Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Sunday, 7 October 2012

கூத்தாடி பொழப்பு எல்லாம் காத்தாடி படும் பாடு.



 சமீபத்தில் வெளியான 'வெங்காயம்' தமிழ்த் திரைப்படம் பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில்  ' இக்கதைகள் அனைத்தும் உண்மையே: கற்பனை இல்லை' என்று தான் தொடங்குகிறது. இந்தப் படத்தில் இந்து மத சாமியார்களின் வாக்கிற்க்கும், சூழ்ச்சிக்கும், வக்கிர புத்திக்கும்  பலியான சில குடும்பங்களின் கதைகள் சொல்லப்படுகிறது. இதில் சேலம் பகுதியைச் சார்ந்த கணேஷ் என்ற தெருக்கூத்தாடியின் வாழ்க்கை  என்னுடைய மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அதனைப் பற்றியதான பதிவுதான் இந்த கட்டுரை.  கணேஷ்  பேர்போன கூத்தாடி. கூத்துதான் அவரின் குடும்பத்தை  கொண்டு செல்கிறது. கணேஷ் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உண்டு. 





மகன் காய்ச்சலால் அவதிப்பட கணேஷ் அவனை பாண்டிச்சேரி அழைத்துச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் அதற்க்கு தேவையான பண வசதி அற்றவனாக கணேஷ் இருக்கிறான். ஓலை போட்ட குடிசை வீடு. இந்த நிலையில் கணேஷ் தெரிந்தவர், சுற்றம் பக்கத்தினர் என எல்லோரையும் கேட்டு வெறுத்த போன நிலையில் தன்னோடு கூத்தாடும் குழுவினருடன் கடைசியில் முறையிடுகிறான். அவர்கள் கணேசை திட்டி அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு முதலில் என்னை பாத்தித்தது. அதாவது ஒரு கலைஞனின் வலியை, அவனுடைய சூழலை ஒரு சக கலைஞன் தான் அறிய முடிகிறது. அதிலும் கூத்தாடி என்றால் எல்லோருக்கும் இளக்காரம் தான். ' கூத்தாடி பயனுக்கு திமிர பாரு' இப்படி தான் ஊரில் சிறுவர் முதல் பெரியவர் வரை கூற கேட்டிருப்போம். இந்த நிலைதான் அனைத்து கூத்தாடிகளுக்கும். 

கூத்தாடி என்ற சொல் இங்கு  இழிவு என்பதோடு தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை   இருப்பதை உணர முடிகிறது. சங்க காலத்தில் கூத்தர் என்று மரியாதையோடு விளித்துள்ளதை அறிகிறோம். பின்னாளில் அவர்களின் சமூகம், பொருளாதாரம் போன்ற சூழல்களின் அடிப்படையில் இந்த சமூகத்தில் மதிப்பு குறைய ஆரம்பித்தது. இதனை நாம் கூத்தியாள் என்றாள் சொல்லில் இருக்கும் இழிவுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம். மண்ணின் கலைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் கலைஞனின் நிலையை வெங்காயம் படத்தில் காண முடிகிறது. 

கதையில் கணேஷ் அவர்கள் சக கூத்தாடிகள் திரட்டி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்து ஒரு நாள் இரவு தங்கி மறுநாள் மருத்தவரை சந்திப்பதற்க்கு முன், கனேஷின் மகனை நரபலிக்காக சமூக விரோதிகள் சிலர் கடத்தி சென்று அவனை பலி கொடுத்தப் பின் பார்க்க நேர்ந்த தந்தையின் வாழ்க்கை மிகக் கொடூரமானது. அந்த காட்சிகள் அனைத்தும் மிக ஆழமான வலியை தரக் கூடியதாகவே இருக்கிறது.பின் மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய, பணம் வேண்டும் என்று மருத்தவர்கள் கூற, அதனைக் கேட்ட  மகன் தன் தந்தையிடம் "உன்னிடத்தில் தான் பணம் இல்லையே என்று கேட்பதும்,. என்னை சாக விட்டுடாதப்பா" என்ற மகனின் கடைசி வார்த்தையும், பணம் திரட்ட வேண்டி ரோட்டில் கூத்தாடிக் காட்டும் கணேஷின் நிலையும் உச்ச கட்ட வேதனையை அளிக்கிறது. 

