Wednesday, 13 June 2012

அந்த மழைநாளில்...


இது கார்கால மழைக் காலம்
கண்டிப்பாய் நனைந்தாக வேண்டும்
நாம் நடந்த வீதிகளில்
இன்று மீண்டும் நான் நடக்கத் தொடங்கினேன்
தனிமையில்
நடையின் வேகத்திற்கேற்ப
தூறல் என்னை நனைக்கத் தொடங்கிற்று
துவட்டிக் கொள்ளத் துணிந்தவனாய்
கை வீசி நடக்கிறேன்.
தெருக் கோடி மூலையில் உன் உருவம்
மழைச் சாரலில் மின்னல் வெளிச்சத்தில்
சட்டென மறைந்து போனது
ஒரு வேளை
என் கண்ணிலிருந்து மறைக்கப்பட்டிருக்கலாம்
ஊரார் தூற்றுவது மெல்ல
என் காதில் பெரும் இடி சத்தத்தின் ஊடாக
ஒலிக்கிறது.
நீ என்னுள்
பேயாய் குடி கொள்ளத் தொடங்கி விட்டாய்
ஆடித் தீர்ந்த பின்
நினைவு தட்டி மீண்டெழுகிறேன்
உடல் குளிரில் நடுங்கத் தொடங்கிற்று.
ஓடுகிறது வெள்ளம் தடையற்று.
அடித்துச் செல்கிறது என்னையும்
அணை போட யாருமில்லை.
அழுது தீர்க்கிறேன்
அடை மழையோடும்
ஆனந்தக் கூத்தோடும்
யாருக்கும் தெரியாமல்.

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் - ஆ. தனஞ்செயன்



   தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள  மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள்  , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை  மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது.  இந்நூல்  நாட்டார் வழக்காற்றியலின்  சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன்  அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள்  ஆகும். 

         

        19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற  'Folklore'  என்ற சொல் தமிழ்ச் சூழலில் மக்கள் வரலாறு  , நாட்டுப்புற வரலாறு என்றெல்லாம் அழைக்கப் பட்டு, தற்போது நாட்டார் வழக்காறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வாய்மொழிக் கலை, வாய்மொழி இலக்கியம் என்ற  சொற்களே பொருத்தமானவையாக இருக்கும் என்று பாமன் அவர்கள் கூறுகிறார். தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பாடல்கள், பழமொழி, நிகழ்த்துக் கலைகள் ஆகியவற்றை ஆவணப் படுத்துதல், ஆய்வுக்கு உட்படுத்துதல் என்று செயல்பட்ட நாட்டார் வழக்காற்றியல்  துறை, இன்று   மிகப் பெரிய அறிவியல் துறையாக, சமூகவியல், மானுடவியல், இனவரைவியல் போன்ற உலகியல் சார்ந்த தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும்  இணைந்து தனது எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிவியற் கூறுகளின் விழுமியமாக இந்த  நூலை பார்க்க முடியும். ப்ருன்வாந்து, ஹீர்ச்கொவிட்ஸ், பெட்டெர்மன், அகர், டென்சின், ஹவிலாந்து, ஆபிரகாம் போன்ற இனவரைவியல்(Ethnography) ஆய்வாளர்களோடு இந்நூல் நகர்ந்து செல்கிறது.கவிஞர் பழமலையின் 'சனங்களின் கதை' சமூக யதார்த்தங்களைப் பற்றி எவ்விதமான  ஆரவாரமோ, அலங்காரமோ இல்லாமல், இனவரைவியலின் பலத்தோடு திகழ்கிறது என்றும், தலித்திய எழுத்தார் பாமாவின் கருக்கு, சாதியமைப்பு, தலித் உட்சாதிமோதல், கிறித்துவத்தில்  தீண்டாமை  குறித்து தீவிரமாக பேசுவதால், கருக்கு தலித்துகளின் சுய இனவரைவியல்  என்பதையும்  நுட்பமாக எடுத்து சொல்கிறார். 
       
