இங்கு தாய், தந்தை என்ற ஆண், பெண் உணர்வும் தமையன், தம்பி, அக்கா, தங்கை என உடன்பிறப்பின் வகைமையும் நீள்கிறது. பலருக்கு குடும்ப சூழல் ஒழுங்குற அமைகிறபோது அவர்களின் குடும்பம் தவிர்த்த வெளி வட்டார நட்பின் தொடர்பு ஒரு வகையாகவும், குடும்ப சூழலில் பிணக்கு ஏற்படுகிற போது, அன்பு விரிசல் அடைகிறபோது  அந்த குடும்ப சூழலில் இருந்து வெளிவரும் ஒருவரின் வெளிவட்டார நட்பு என்பது ஒரு வகையாக அமைகிறது. ஆக குடும்பம்தான் ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் ஈட்டித் தருகிறது. 

இந்த சூழலில் குடும்பம் தவிர்த்த வெளி தொடர்புகளான கிராமம், பள்ளி,  பணிபுரியும் இடம், போன்ற சூழல்களில் நமக்கு கிடைக்கிற நட்பு, அன்பு, பரிவு, பாசம் என்பவை புதியதொரு மனிதனை உருவாக்குகிறது. இங்கு குடும்பம் என்பதை அகம் எனவும், கிராமம், பள்ளி, பணிபுரியும் இடம், சமூகம் என்பதை புறம் எனவும் கொண்டு பேச முற்படுவோமானால் அங்கு அகத்தின் நீட்சி புறத்திலும்  , புறத்தின் நீட்சி அகமுமாய் செயல்படுவதை உணர முடியும்.

பள்ளிபருவம் எனபது நாம் சமூகத்தில் ஒருவன் உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் கூடமாக இருக்கிறது. சில சூழல்களில் பள்ளி செல்லாதவர்களுக்கு குடும்பம், சமூகம் ஒழுங்கு படுத்துபவையாக இருக்கிறது. குறிப்பாக, பள்ளி வேளைகளில் சந்திக்கும் நபர்களின் பண்பும், பாசமும் நம்மை பக்குவப்படுத்துகிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் தொடக்கத்தை புரிய வைக்கிறது. இங்கு ஆண், பெண் நட்பின் புனிதம் கூட பெரும்பாலும் இங்குதான் உணரப்படுகிறது. குறிப்பாக ஆண் பெண்ணை கிண்டல், கேலி, கோபம், சிரிப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படுத்த விழைகிறான். அதே சூழலில் பெண்ணும் ஓர் ஆணின் ஏதோ ஒருவித எதிர் செயல்பாட்டை எதிர்பார்ப்பவளாய் இருக்கிறாள். ஆணுக்கு பெண்ணின் நட்பும் பெண்ணுக்கு ஆணின் துணையும் இங்கு அவசியமாகிறது. ஆண், பெண் நட்பு பரிமாற்றத்தில்தான் இந்த உலகம் அமைதியாகவும், அமைதியின்றியும் சுழல்கிறது. இங்கு ஆணும், பெண்ணும் சரிசம உணர்வு, நட்பு பரிமாற்றத்தில் நாட்டம் கொள்ளவே விழைகின்றனர். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓர் ஆணோ, பெண்ணோ எதிர் பால் ஈர்ப்பாளரின் துணையாய், நட்பை, பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதன் நீட்சி சில வேளைகளில் நல்ல குடும்ப அமைப்பையும், சில வேளைகளில் சமசீரற்ற, ஒழுங்கற்ற குடும்ப சூழலையும் உருவாக்குகிறது. ஆண், பெண் ஈர்ப்பு என்பது  இயல்பு என்பது உளவியல் தத்துவம். இங்கு சாதி, மத, இன, மொழி ரீதியில் மக்கள் பிளவுபட்டு இந்த உறவுமுறை, கொள்வதும், கொன்று புதைப்பதும் நிகழ்வதை நம்மால் காண முடிகிறது,ஓர் ஆணின் பெண்ணின் துணையின்றி வாழ்வதும் பெண் ஆணின் துணையின்றி வாழ்வதும் அதன் அர்த்தம் குறிப்பாக நபரின் இருபத்தைந்து வயதுகளில் உணரப்படுவதாக நான் நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேல் படிப்பு, வேலை, திருமண குறித்த சிந்தனைதால் தான் நம்மை வழி நடத்துகிறது. 