இதுதான் கூத்தாடிகளின் நிலையா? கலைஞர்களின் நிலையா? இந்த தேசம் இப்படித்தான் பலரை ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படி வேடிக்கை பார்ப்பது நமக்கும் வாடிக்கை யாகி விட்டது. வெங்காயம் படத்தில் வரும்  கணேஷின் வாழ்க்கை என் மாமாவின் வாழ்க்கையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. இதுதான் என்னை மேலும் வருத்திக் கொண்டிருக்க காரணமாக கூட இருக்கலாம். திண்டிவனம் பக்கத்தில் தென் நெற்குணம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் தேவராஜ். மூன்றாம் வகுப்பு வரை தான் பள்ளிப் படிப்பு. பிறகு மாடு மேய்த்தல். பின் தாய்மாமன் அர்ச்சுனன் (என்னுடைய தந்தை) கூத்து வாத்தியார். இதில் ஈடுபாடு கொண்ட தேவராஜ் கூத்து கற்று பின்னாளில் ஊர் போற்ற மிகப் பெரிய கூத்தாடியாக உருவானார். அவர்க்கு இரண்டு மகள்கள் இரண்டு மகள்கள். ஒருமுறை இளைய மகனின் காது அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தினமும் இரவில் கூத்தாடிவிட்டு பகலில் கண்கள் சிவந்திருக்க வந்து பகல் முழுவதும் அவனுடன் இருந்து பார்த்துக் கொள்வார். 

அந்த நாட்களில் நான் சில நாட்கள் அவனுடன் தங்கியிருந்தேன். அந்த நாட்களில் தினமும் பாரதக் கதைகள், நீதிக் கதைகள் என சொல்லுவார். அந்த வார்டில் இருந்த அத்தனை பெரும் ஆவலுடன் கேட்க ஓடி வருவர். பிறகு நல்ல முறையில் என்னுடைய மாமாவின் மகன் அறுவை சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய   ஓராண்டில் கூத்து முடிந்து வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டு ஒருவாரம் புதுவை ஜிப்மரிலும்., சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்த்து சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அவரின் இழப்பு அவர் சார்ந்த அந்த கூத்துக் கும்பலுக்கும் மட்டுமல்லாது. ஒட்டுமொத்த கூத்துக் கலைக்கே ஏற்பட்ட இழப்பாக மாறியது. கூத்தின் மதிப்பு இவரைப் போன்ற சிலரால் தான் உயிர்ப்பு பெற்றிருந்தது உண்மை. 

இங்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான ' அரிதாரத்த பூசிக் கொள்ள ஆசை ' என்ற பாடலில் வரும் ஒரு வரி எனக்கு வெங்காயம் படத்தில் வரும் கணேஷையும் , என் மாமா தேவராஜையும்   நினைவு படுத்துகிறது.அது தான் இந்த வரி "கூத்தாடி பொழப்பு எல்லாம் அந்த காத்தாடி படும் பாடு". 

இங்கு எனக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. கூத்தாடி பொழப்பு காத்தாடி படும் பாடு. சரி, கூத்தாடியை பாதியிலே இழந்த அவரின் குடும்பம் படும் பாடு ?