         'கட்டுமரங்கள்' (கவிதை தொகுப்பு), 'தஞ்சாவூர் மாவட்டக் கடலோர மீனவர்  பாடல்கள்' (முனைவர் பட்ட ஆய்வு), 'குலக் குறியியலும் மீனவர் வழக்காறுகளும்' (ஆய்வு நூல்) என்று கடல், மீன், காற்றோடு உறவாடும் ஆ. தனஞ்செயன், இந்நூலில் மீனவரின் சுறாமுள் வழிபாடு, ஏழு கன்னிமார் வழிபாடு, அம்பாப் பாட்டு  குறித்த விரிவான தரவுகளோடு, மீனவ சமுதாய வாழ்வினை வகைப்படுத்தி இருப்பது அவரின் நுண்மான் நுழை புலத்திற்கு சான்றாக திகழ்கிறது எனலாம்.சமூக விளிம்பில் நாடோடியாக தள்ளப்பட்ட பூவிடையார் (சாதியாக பழமரபு கூறுகிறது), எப்படி பூமாட்டுக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், பெருமாள் மாட்டுக்காரர் ஆனார்கள் என்பதை, மரபுவழிப்பட்ட கதைகளின் வழி ஆராயும் ஆசிரியர், கடந்தகால யதார்த்தம், நிகழ் கால யதார்த்தம் என்ற இரு வேறு தன்மைகளில் அவர்களின் வாழ்க்கை அமைப்பினை வகைமைப் படுத்துகிறார். 
        
        'நிஜ நாடக இயக்கம்' மு. இராமசாமி, 'துளிர்'  ராஜி, 'கூத்துப் பட்டறை' ந.முத்துசாமி, பேராசிரியர்.செ.இராமானுஜம், கே. ஏ. குணசேகரன், முருகேசன், பிரளயன், மங்கை போன்ற நவீன நாடகக் காரர்களின் மத்தியில், வாய் மொழிக் கூறுகள், மொழிசாராத கருத்துப் புலப்படுத்தக்  கூறுகளின்  மரபார்ந்த நிகழ்த்துக் கலைவடிவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை, அவர்களின் நாடகப் பிரதியைக் கொண்டே விவரித்துக் கூறுகிறார். இந்நூல்   மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த, அன்றாட நிகழ்வுகளை, அதனைப் பேசும் இலக்கியங்களை மேலை நாட்டு தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும்  பேசுகிறது. இது நாட்டார் வழக்காற்றியலை, அறிவியல் அணுகுமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த வெற்றி என்ற போதிலும், மறுபுறம் இவ்வணுகுமுறை(சமூகவியல், மானுடவியல், இனவரைவியல்,..),  நாட்டார் மரபுகளையும், அடையாளங்களையும், நாம் நம்மை அறியாமலேயே இழக்க நேரிடுமோ என்ற அச்சமும், இறுதில் கோட்பாடுகள் மட்டுமே எஞ்சி நிற்க  வழி வகுக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. 
          
       ஏனெனில், இன்றைய சூழலில் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூட, பொதுவாக அந்த வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து விலகிய நிலையில் நின்று, அதனை விளங்கி கொள்ள முயல்பவையாகவே இருக்கின்றன. அறிவுத் தளத்தில் நின்று  பற்பல கேள்விகளை எழுப்பி அணுகுவோர்கும், அந்த வழிபாட்டில் பங்கேற்பாளராக இருப்போர்க்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை, நாம்  காண முடியும். இதனை நாட்டார் தெய்வங்கள், 'வைதிக இந்து மதத்திற்குள்' உள்ளிழுக்கப் படுதலில் காணலாம். இந்தப் புரிதலில் இந்நூலை அணுகுதல் என்பது, எட்வர்த் சயித் கூறியது போல, ஆய்வாளரின் கருத்தாக்கம் வேற்றார் பண்பாட்டின் மீது திணிக்க முயல்கிறதோ  என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.

