Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts
Showing posts with label புத்தக மதிப்புரை. Show all posts

Saturday, 25 August 2012

அருங்கூத்து - புத்தக மதிப்புரை


நாட்டார் நிகழ்த்துக்கலை என்பது மண்ணோடும் மன சார்ந்த மக்கள் மரபோடும் நெருங்கிய தொடர்புடையது. எந்த ஒரு நிகழ்த்துக்களையும் மக்களுக்கானதாக இருக்கும்போது அதன் செல்வாக்கு, நிகழ்த்துமுறை , வளமை சார்ந்த சடங்குகளின் அடிப்படை பண்பாட்டுக்கூறுகள், சமகால சூழல் என்றும் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவ்வாறு பேசப்படும் சூழலுக்கு நிகழ்கலையும்,நிகழ்த்துக் கலைஞரும் முதன்மைப் பாத்திரங்களாகின்றன.
 தமிழகத்தின் மிகப் பழமையான, தொன்றுதொட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்ற ஒரு கலை தெருக்கூத்து ஆகும்.தமிழகத்தில் மிகப் பரவலாக கரகம், ஒயில், கும்மி, குச்சிப்புடி, கணியான் கூத்து, வள்ளி திருமணம், சங்கரதாஸ்சுவாமிகள் நாடகம் போன்ற நாட்டார் நிகழ்கலைகள் மக்களால் நிகழ்த்தப்பட்டாலும், தெருகூத்திற்கு தனித்த ஓர் அடையாளமும், மதிப்பீடும் இருப்பதை இன்றும் நாம் அறிய முடியும். தமிழ்ச் சூழலில் மூன்று வகையான தெருக்கூத்து மரபுகள் பின்பற்றப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. 1 . தெற்கத்திய பாணி (திண்டிவனம், கடலூர், விழுப்புரம்) 2 . வடகத்திய பாணி (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்) 3 . மேற்க்கத்திய பாணி ( தருமபுரி, சேலம், ஈரோடு). இந்த மூன்று பிரதேசங்களிலும் பாரதம் மட்டுமே முதன்மையாக உள்ளது. குறிப்பாக திரௌபதியம்மனை மையமிட்டு பாரதக்கதைகளின் வழி (நல்லாப்பிள்ளை பாரதம், வில்லிபுத்தூரார் பாரதம்) நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது தவிர்த்து ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா, கெங்கையம்மன் கூழ் வார்த்தல், ஆடிமாத திருவிழா மற்றும் இறப்பு, காரிய சடங்கு நாட்களில் நிகழ்த்தப்பட்டு வரும் மரபு உள்ளது.
 தவசி கருப்புசாமி தொகுத்துள்ள அருங்கூத்து, ' கொங்கு மண்டல நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் பதிவு 'என்பது மேற்கத்திய பாணி மரபின் முக்கியத்துவம், கலை, விழுமியம், பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அதன் இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது. அருங்கூத்துபொதுவாக சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமிட்டு சேகரித்த தெருகூத்து தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.இந்நூலில் லட்சுமி அம்மாள், எலிமேடு மகாலிங்கம், எலிமேடு வடிவேல் போன்ற ஏழு கலைஞர்களிடம் வினா-நிரல் அடிப்படையிலும், கொத்தாபாளையம் குருநாத வாத்தியார், கூத்திசை மேதை செல்லப்பன் போன்ற நான்கு கலைஞர்களின் வாழ்நாள் கலைப்பணியை தன் வரலாற்று வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இடையிடையே அமரர் பெரிய குழந்தை, அமரர் வேங்கிப்பாளையம் முத்து, மனோன்மணி போன்ற இருபத்தி ஏழு கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.