Wednesday, 13 June 2012

மனம் அர்த்தப்படும்


மனித வாழ்வு என்பது ஆண், பெண் எனும் இரு பெரும் இன உயிரினங்களின் சேர்க்கையும் பிரிவுமாக இருக்கிறது. மனம்  என்பது அன்பு, காதல், கருணை, அழகு, ஆணவம், ஆர்ப்பரிப்பு, இழப்பு, எதிர்ப்பு, வன்மம், வக்கிரம்  என பல நிலைகளில் நம்மை செயல்படுத்த வைக்கிறது. அதே வேளையில் நம்மை பக்குவப்படுத்தவும் பலப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் தன் இருப்பை மனம் வெளிப்படுத்துகிறது. சிந்தனை என்பது கூட இதன் ஊர் அங்கம்தான். பிறப்பெடுக்கும் அனைத்தும் இறப்பை சந்திக்கும். இதுதான் வாழ்க்கையின் நியதி. இறப்பு பல வகைகளில் நிகழும். இதனை நாம் நாம் வசதிக்கேற்ப வகைப்படுத்திக் கொள்ளலாம். நினைவுகளின் நீட்சிக்கு ஏற்ப துர்மரணம், இயல்பான மரணம் என வகைப்படுத்தலாம். 

இந்த வட்டத்திற்குள் நம்முடைய செயல்பாடு என்பதுதான் நம்மை நம் இருப்பை என்றும் உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன. எழுத்துக்களும், பேச்சுக்களும், சில நேரங்களில் பெரும்பாலோரின் செயல்பாடுகளாக இருந்தாலும் அவர்களின் எழுத்தோ, பேச்சோ சில செயல்பாடுகளில் மாற்றம் பெறுகிறபோது நாம் அவரை அவரின் பங்களிப்பை நாம் சந்தேகிக்க செய்கிறோம். எளிமையும், நேர்மையும் என்பது மனித செயல்பாட்டை கடந்த ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலில் மனம் சந்திக்கும் நபரை, நபரின் நம்பகத்தன்மையை சோதிக்க உதவுகிறது. பல்வேறு வகைப்பட்ட, பல வகைப்பட்ட மனிதர்களை சந்திக்க கூடியவர்களாக நாம் இருக்கிறோம் உடன்பிறந்தவர், குடும்பம், சுற்றத்தார், உறவினர், அயலார், நண்பர், பகைவர், ஆசிரியர், தலைவர் என நீள்கிறது சந்திப்பு. ஆனால் நம்மில் நிலைப்பதும்  தொடர்வதும் ஒரு சில நட்புக்களே, உறவுகளே, தலைவர்களே, அயலார்களே, பகைவர்களே. 

சந்திப்பின் வலிமை மிக அபூர்வமானது. அது நம்மை வளப்படுத்தவும் செய்யும், பலப்படுத்தவும் செய்யும், சிறுமைபடுத்தவும் செய்யும்.சில நிவாரனமாய், சில ரணமாய் தொடர்கிறது நாம் வாழ்வில். புற உலக வாழ்வு தான் அடிப்படை அக உணர்வு வாழ்வை தீர்மானிப்பவையாக இருக்கிறது. இதில் புலன் உணர்வுகளின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உதாரணத்திற்கு சொற்களின் வலிமை. இது அன்பு உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும், நேர் எதிர் கருத்து உள்ளோரிடத்தில் ஒரு விளைவையும் ஏற்படுத்துவதை நம்மால் ஊகிக்க முடியும். மனம் ஒன்றுபடுகிறது சிலரை சந்திக்கிறபோது அவர்களோடு உரையாடுகிறபோது அவர்களின் செயல்பாடுகளோடு உறவாடுகிறபோது நம்முள் அக உணர்வு என்பதில் ஒரு வித மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றம் புற உலக உணர்வில் செயல்படுவதுமாய், புலன் உணர்வில் உறவாடுவதுமாய் வினை புரிகிறது. 

இங்கு பெரும்பாலும் அக உணர்வு வேண்டுவது நம் பாதுகாப்பை அதாவது நம்மீது உள்ள நமக்கான காதல். அதுதான் நம்மீது பிறர் காட்டும் அன்பு, பரிவு, காதல், ஆசை முதலானவற்றை எதிர்பார்க்கிறது. அது கிடைக்காத போது அது நம்முள் நமக்கான தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுகிறது. 
எப்போது நான் பலரால் பேசப்படுகிறோனோ, எப்போது நான் பலரின் பாராட்டுகளை பெருகிறோனோ, எப்போது நான் பல நட்புக்களை காதல்களை எதிர்கொள்ள தயாராகிறேனோ அப்போதுதான் தான் நான் வாழ்வில் பெற்றதாக எவன் ஒருவன் எண்ணுகிறானோ அப்போதுதான் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான அர்த்தம் அங்கு உணரப்படுகிறது.