அம்பேத்கரிய அறிஞர் பகவான் தாஸ்

அம்பேத்கரிய அறிஞர் பகவான் தாஸ்


உலகப் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கருடன் வாழ்ந்த மிக முக்கியமான நபர்களில் ஒருவர் பகவான் தாஸ். வாழ்நாள் முழுதும், ஒரு சமூக ஆர்வலனாக, வரலாற்று ஆய்வாளனாக, மானுடவியலனாக, தீவிர அம்பேத்கரியவாதிய, பெளத்த சமயப் பற்றாளனாக வாழ்ந்தவர். சிம்லாவில் இருக்கும் சூடாக் கண்டோன்மென்ட்  பகுதியில் ஏப்ரல் 23,1927 ல் பிறந்தவர்.  தன்னுடைய பதினாறாவது வயதில்(1943), சிம்லாவில்,ஏழு மணி நேரம் காத்திருந்து, பின் அம்பேட்காரைச் சந்தித்தவர். பகவான் தாசிற்கு, ராகுல்தாஸ்  என்ற மகனும், சுரா தராபுரி, சோயா ஹட்கே என்ற இரண்டு மகள்களும்  உள்ளனர். 


பட்டியலின கூட்டமைப்பின் உறுப்பினராகவும், தொழிலாளர் விடுதலை அமைப்புகளிலும் செயல்பட்டார். தன்னுடைய மெட்ரிக்குலேஷன்  படிப்பை  முடித்து, இந்திய விமானப் படையில் ரேடர் கருவி செயல்பாட்டாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். அம்பேத்கரின் இறுதிக் காலங்களில் (1955-56)அவருடைய அலிப்பூர் இல்லத்தில்  கூடவே இருந்து ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார். 



இந்திய மண்ணில், சாதியத்திற்கு எதிரான போர் தொடுத்த அண்ணல் அம்பேத்கரின் பேச்சு, எழுத்துக்களை, மராட்டிய அரசு 1979 ல் , பதிப்பித்து வெளியிடுவதற்கு முன்பே, 1963-1980 களில், 'Thus spoke Ambedkar' என்ற தலைப்பில், நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். .பகவான் தாஸ், 23 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக 'நான் ஒரு துப்புரவுத் தொழிலாளி' என்ற ஹிந்தி நூல், தனிச் சிறப்பும் மிகுந்த வரவேற்பையும் பெற்ற நூல் ஆகும். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை, அறிந்து கொள்வதற்கு, தனஞ்செய்கீர் நூலைத் தவிர நமக்கு போதுமான நூல்கள் இல்லை என்ற வருத்தம், பகவான் தாஸ் நினைவுக் குறிப்புகளின் வழி துடைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு நினைக்கத்தக்கது ஆகும்.பகவான் தாஸ்,  1971 ல் LLB படிப்பை முடித்து, கோர்டில் பயிற்சி பெற்றவர். 1983 ல் ஜெனிவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டமைப்பில், தீண்டாமை குறித்து இவர் ஆற்றிய உரை, அங்கிருந்த சாதிய மனோபாவம் கொண்டவர்களுக்கு நெருடலாக இருந்தது. 



அம்பேத்கருக்கு பிந்தைய தலித் அமைப்புகளின் மீதும், தலித் தலைவர்கள் மீதும்  கொண்ட வேதனையை, ஏப்ரல் 15, 2009 அன்று,  'The Times Of India' என்ற நாளிதழ் கண்ட நேர்காணலில், "தலித் அமைப்புக்கள், அம்பேத்கரை, தலித் மக்களை, வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுதுகின்றனர்.தலித் தலைவர்கள்,தான் சார்ந்த உட்சாதி நலனை மட்டுமே விரும்புகின்றனர். அம்பேத்கரின் கருத்துக்களை அறியாமலே, சாதி ஒழிப்பு என்ற போராட்டக் களம் இன்று  பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளது" என்று பதிவு செய்திருக்கிறார். பகவான் தாஸ், தன்னுடைய கடைசி காலம் வரை, தன்னை நாடி வரும்(டெல்லி முனிர்கா இல்லம்)  சமூக ஆர்வலர்களுக்கு , தலித் அறிஞர்களுக்கு, ஓர் தகவலாளியாக, வரலாற்றாளனாக, மூத்த  அம்பேத்கரியவாதியாக திகழ்ந்தவர். எத்தனையோ இளம் தலைமுறையினரை உருவாக்கியதில் இவருக்கு மிகுந்த பங்கு உண்டு. 