படிப்பு, வேலை, வருமானம் என நிகழ்ந்தாலும் கூடவே திருமணம் தன் இருப்பை கேள்வி கேட்ட வண்ணம் மனிதனை துரத்துகிறது. இந்த சூழலில் மனிதன் தன் நிலையை உணரவும், அதிலிருந்து மீளவும் தலைப்பட நினைக்கிறான். இங்கு நான் கூற வருவதன் சாராம்சம் என்பது குறிப்பாக திருமணம், ஆண், பெண் நட்பு என்பதாக அமைகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் நாம் பலவற்றை கடந்து வருகிறோம். இளமைப்பருவத்தில் தான் நம்மில் பலர் திசைமாறி செல்வதை நாம் அவதானிக்கிறோம். எனவே நட்பு என்பது இருபாலரிடத்திலும் இயல்பாக நிகழ வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் உள்ளார்ந்த அன்புகளை உடனிருந்து பரிமாறிக் கொள்ள வேண்டும். அதே வேளையில் சமூகத்தில் ஓர் உயர்ந்த சிந்தனையை போற்றிக் கொண்டும், பேணிக் காத்து கொண்டும் செல்ல வேண்டும். இங்கு தான் சுமுகமான வாழ்வு உள்ளதை அர்த்தப்படும். ஆக மனம்  , ஆண், பெண், நட்பு, காதல் என்பது முழுவதுமாய் தன்னை உணர்கிறபோது மட்டுமே அர்த்தப்படும் என்பதாய் நான் உணர்கிறேன்.  

வேஷம் கட்டுகிறோம் நாங்களும்




'கோவிந்தம் கோவிந்தமே 
எங்கள் கோபாலா ஆண்டவா 
எனை ரட்சியும்' என்று  
கிருஷ்ண பகவானுக்கு விதுரனாய் 
நீ படைத்தாய் விருந்து
இன்று விதுரன் நாங்கலானோம் 
பகவான் நீயானாய் 
படையல் சாவுச் சோறு 

குறத்தி வேடமிட்டு 
கந்தனுக்கு குறி சொன்ன நீ 
குறையாய் விட்டு சென்றாய் எங்களை 
குறிப்பாய் கூட ஏதும் சொல்லாமல்.

பதினெட்டாம் போரில் துரியோதனாய் வந்து 
" பாராளும் திறமையெல்லாம் பாவியானேன்" என்று  
அன்று சொன்ன வார்த்தை 
வேஷம் களைத்த 
உன் வீர வாழ்விலும் உண்மையானதே.

பாஞ்சால வேஷத்தில் வந்து 
பஞ்ச பாண்டவர் அரக்குமாளிகையில் 
மாண்டதாய் கேள்விப்பட்டு 
தன் மகள் துரௌபதியை 
யாருக்கு மணமுடிப்பேன் என 
"என்னா சொல்வேன் எந்தன் மனக்குறை 
என் மந்திரி " என்று  நீ 
அன்று அழுதது 
இன்றும் எங்களை அழ வைக்கிறதே.

நீ எண்ணிய எண்ணங்கள் ஈடேரவில்லையே 
பண்ணிய சபதங்கள் பாழாகப் போச்சுதே 
கடலில் சென்ற கப்பல் கவிழ்ந்தது
கரை தேடி தவிக்குது எங்கள் வாழ்வு.