அனுபவ அறிவுக்கேர்ப்பதான் நம்முடைய எழுத்தும், சொல்லும், செயலும் வெளிப்படும். இங்கு நான் கூற விழைவது இளமைக்கால அனுபவங்களும், அடிப்படை உணர்வுகளும், புற உலக வசதிக்கும் என வகைப்படுத்தலாம். இங்கு சுமார் இருபத்தைந்து வயது என்பதை ஓர் வசதிக்காக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மானிடனும் ஏதோ ஒரு குடும்ப கூட்டமைப்பிலிருந்து தான் உருவாகிறான்.இங்கு தாய், தந்தை என்ற ஆண், பெண் உணர்வும் தமையன், தம்பி, அக்கா, தங்கை என உடன்பிறப்பின் வகைமையும் நீள்கிறது. பலருக்கு குடும்ப சூழல் ஒழுங்குற அமைகிறபோது அவர்களின் குடும்பம் தவிர்த்த வெளி வட்டார நட்பின் தொடர்பு ஒரு வகையாகவும், குடும்ப சூழலில் பிணக்கு ஏற்படுகிற போது, அன்பு விரிசல் அடைகிறபோது  அந்த குடும்ப சூழலில் இருந்து வெளிவரும் ஒருவரின் வெளிவட்டார நட்பு என்பது ஒரு வகையாக அமைகிறது. ஆக குடும்பம்தான் ஒருவரின் பெருமையையும் சிறுமையையும் ஈட்டித் தருகிறது. 

இந்த சூழலில் குடும்பம் தவிர்த்த வெளி தொடர்புகளான கிராமம், பள்ளி,  பணிபுரியும் இடம், போன்ற சூழல்களில் நமக்கு கிடைக்கிற நட்பு, அன்பு, பரிவு, பாசம் என்பவை புதியதொரு மனிதனை உருவாக்குகிறது. இங்கு குடும்பம் என்பதை அகம் எனவும், கிராமம், பள்ளி, பணிபுரியும் இடம், சமூகம் என்பதை புறம் எனவும் கொண்டு பேச முற்படுவோமானால் அங்கு அகத்தின் நீட்சி புறத்திலும்  , புறத்தின் நீட்சி அகமுமாய் செயல்படுவதை உணர முடியும்.