நமக்கும் அம்பேத்கருக்கும் உடனான நேரடி தொடர்பு பகவான் தாஸ் என்ற ஆளுமையின்  மூலம் 18.11.2010அன்று துண்டிக்க்கப்பட்டுள்ளது  என்பது நமக்கெல்லாம் பெரிய  இழப்பு என்ற போதிலும், கூட்டம் கூடுவது, வருடா வருடம் அஞ்சலி செலுத்துவது மட்டும் நாம் கடமையாக இல்லாமல், பகவான் தாஸ் காண விரும்பிய உட்சாதி முரண் கடந்த, அம்பேத்கரை உள்வாங்கிய சாதி ஒழிப்பை முன்னெடுப்பதுதான் பகவான் தாசிற்கு செய்யும் கடமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஊர் மெச்ச வாழனும் சபை மெச்ச ஆடனும்

ஊர் மெச்ச வாழனும் சபை மெச்ச ஆடனும்




      தெருக்கூத்து நிகழ்கலையின் தேர்ந்த கலைஞர் தென்நெற்குணம்  தேவராசு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் தென்நெற்குணம் என்ற ஊரில் 1959 ம்  ஆண்டு பிறந்தவர். வாழ்நாள் தெருக்கூத்து கலைஞராய் வாழ்ந்த அவர் கடந்த செப்டம்பர் 13 ம் தேதி நம்மை விட்டு பிரிந்தார். சுத்துப்பட்டு ஊர்ல பேர் போன கூத்தாடி, படித்தது மூன்றாவது வரை மட்டும் தான், அம்மா ஊமை (பேசமுடியாதவர்), அப்பா வேறு மனைவி கட்டிக்கொண்டு வெளியூர் சென்று வாழ்ந்து இறந்து விட்டார் . இவர் குடும்பத்தின்  (தாய், தந்தை வழி) நான்காவது தலைமுறை கூத்தாடி . இவரின் தாய் மாமன் அர்ச்சுனன் ஊரில் கூத்து வாத்தியார், கூத்தின் மீது ஈடுபாடு கொண்ட தேவராசு , தன்னுடைய 13 வயதில் கூத்து நடக்கும்  இடங்களுக்கெல்லாம் மத்தளம், ஆர்மோனியப் பெட்டி என சுமந்து சென்றார்.  
                 
           கலைகளுக்கு தாய் என மதிக்கப்படும் சரஸ்வதி வேசம்தான் முதன் முதலில் போட்டது. "அந்த சரஸ்வதி என் நாவுல இருக்கா, அவ இருக்கிற வரையில என்னை எவனும் ஒண்ணும் பண்ண முடியாது" என பல நேரங்களில் வீச்சாக பேசியதுண்டு.கூத்து வாத்தியார்களெல்லாம் இவரின் குரல் வளம், நடை, தோற்றம் கண்டு அஞ்சுவர் .ஊர் கோயில் திருவிழா, பாரதக் கூத்து , தனிக்கூத்து , கருமாதிக் கூத்து என தன் வாழ்நாளைக் கழித்தார். இரண்டு ஆண் பிள்ளை, இரண்டு பெண் பிள்ளை , பேர் சொல்ல கூத்தில் இவருக்கு அடுத்த வாரிசு இல்லை. பிள்ளைகளும் பெரிய படிப்பு ஏதும் இல்லை.இளைய மகன் பி.எட்(வேதியியல் ). மற்ற பிள்ளைகள் பத்தாம் வகுபிற்குக் கீழே தான்.  ஊர் மெச்ச வாழ வேண்டும், சபை மெச்ச ஆட வேண்டும்.இதுதான் தேவராஜி அவர்களின் வாழ்வாக இருந்தது.

           தெருகூத்துல ஆடாத வேஷம் இல்லை, தொடாத பவுடர் இல்லை, பாரதம், ராமாயணம், தனிக்கதை, புராணம் என அத்தனையும் அத்துபடி. பெரும்பாலும் கட்டியது பெண் வேசம்தான், கொண்டைக்காரர..., என அன்போடு கூத்தாடிகள், ஊர் மக்கள் என எல்லோரும் அழைப்பர். கர்ண மோட்சத்துல பொன்னுருவி , துகிளுரில திரௌபத, கிருஷ்ணன் பிறப்புல யசோத, இதெல்லாம் பெண் வேஷம், ஆண் வேசமா இருந்தா, பதினெட்டுல துரியோதணன்,விதுரன் விருந்துல கிருஷ்ணன்,  இப்படி இவர் ஆடினால்தான் ஊர் சனங்களுக்கு புடிக்கும்.கூத்து சம்பளம் பட்டுவாடா இல்லாம  இவர் பாடும் திருப்புகழுக்கும், கீர்த்தனைக்கும், விருத்தத்துக்கும் கொண்டாடும் பணம் தனி.
             