வேலைக்கு சென்று வீடு திரும்பும் 
உன் மகள்களுக்கும் 
படிக்க சென்று வீடு திரும்பும் 
உன் மகனுக்கும் 
இன்னும் 
சொல்லிக்கொண்டிருக்கிறாள் என் அத்தை 
"அப்பா கூத்துக்கு போயிருக்கார்" என்று.

நீ இருந்த போது 
யார் வீட்டிற்கும் எதற்காகவும் சென்றதில்லை 
மானத்தோடும் வீரத்தோடும் 
மரியாதையோடும் வாழ்ந்தாய் 
வாழ வைத்தாய் 
வழி காட்டிச் செல்லாமலேயே 
பாதியிலேயே மறைந்துவிட்டாய் 
பழிக்கும் பாவத்துக்கும் 
ஆளாக்கிவிட்டாய் 

உன்னைக் கண்டு 
பயந்து நடுங்கி போனவர்களெல்லாம் 
இன்று என் வீடு வந்து 
படைஎடுப்பாரோ 
உன்னிடம் 
உபதேசம் கேட்டவரெல்லாம் 
வீடு வந்து உரைப்பாரோ 
ஊர் மதிக்க வாழ்ந்தாய் நீ 
இன்று 
ஊர் மிதிக்க வாழ்வோமோ நாங்கள் 
புரியவில்லை 
புலம்புகிறோம் உன்னை எண்ணி 

கூத்தில் பலமுறை மாண்டதுண்டு நீ 
அப்போதெல்லாம் அழுததுண்டு நாங்கள் 
உன் கூத்தே மாண்டுவிட்டது 
எங்கள் குலமே அழிந்துவிட்டது 
கோபுரமே சாய்ந்துவிட்டது 
யாரிடத்தில் புரண்டு அழ
புலம்பி அழ.

இப்பொழுது நாங்களும் 
வேஷம் கட்டுகிறோம்  
உன்னை மறந்த நாடகத்தில்

பாசமுள்ள சொந்தங்களுக்கு




உறவின் வலிமை 
உங்கள் பிரிவில் தான் 
அர்த்தப்படுகிறது 

புற உலக சம்பந்தங்களில் 
தொடர்புண்ட சூழலில் 
அக உறவு நிலைகளில் 
அமைதிகாணும் எந்தன் ஆழ்மனம்
இன்று ஏனோ 
நிம்மதியிழக்கிறது
நீள்துயரம் கொள்கிறது

இரத்தபாசம் என்று சொல்வார்கள் 
அப்படி ஏதும் தெரியவில்லை 
உங்களுக்கும் எனக்கும்
ஆனாலும் 
இரத்ததில், சதையில் 
பிரித்துப் பார்க்க முடியாது 
இரண்டுமாய் 
அதாவது இரத்தமும் சதையுமாய் 
இருக்கிறோம் 
என்பதை உறுதிப்படுத்துகிறது
நம்முள் ஏற்பட்ட 
நமக்கான கோபம் 

தவறு என்னிடம்தான் 
அதில் ஏதும் குழப்பமில்லை
வெளிவந்த வார்த்தை 
வலி தரக் கூடியவைதான் 
என்பதை 
வலியோடு உணர வைத்தீர் 

சந்திக்க 
வாய்ப்புகள் அற்ற சூழலிலும்
தொலைபேசி அழைப்புகள் 
நினைக்கும்போது 
முடியாது என்ற போதும்,
எதேச்சையாக பார்க்கிறபோதும் 
அல்லது அதற்கான சூழல் ஏற்படுகிறபோதும்   
முகம் கொடுத்து பேச முடியாத
ஒரு பார்வை கூட 
பார்க்க முடியாத சூழலில் 
உறவின் வலிமை அதன் 
உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது 

இந்த கணத்தில் 
உங்களை எண்ணிப் பார்க்கிறபோது
கண்களின் கடை ஓரங்களில் 
வழிந்தோடும் 
கண்ணீர்த் துளிகளையன்றி 
வேறொன்றும் 
துணையாய்த் தெரிவதில்லை.
--