பள்ளிபருவம் எனபது நாம் சமூகத்தில் ஒருவன் உணர்வுகளை ஒழுங்குபடுத்தும் கூடமாக இருக்கிறது. சில சூழல்களில் பள்ளி செல்லாதவர்களுக்கு குடும்பம், சமூகம் ஒழுங்கு படுத்துபவையாக இருக்கிறது. குறிப்பாக, பள்ளி வேளைகளில் சந்திக்கும் நபர்களின் பண்பும், பாசமும் நம்மை பக்குவப்படுத்துகிறது. சிந்திக்க வைக்கிறது. வாழ்வின் தொடக்கத்தை புரிய வைக்கிறது. இங்கு ஆண், பெண் நட்பின் புனிதம் கூட பெரும்பாலும் இங்குதான் உணரப்படுகிறது. குறிப்பாக ஆண் பெண்ணை கிண்டல், கேலி, கோபம், சிரிப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படுத்த விழைகிறான். அதே சூழலில் பெண்ணும் ஓர் ஆணின் ஏதோ ஒருவித எதிர் செயல்பாட்டை எதிர்பார்ப்பவளாய் இருக்கிறாள். ஆணுக்கு பெண்ணின் நட்பும் பெண்ணுக்கு ஆணின் துணையும் இங்கு அவசியமாகிறது. ஆண், பெண் நட்பு பரிமாற்றத்தில்தான் இந்த உலகம் அமைதியாகவும், அமைதியின்றியும் சுழல்கிறது. இங்கு ஆணும், பெண்ணும் சரிசம உணர்வு, நட்பு பரிமாற்றத்தில் நாட்டம் கொள்ளவே விழைகின்றனர். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஓர் ஆணோ, பெண்ணோ எதிர் பால் ஈர்ப்பாளரின் துணையாய், நட்பை, பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதன் நீட்சி சில வேளைகளில் நல்ல குடும்ப அமைப்பையும், சில வேளைகளில் சமசீரற்ற, ஒழுங்கற்ற குடும்ப சூழலையும் உருவாக்குகிறது. ஆண், பெண் ஈர்ப்பு என்பது  இயல்பு என்பது உளவியல் தத்துவம். இங்கு சாதி, மத, இன, மொழி ரீதியில் மக்கள் பிளவுபட்டு இந்த உறவுமுறை, கொள்வதும், கொன்று புதைப்பதும் நிகழ்வதை நம்மால் காண முடிகிறது,ஓர் ஆணின் பெண்ணின் துணையின்றி வாழ்வதும் பெண் ஆணின் துணையின்றி வாழ்வதும் அதன் அர்த்தம் குறிப்பாக நபரின் இருபத்தைந்து வயதுகளில் உணரப்படுவதாக நான் நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு மேல் படிப்பு, வேலை, திருமண குறித்த சிந்தனைதால் தான் நம்மை வழி நடத்துகிறது. 

படிப்பு, வேலை, வருமானம் என நிகழ்ந்தாலும் கூடவே திருமணம் தன் இருப்பை கேள்வி கேட்ட வண்ணம் மனிதனை துரத்துகிறது. இந்த சூழலில் மனிதன் தன் நிலையை உணரவும், அதிலிருந்து மீளவும் தலைப்பட நினைக்கிறான். இங்கு நான் கூற வருவதன் சாராம்சம் என்பது குறிப்பாக திருமணம், ஆண், பெண் நட்பு என்பதாக அமைகிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால் நாம் பலவற்றை கடந்து வருகிறோம். இளமைப்பருவத்தில் தான் நம்மில் பலர் திசைமாறி செல்வதை நாம் அவதானிக்கிறோம். எனவே நட்பு என்பது இருபாலரிடத்திலும் இயல்பாக நிகழ வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் உள்ளார்ந்த அன்புகளை உடனிருந்து பரிமாறிக் கொள்ள வேண்டும். அதே வேளையில் சமூகத்தில் ஓர் உயர்ந்த சிந்தனையை போற்றிக் கொண்டும், பேணிக் காத்து கொண்டும் செல்ல வேண்டும். இங்கு தான் சுமுகமான வாழ்வு உள்ளதை அர்த்தப்படும். ஆக மனம்  , ஆண், பெண், நட்பு, காதல் என்பது முழுவதுமாய் தன்னை உணர்கிறபோது மட்டுமே அர்த்தப்படும் என்பதாய் நான் உணர்கிறேன்.  

நாட்டார் வழக்காற்றியலில் குல தெய்வ வழிபாடு ஓர் அறிமுகம்.









"நாட்டார் வழக்காறு கடந்த காலத்தின் எதிரொலி மட்டுமல்ல.     
இது நிகழ்காலத்தின் உரத்த குரலும் ஆகும்." 
-ருஷ்ய நாட்டு நாட்டார் வழக்காற்றியலாளர் சொக்கலோ.   
   