 ஒரு நிகழ்கலையின் வரலாற்றைக் கட்டமைக்கவும், அதில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பிழையைக் களைவதற்கும் கலைஞர்களின் நேர்காணல் அவசியம் என்கிறார் கோ. பழனி (ப.166 . மறைய மறுக்கும் வரலாறு , தொகுப்பு ப. பத்மினி ). இங்கு நாம் கொங்கு மண்டல தெருக்கூத்து கலைஞர்களின் நேர்காணல்களின் வழி, கொங்கு மண்டல வட்டார, இன, மத, மொழி ரீதியிலான கலை வரலாற்றை கட்டமைக்க முடியும். அந்த வகையில் லட்சுமி அம்மாள், ஜெயா செல்லப்பன் போன்ற கலைஞர்களின் நேர்காணல்களின் வழி கொங்கு மண்டல தெருக்கூத்து மரபில் பெண்கள் கூத்து ஜமா வைத்து நடத்தியிருப்பதும், கூத்து வாத்தியாராக இருந்திருப்பதும் நமக்கு மற்ற (வட/தென் ) பகுதி கூத்து மரபிலிருந்து வேறுபட்டிருப்பதை அறிய முடிகிறது.
 கலை உணர்வு என்பது, தான் சார்ந்த சமூகம் சார்ந்தும், மண் சார்ந்தும் எழக் கூடிய உணர்வு ஆகும். கலைகள் பெரும்பாலும் இன்றும் அடித்தட்டு மக்களிடம் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். கலைமாமணி, கலா வித்தகர், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள், கலைகள் சார்ந்தும் (பரதம், திரை..) கலைஞர்கள் சார்ந்தும் (சாதி, தொழில்..) தான் இங்கே கொடுக்கப்பட்டு வருகிறது. தவசி கருப்புசாமி அவர்களின் தொகுப்பு முயற்சி என்பது தெருக்கூத்து வரலாற்றை கட்டமைக்க உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதே வேளையில் கலைஞர்களின் வயது, அனுபவம், சாதி, தொழில் போன்ற குறிப்புகளையும், பின்னைப்பில் கொடுத்துள்ள கூத்து ஜமாக்களின் பட்டியலோடு, முகவரியும், தொடர்பு என்னும் கொடுத்திருந்தால், இளம் தலைமுறையினருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும். கொங்குச் சீமையின் நிகழ்த்து வெளியின் பிதா மகன் அமரர் சடையன் வாத்தியார் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் பற்றிய குறிப்பு நமக்கு நூலில் கிடைக்காதது சற்று வருத்தமே.
 'என்னாடா இவனெல்லாம் வேஷம் போட்டு கூத்தாடும்போது நம்பளால முடியாதா?' என்ற கொம்பாப்பட்டி ராஜி போன்ற கலைஞர்களின் கலை உணர்வும்,மண் உணர்வும் தான் இன்றும் தெருக்கூத்தின் உயிப்புத் தன்மையை கலை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நூலில் அக்கப்போரு பகுதியை படிக்கிறபோது நிச்சயம் நாம் மண்ணின் கலை இதழாக வெளிவரும் "மணல்வீடு" இதழை படிக்கின்ற அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மணல் வீடு கலை இதழும், மணல் வீடு பதிப்பாக வெளிவரும் அருங்கூத்தும்(டிசம்.2010 ) தமிழ் தெருக்கூத்து வரலாற்றில் தன் தடத்தை பதித்துள்ளது என்று துணிந்து சொல்லலாம்.