        அரக்கு மாளிகையில் பாண்டவரும் சேர்ந்து எரிந்ததாய் கேள்விப்பட்டு , தன் மகள் பாஞ்சாலியை யாருக்கு மணம் முடிப்பது ? என எண்ணி ,
 "என்னா சொல்வேன் எந்தன் மனக்குறை.. என் மந்திரி ....
எண்ணிய எண்ணங்கள் ஈடேரவில்லையே..
பண்ணிய சபதங்கள் பாழாகப் போச்சுதே..."   
என்று அன்று பாஞ்சால மன்னனாய் வந்து அவர் அழுத அழ , இன்று அவர் சொந்த வாழ்வுக்கு சொந்தமாகிவிட்டது. கூத்து தான் வாழ்க்கை. வாழ்க்கை பாதியில் முடிஞ்சதால அவர் குடும்பம் கூத்தாடுது
             
           இவரின் கடைசி பத்தாண்டுகளுக்கு மேலான வாழ்க்கை பாரதகூத்தில் கழிந்தது. பாரதத்தில் தபசு மரம் ஏறியதை தன் வாழ்நாள் பெருமையாக கருதியவர். தனியே கூத்து ஜமா வைத்து நடத்த எண்ணினார். அவரின் குடும்ப சூழல், பொருளாதார சிக்கல், சாதி போன்ற காரணங்களால் நிறைவேறாமல் போனது. பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள், கலைத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள் தன்னை நாடி நேர்காணல் கண்டதையும், புத்தகத்தில் தன் புகைப்படத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு பேரானந்தம் அடைந்தார். புத்தகத்தை பிள்ளைகளிடம் காட்டி "என் திறமைக்கு இருக்கிற மரியாதையை பார். பட்டப்படிப்பு படிக்கல, என் தொழிலில இருக்கிற நேர்மைதான், எல்லாரையும் என்ன தேட வைக்குது" என்பார்.
       
         பதினெட்டு அக்ரோணி சேனையெல்லாம் மாண்டு, கடைசியில் நம்பியிருந்த சகுனி, சல்லியனும் மாண்டு, தான் நிர்கதியாய் நிற்பதை உணர்ந்த துரியோதணன் ," பாராளும் திறமையெல்லாம் பாவியானேன், நான் பஞ்சவர் மேல் விஷம் தொடுத்த விதுரவானேன்," இன்று புலம்பி அழுதான். தென்நெற்குணம் தேவராசு கூத்து வாத்தியாரின் குடும்பம் கண்ணை இழந்த குழந்தையாய், கப்பல் கவிழ்ந்த கடலாய் தத்தளிக்கிறது. இன்றும் அவர் பிள்ளைகள் சொல்லிக் கொள்கிறார்கள்  "அப்பா..கூத்துக்கு போயிருக்குராறு" இதுதான் அவர்களுக்கு இருக்கிற ஒரு ஆறுதலான சொல்

         மிகப்பெரிய தெருக்கூத்துப் பாரம்பரியத்தின் கடைசி வாத்தியாரானர். வாத்தியார்களுக்கெல்லாம் வாத்தியாராய் வாழ்ந்தார். மிகப்பெரிய கலைஞ்சனை இழுந்து நிற்பது அவர் குடும்பம் மட்டுமல்ல, அவர் குரல் கேட்டு கூத்து பார்க்க ஓடி வந்த கூட்டங்களும், எண்ணற்ற கூத்து ஜமாக்களும், தாம்பூலம் வைக்க வரும் நாட்டமைகாரர்களும், இன்னும் அவர் வீட்டில் உள்ள அவர் தொட்ட பவுடரும் , அவர் கட்டிய சலங்கையும், அவர் கைக்குள் அகப்பட்டு போன ஆர்மோனியப் பெட்டி,  தாளம் என சொல்லிக் கொண்டேபோகலாம்