மனித குல வரலாற்றில், மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சிந்தினைகள், பண்பாடு ஆகியவற்றோடு மிகுந்த தொடர்புடையது நாட்டார் வழக்காறுகள் ஆகும். இது  வாய்மொழிக்கதைகள்,  தொழிற் பாடல்கள், காதல் பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி,  பழமொழிகள், விடுகதைகள், நிகழ்த்துக்கலைகள், என்றவாறு மக்களிடமிருந்து வெளிபடுகிறது. இவை  குறித்த  ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. நாட்டார் வழக்காறுகளில், இன்று (இன்றைய தலைமுறையினர்) நாம் இழந்தது பல என்றபோதிலும், நம்முள், எந்தவொரு சூழலிலும் நம்முடைய பழமரபு சார்ந்த சிற்சில நம்பிக்கைகள், சடங்குகள் செயல்படுவதை நம்மால் உணரமுடியும். அது நாம் சார்ந்துள்ள இருப்பிடம், சாதி, பால், மதம்,மொழி சார்ந்து ஒருவித தொன்மத் தன்மையுடன் வெளிப்படும். இதனை நாம் குலக்குறி (Vote Mistic ) என்று கூறலாம். 


இந்தக் குலக்குறி, தொன்மக்கதை, கதைப்பாடல் , நிகழ்த்துதல், உருவம், வழிபாட்டுச் சடங்கு முறைகள், பழக்கவழக்கங்கள், அழகியல் சார்ந்த வெளிபாடுகளாக அடையாளம்   கொள்கிறது. இத்தன்மை குல தெய்வ வழிபாடாக நீட்சி கொள்கிறது. குலக் குறியின் தோற்றம் குறித்து ஆண்ட்ரூஸ் வாங்க், பிரேசர், வில்கெம் ஸ்மித், ரெட்கிளப் பிரென் போன்ற மேலை நாட்டார் ஆரர்ய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த தெய்வ வழிபாட்டு  முறை அதாவது நாட்டார் வழிபாடு என்பது பண்பாடு மரபு சார்ந்த, அதிகாரப்பூர்வமற்ற, நிறுவனமயமாக்கப்படாத தன்மையில் உள்ளது. நாட்டார் வழக்காறுகள் குறித்தும், குல தெய்வ வழிபாடு குறித்தும், தே. லூர்து, நா. வானமாமலை, ஆ. சிவசுப்பிரமணியன், அ. கா. பெருமாள், பி.எல். சாமி, டி, தருமராஜன், இ. முத்தையா போன்றோர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  



மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையை மேற்கொள்ளும்போது , இயற்கையின் பல்வேறு ஆற்றல்களையும், அதீத தன்மைகளையும் கண்டு அஞ்சியும், அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் இயற்கையைச் சக்திகளான, நிலம், நீர், காற்று, ஆகாயம், இடி, மழை, மின்னல், சூரியன், சந்திரன் போன்றவற்றை  வழிபடலானான். இதனை, 

"ஞாயிறு, திங்கள், தீச்டர் " (தொல். பொருள். நூற்பா, 85 )     

 "ஞாயிறு போற்றுதும்..., திங்களைப் போற்றுதும்...., மாமழைப் போற்றுதும்....,"(சிலம்பு. கடவுள் வாழ்த்து 1 :1 :7 )

என்ற பாடல்களின் வழி அறிய முடிகிறது. 

இதன் நீட்சி விலங்கு, செடி, சடப் பொருள்களையும் வணங்கச் செய்தது.இந்த நம்பிக்கைகள் தான், ஆற்றங்கரை  ஓரங்களில் குடியமர்த்தல், பயிரிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடவும் தூண்டியது. இந் நம்பிக்கையுடையவர்கள் குலக்குரியுடைய மக்கள் (Vote MiStic  People )  என்று மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தில் மிகப் பரவலாக குலக்குறி வழிபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழங்குடிகளான புலையர், வளியர், குன்னுவர், தோடர் முதலியவர்களிடத்திலும் பள்ளர், பறையர், நாயக்கர், கவுண்டர் இனத்தவரிடதிலும் குலக்குறி வழிபாட்டின் எச்சங்கள் காணப்படுகிறது என்று டாக்டர் தே. ஞானசேகரன் கூறுகிறார்.     