Wednesday, 13 June 2012

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் - ஆ. தனஞ்செயன்



   தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள  மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள்  , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை  மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது.  இந்நூல்  நாட்டார் வழக்காற்றியலின்  சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன்  அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள்  ஆகும். 

         

        19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற  'Folklore'  என்ற சொல் தமிழ்ச் சூழலில் மக்கள் வரலாறு  , நாட்டுப்புற வரலாறு என்றெல்லாம் அழைக்கப் பட்டு, தற்போது நாட்டார் வழக்காறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வாய்மொழிக் கலை, வாய்மொழி இலக்கியம் என்ற  சொற்களே பொருத்தமானவையாக இருக்கும் என்று பாமன் அவர்கள் கூறுகிறார். தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பாடல்கள், பழமொழி, நிகழ்த்துக் கலைகள் ஆகியவற்றை ஆவணப் படுத்துதல், ஆய்வுக்கு உட்படுத்துதல் என்று செயல்பட்ட நாட்டார் வழக்காற்றியல்  துறை, இன்று   மிகப் பெரிய அறிவியல் துறையாக, சமூகவியல், மானுடவியல், இனவரைவியல் போன்ற உலகியல் சார்ந்த தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும்  இணைந்து தனது எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிவியற் கூறுகளின் விழுமியமாக இந்த  நூலை பார்க்க முடியும். ப்ருன்வாந்து, ஹீர்ச்கொவிட்ஸ், பெட்டெர்மன், அகர், டென்சின், ஹவிலாந்து, ஆபிரகாம் போன்ற இனவரைவியல்(Ethnography) ஆய்வாளர்களோடு இந்நூல் நகர்ந்து செல்கிறது.கவிஞர் பழமலையின் 'சனங்களின் கதை' சமூக யதார்த்தங்களைப் பற்றி எவ்விதமான  ஆரவாரமோ, அலங்காரமோ இல்லாமல், இனவரைவியலின் பலத்தோடு திகழ்கிறது என்றும், தலித்திய எழுத்தார் பாமாவின் கருக்கு, சாதியமைப்பு, தலித் உட்சாதிமோதல், கிறித்துவத்தில்  தீண்டாமை  குறித்து தீவிரமாக பேசுவதால், கருக்கு தலித்துகளின் சுய இனவரைவியல்  என்பதையும்  நுட்பமாக எடுத்து சொல்கிறார். 
       
         'கட்டுமரங்கள்' (கவிதை தொகுப்பு), 'தஞ்சாவூர் மாவட்டக் கடலோர மீனவர்  பாடல்கள்' (முனைவர் பட்ட ஆய்வு), 'குலக் குறியியலும் மீனவர் வழக்காறுகளும்' (ஆய்வு நூல்) என்று கடல், மீன், காற்றோடு உறவாடும் ஆ. தனஞ்செயன், இந்நூலில் மீனவரின் சுறாமுள் வழிபாடு, ஏழு கன்னிமார் வழிபாடு, அம்பாப் பாட்டு  குறித்த விரிவான தரவுகளோடு, மீனவ சமுதாய வாழ்வினை வகைப்படுத்தி இருப்பது அவரின் நுண்மான் நுழை புலத்திற்கு சான்றாக திகழ்கிறது எனலாம்.சமூக விளிம்பில் நாடோடியாக தள்ளப்பட்ட பூவிடையார் (சாதியாக பழமரபு கூறுகிறது), எப்படி பூமாட்டுக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், பெருமாள் மாட்டுக்காரர் ஆனார்கள் என்பதை, மரபுவழிப்பட்ட கதைகளின் வழி ஆராயும் ஆசிரியர், கடந்தகால யதார்த்தம், நிகழ் கால யதார்த்தம் என்ற இரு வேறு தன்மைகளில் அவர்களின் வாழ்க்கை அமைப்பினை வகைமைப் படுத்துகிறார். 
        