இனக்குழு சமுதாயத்தில் தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகை சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணை தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். இதன் நீட்சியாக  நாம்  தமிழ்ச்சூழலில் அம்மன் வழிபாட்டைக் கூறலாம். குல தெய்வ வழிபாட்டில் ரேணுகாம்பாள்,  மாரியம்மாள், பூங்காவனத்தாள், பாளையக்காரி , மகமாயி, பச்சையம்மாள், அங்காளம்மன், கெங்கையம்மன், பொன்னியம்மன், எல்லையம்மன் என பல தெய்வங்களைக் கூற முடியும். இங்கு வீட்டு தெய்வம், குல தெய்வம், கிராம தேவதை அல்லது ஊர்க் காக்கும் தெய்வம் என்றவாறு  மூன்று  பிரிவுகளில் வகைபடுத்தி வணங்குகின்றனர். அதே போல ஆண் தெய்வங்களான ஐயனார், காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை  ஊருக்கு வெளியே வைத்து காவல் காக்கும் தெய்வமாக வணங்குகின்றனர்.



குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டும் வணங்கி வந்தனர். பழங்கதை ஒன்றில் ஒன்பது அக்கா தங்கைகள் இறந்த பின் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் கிராம தேவதைகளாக இருந்து ஊரைக் காக்கின்றனர். அவர்கள் செல்லி, வில்லி, வைணவி, பூஞ்சோலை, துர்க்கை, புரையாறு, இருச்சம்மா, பொன்னி, கங்கை. என்பதாகும். இந்த தொன்மக் கதைகளின் வழி அம்மன் வழிபாட்டில் சாதி, சாதியக்கிளை, உறவுமுறை, குலம் ஆகியவற்றை மிக எளிதில் இனங்காணமுடியும். 



குறிப்பிட்ட சாதி முறையினருக்கும், அவர்கள் வணங்கும் குல தெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தங்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வானாலும் காது குத்தல், குல தெய்வ பொங்கல் வைத்தல், இறந்தவர்களை வர்ணித்தல் மற்றும் பூவாடை வர்ணிப்பு போன்றவற்றை நடத்தி உயிர்ப்புத் தன்மையை மீட்ருவாக்கம் செய்கின்றனர். குறிப்பாக, புதிய வீடு கட்டுபவர்கள்  குடி புகுமுன்னும், வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் போன்ற நிகழ்வுகளில்  இதனை காணலாம். மேலும் இந்த நிகழ்வுகளில்  உயிர்பலி கொடுத்தல், சாமியாட்டம் ஆடுதல் போன்றவற்றைக் காணலாம். " நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவை கொலையில் உதித்த தெய்வங்கள். குறிப்பிட்ட தெய்வம் கொலையுண்ட முறைக்கும் அதற்கு உயிர்பலி கொடுக்கும் முறைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு " என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். இந்தச் சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் வாழ்வியலின்  அடிநாதமாக இருப்பதை உணர முடிகிறது. 



அதே வேளையில், இன்றைய குல தெய்வ வழிபாடு குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல், குறியியல் போன்ற கோட்பாடுகளின் வழி நின்று நாட்டார் வழக்காற்றியலை  விளக்குவதை காண்கிறோம். இதன் முடிந்த முடிபில் சில சூழலில், நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது (திரௌபதியம்மன், ரேணுகாம்பாள்) வைதிக இந்து சமயத்திற்குள் இழுக்கப்படுதலைக்  காணலாம். மேலும் இது போன்ற (இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல்,) ஆய்வுகளால்  நாட்டார் வழக்காறுகள் என்பது அதிகாரம் சார்ந்து, நிறுவனம் சார்ந்து அடையாளப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது. இந்த வகையில் நாட்டார் குல தெய்வ வழிபாடு என்பது மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், ஓர் அமைப்பு முறை, சாதி, சாதியக்கிளை சார்ந்து திகழ்கிறது என துணிந்து கூறலாம்.