        'நிஜ நாடக இயக்கம்' மு. இராமசாமி, 'துளிர்'  ராஜி, 'கூத்துப் பட்டறை' ந.முத்துசாமி, பேராசிரியர்.செ.இராமானுஜம், கே. ஏ. குணசேகரன், முருகேசன், பிரளயன், மங்கை போன்ற நவீன நாடகக் காரர்களின் மத்தியில், வாய் மொழிக் கூறுகள், மொழிசாராத கருத்துப் புலப்படுத்தக்  கூறுகளின்  மரபார்ந்த நிகழ்த்துக் கலைவடிவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை, அவர்களின் நாடகப் பிரதியைக் கொண்டே விவரித்துக் கூறுகிறார். இந்நூல்   மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த, அன்றாட நிகழ்வுகளை, அதனைப் பேசும் இலக்கியங்களை மேலை நாட்டு தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும்  பேசுகிறது. இது நாட்டார் வழக்காற்றியலை, அறிவியல் அணுகுமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த வெற்றி என்ற போதிலும், மறுபுறம் இவ்வணுகுமுறை(சமூகவியல், மானுடவியல், இனவரைவியல்,..),  நாட்டார் மரபுகளையும், அடையாளங்களையும், நாம் நம்மை அறியாமலேயே இழக்க நேரிடுமோ என்ற அச்சமும், இறுதில் கோட்பாடுகள் மட்டுமே எஞ்சி நிற்க  வழி வகுக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. 
          
       ஏனெனில், இன்றைய சூழலில் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூட, பொதுவாக அந்த வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து விலகிய நிலையில் நின்று, அதனை விளங்கி கொள்ள முயல்பவையாகவே இருக்கின்றன. அறிவுத் தளத்தில் நின்று  பற்பல கேள்விகளை எழுப்பி அணுகுவோர்கும், அந்த வழிபாட்டில் பங்கேற்பாளராக இருப்போர்க்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை, நாம்  காண முடியும். இதனை நாட்டார் தெய்வங்கள், 'வைதிக இந்து மதத்திற்குள்' உள்ளிழுக்கப் படுதலில் காணலாம். இந்தப் புரிதலில் இந்நூலை அணுகுதல் என்பது, எட்வர்த் சயித் கூறியது போல, ஆய்வாளரின் கருத்தாக்கம் வேற்றார் பண்பாட்டின் மீது திணிக்க முயல்கிறதோ  என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.

தலித் மக்களும் கல்வியும் -மதிப்புரை


மதுரை எழுத்துப் பதிப்பகம், 'தலித் வரலாற்று நூல் வரிசை' என்ற முறையில் நான்கு நூல்களை அண்மையில்(2009) வெளியிட்டுள்ளது. இதில் 'தலித் மக்களும் கல்வியும்' என்ற மூன்றாவது நூல் தலித்துகளின் வரலாற்றை கட்டமைப்பதில் மிகவும் பிரதான இடத்தை  வகிக்கிறது எனலாம். இந்திய மண்ணில் சாதியை ஆணிவேறாகக் கொண்ட இந்துமதம்,தலித்துகள் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று அடிமைப்படுத்தியும், கல்வி, நிலம் ஆகியவற்றை ஒரு சேரப் பறிப்பதன் மூலம் தலித்துகளின் வாழ்வியலையும், அடுத்த தலைமுறையின் தலைநிமிர்வையும் ஒடுக்கியே வைத்தது. இந்தச் சூழலில்தான் கிறித்தவ மிஷினரிகள், ஆங்கில அரசு, தலித் அமைப்புகள் போன்றவை தலித்துகளின் நலனில் அக்கறை செலுத்தியது. இதன் பின்னணியில் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்(1832-1907) என்ற பெளத்த சமயப் பற்றாளர், 1894, ஜூன் 18 ந் தேதி சென்னை அடையாரில் பஞ்சமர் இலவசப் பள்ளி ஒன்றினை தியோசபிகல் சொசைட்டி (இறையுணர்வு சங்கம்) மூலம் தொடங்கினார். பின் பண்டிதர்  அயோத்திதாசரின்(1845-1914) வேண்டுகோளுக்கு இணங்க, கோடம்பாக்கம்(1898), தேனாம்பேட்டை(1899), மைலாப்பூர்(1901), கிருஷ்ணாம்பேட்டை(1906) ஆகிய இடங்களிலும் இலவசப் பள்ளிகளை நான்காம் வகுப்பு வரை ஏற்படுத்தினார். 
        

பண்டிதர் அயோத்திதாசர்,1898, ஜூன்8 ல் கர்னல் ஆல்காட் அவர்களுக்கு  'தன்னேரில்லாத விண்ணப்பம்' (A Unique petition) என்ற தலைப்பிலான கடிதம் ஒன்றை எழுதினார். . அதில் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாக பறையர்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை  , "நாரதிய புராண சங்கைத்  தெளிவு" என்னும் ஒலைசுவடியின் மூலமும், குரல், ஆத்திசூடி, சிலப்பதிகாரம் , மணிமேகலை, தொல்காப்பியம், நன்னூல், நிகண்டுகள் போன்ற இலக்கிய இலக்கண  நூல்களில் பெளத்த ஞானம் இடம்பெற்று இருப்பதையும் சுட்டிக்காட்டி நிறுவுகிறார். மேலும் கர்னல் ஆல்காட்  அவர்களிடம் பறையர்களின் கல்வி மேம்பாடு, பெளத்த மதமாற்றம் குறித்த உதவிகளையும் முன்வைக்கிறார். இதன் நீட்சியாக கர்னல் ஆல்காட் அவர்கள் பண்டிதர் அயோத்திதாசரையும் , பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி. கிருஷ்ண சாமியையும் (ஜூலை3,1898) இலங்கைக்கு அழைத்து சென்று தலைமைக்குரு  சுமங்களா மூலம் பஞ்சசீலம் ஏற்கச் செய்தார். பஞ்ச சீலத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமர்கள் என்ற பேருண்மையை இந்நூலின் முகப்பு பகுதியும் பின்னிணைப்பும் நமக்கு தெரிவிக்கிறது.           


இந்நூலின் இரண்டாவது பகுதியில், கர்னல் ஆல்காட் 1902, ஜூன் 17ல் எழுதிய 'பறையர் வரலாறு' (The Poor Pariah) என்ற கட்டுரையில், தலித்துகளின் கல்வி, நிலம், வாழ்வு, பூர்வீகம் சார்ந்த  பிரச்சினைகளை முனைவர்.டங்கன், செல்வி.கார், அருள்திரு,எஸ்.மற்றீர், அருள்திரு.கௌடி, திரமேன்கிர் போன்ற அறிஞர்களின் கூற்றின் வழி அறியலாம். மேலும் தலித் குழந்தையின் உளவியல் தன்மைக்கேற்ப கரும்பலகையில் எழுதுதல், எழுதுக்கட்டியால் வரைதல் , களிமண்ணால் உருவங்களைச் செய்ததல், இலைவேலைகள் போன்ற பயிற்சிகள் கொடுத்து, குழந்தைகளின் சிந்தனைத் திறனை மழலையர் வகுப்புகளில் மேம்படுத்தியத்தை  இந்நூலில்    மூன்றாவது பகுதியில், பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் மேலாளராகப் பணிபுரிந்த கோர்ட்ரைட் அவர்கள், ஜூலை, 1906ல் எழுதிய  'பறையரை யாம் எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம்' (How We Teach the Pariah)  என்ற கட்டுரையின் வழி அறியமுடிகிறது. இன்றைய கல்வி முறையின் மாற்றம் குறித்த பரிசீலனைக்கு இக்கட்டுரை அவசியமானதாகவும் உள்ளது.        



"திருவள்ளூர் தாலுகாவிலுள்ள 300 கிராமங்களுள் தங்களூரில் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பறையனாவது இருப்பதாகப் பெருமைபட்டுக் கொள்ள முடியாத 200 கிராமங்கள் உள்ளன. 272 கிராமங்களில் பள்ளிக்குச் செல்லும் ஒரு பறையன் கூட இல்லை". என்று  பிரிட்டிஷ் கலெக்டர் திரமேன்ஹெர் 1891 ல் வருவாய் கழகத்திற்கு எழுதிய கட்டுரை தெரிவிக்கிறது  . இந்தச் சூழலில் தலித் தலைவர்களுள் ஒருவரான இரட்டைமலை சீனிவாசன்(1860-1945) அவர்கள், தனது சுயசரிதையில், "தீண்டாதாருக்கு போதிக்க ஜாதி இந்துக்கள் முன் வராமலிருந்துவிட்டார்கள் . தீண்டாதாருக்கு ஜன சமூகத்தில் உபாத்தியாயர்கள் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நோக்க வேண்டியதாக  உள்ளது.           


தலித்துகள் கல்வி பெறுவதில் ஜாதி இந்துக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் கூட பல்வேறு நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன.குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் பல்வேறு வடிவங்களில் சாதி செயல்பட்டு வருவதும் நாம் அறிந்த ஒன்றே."கல்வியாளர்களிடத்தில் நேர்மையும் எளிமையும் இல்லையானால் இது மிருகத்தை விட கொடுமையானது" என்பார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். கர்னல் ஆல்காட் அவர்களின் இறப்புக்கு பின் தியூசொபிகால் சொசைட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்த அன்னிபெசன்ட், தாழ்த்தப்பட்டார் மீது கொண்ட வெறுப்பினை பின்வரும் கூற்றின் வழி அறியலாம். "தாழ்த்தப் பட்ட வகுப்பினரை உடல் தூய்மையில் மற்றவர்களுக்கு இணையான நிலைக்கு நாம் உயர்த்த வேண்டுமே தவிர, சுத்தமானர்வகளை அழுக்கடைந்தவர்களின் நிலைக்கு தாழ்த்தி விடக் கூடாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை இவ்விதம் உயர்த்தும் வரை மற்றவர்களோடு நெருங்கி உறவாடுவது விரும்பத்தக்கதல்ல" இதனை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள்  பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.        


"பறையர் மத்தியில் கல்வி அதிக அளவில் பரவலாகும்வரை அவர்களது சமூக, பொருளாதார நிலையில் உருப்படியான எந்த முன்னேற்றமும் ஏற்படாது எனபது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. அரசுப்பள்ளிகளும் நிதி உதவி பெரும் பள்ளிகளிலும் கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்பது கொள்கை அளவில் இருக்கிறது" என்று, அரசாங்கச் செயலாளர் மாண்புமிகு, திரு சி.ஏ . கால்டன் அவர்களின் அன்றைய கூற்று (ஆகஸ்ட் 19, 1892) ஒரு நூற்றாண்டு கடந்தும் உயிப்போடு உள்ளதை இந்த நூல் நமக்கு எடுத்துக் கட்டுகிறது. மேலும் அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி, உயர் துறைகள் தலித்துகளுக்கு எட்டாக்கனியாக உள்ளதும். கனவாகவே நீடிப்பதும்தான் நிதர்சனமாக உள்ளது என்பது  இங்கு சிந்திக்கத்தக்கது ஆகும்.           


இந்த வேளையில் கர்னல் ஆல்காட் இலவசப் பஞ்சமர் பள்ளியில், பல்வேறு சுகங்களைத்  துறந்து பணியாற்றிய செல்வி.பால்மர், திருமதி.கோர்ட்ரைட், முனைவர்.இங்கிலீஷ், கர்னல் ஆல்காட் போன்றோரை நினைவு கூர்வதும், போற்றவேண்டியதும் நம் கடமை ஆகும் . "விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நெருக்கடிகளையும் சிக்கல்களையும் புரிந்துகொண்டு தனது சமூகத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது அறிவுஜீவியின் அடிப்படைக்குணம்" என்பார் எட்வர்த் சயீத். அந்த வகையில் வரலாற்றை காலத்திற்கேற்ப தொகுத்தளித்த வே. அலெக்ஸ் மற்றும் உடன் நின்ற அனைவரும் நன்றிக்குரியவர்கள்.