Saturday, 25 August 2012

அருங்கூத்து - புத்தக மதிப்புரை


நாட்டார் நிகழ்த்துக்கலை என்பது மண்ணோடும் மன சார்ந்த மக்கள் மரபோடும் நெருங்கிய தொடர்புடையது. எந்த ஒரு நிகழ்த்துக்களையும் மக்களுக்கானதாக இருக்கும்போது அதன் செல்வாக்கு, நிகழ்த்துமுறை , வளமை சார்ந்த சடங்குகளின் அடிப்படை பண்பாட்டுக்கூறுகள், சமகால சூழல் என்றும் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவ்வாறு பேசப்படும் சூழலுக்கு நிகழ்கலையும்,நிகழ்த்துக் கலைஞரும் முதன்மைப் பாத்திரங்களாகின்றன.
 தமிழகத்தின் மிகப் பழமையான, தொன்றுதொட்டு நிகழ்த்தப்பட்டு வருகின்ற ஒரு கலை தெருக்கூத்து ஆகும்.தமிழகத்தில் மிகப் பரவலாக கரகம், ஒயில், கும்மி, குச்சிப்புடி, கணியான் கூத்து, வள்ளி திருமணம், சங்கரதாஸ்சுவாமிகள் நாடகம் போன்ற நாட்டார் நிகழ்கலைகள் மக்களால் நிகழ்த்தப்பட்டாலும், தெருகூத்திற்கு தனித்த ஓர் அடையாளமும், மதிப்பீடும் இருப்பதை இன்றும் நாம் அறிய முடியும். தமிழ்ச் சூழலில் மூன்று வகையான தெருக்கூத்து மரபுகள் பின்பற்றப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. 1 . தெற்கத்திய பாணி (திண்டிவனம், கடலூர், விழுப்புரம்) 2 . வடகத்திய பாணி (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்) 3 . மேற்க்கத்திய பாணி ( தருமபுரி, சேலம், ஈரோடு). இந்த மூன்று பிரதேசங்களிலும் பாரதம் மட்டுமே முதன்மையாக உள்ளது. குறிப்பாக திரௌபதியம்மனை மையமிட்டு பாரதக்கதைகளின் வழி (நல்லாப்பிள்ளை பாரதம், வில்லிபுத்தூரார் பாரதம்) நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது தவிர்த்து ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா, கெங்கையம்மன் கூழ் வார்த்தல், ஆடிமாத திருவிழா மற்றும் இறப்பு, காரிய சடங்கு நாட்களில் நிகழ்த்தப்பட்டு வரும் மரபு உள்ளது.
 தவசி கருப்புசாமி தொகுத்துள்ள அருங்கூத்து, ' கொங்கு மண்டல நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் பதிவு 'என்பது மேற்கத்திய பாணி மரபின் முக்கியத்துவம், கலை, விழுமியம், பண்பாடு குறித்த பல்வேறு சிந்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், அதன் இருப்பை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளது. அருங்கூத்துபொதுவாக சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமிட்டு சேகரித்த தெருகூத்து தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.இந்நூலில் லட்சுமி அம்மாள், எலிமேடு மகாலிங்கம், எலிமேடு வடிவேல் போன்ற ஏழு கலைஞர்களிடம் வினா-நிரல் அடிப்படையிலும், கொத்தாபாளையம் குருநாத வாத்தியார், கூத்திசை மேதை செல்லப்பன் போன்ற நான்கு கலைஞர்களின் வாழ்நாள் கலைப்பணியை தன் வரலாற்று வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இடையிடையே அமரர் பெரிய குழந்தை, அமரர் வேங்கிப்பாளையம் முத்து, மனோன்மணி போன்ற இருபத்தி ஏழு கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.
 ஒரு நிகழ்கலையின் வரலாற்றைக் கட்டமைக்கவும், அதில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பிழையைக் களைவதற்கும் கலைஞர்களின் நேர்காணல் அவசியம் என்கிறார் கோ. பழனி (ப.166 . மறைய மறுக்கும் வரலாறு , தொகுப்பு ப. பத்மினி ). இங்கு நாம் கொங்கு மண்டல தெருக்கூத்து கலைஞர்களின் நேர்காணல்களின் வழி, கொங்கு மண்டல வட்டார, இன, மத, மொழி ரீதியிலான கலை வரலாற்றை கட்டமைக்க முடியும். அந்த வகையில் லட்சுமி அம்மாள், ஜெயா செல்லப்பன் போன்ற கலைஞர்களின் நேர்காணல்களின் வழி கொங்கு மண்டல தெருக்கூத்து மரபில் பெண்கள் கூத்து ஜமா வைத்து நடத்தியிருப்பதும், கூத்து வாத்தியாராக இருந்திருப்பதும் நமக்கு மற்ற (வட/தென் ) பகுதி கூத்து மரபிலிருந்து வேறுபட்டிருப்பதை அறிய முடிகிறது.
 கலை உணர்வு என்பது, தான் சார்ந்த சமூகம் சார்ந்தும், மண் சார்ந்தும் எழக் கூடிய உணர்வு ஆகும். கலைகள் பெரும்பாலும் இன்றும் அடித்தட்டு மக்களிடம் வாழ்ந்து வருவதை நாம் அறிவோம். கலைமாமணி, கலா வித்தகர், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள், கலைகள் சார்ந்தும் (பரதம், திரை..) கலைஞர்கள் சார்ந்தும் (சாதி, தொழில்..) தான் இங்கே கொடுக்கப்பட்டு வருகிறது. தவசி கருப்புசாமி அவர்களின் தொகுப்பு முயற்சி என்பது தெருக்கூத்து வரலாற்றை கட்டமைக்க உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதே வேளையில் கலைஞர்களின் வயது, அனுபவம், சாதி, தொழில் போன்ற குறிப்புகளையும், பின்னைப்பில் கொடுத்துள்ள கூத்து ஜமாக்களின் பட்டியலோடு, முகவரியும், தொடர்பு என்னும் கொடுத்திருந்தால், இளம் தலைமுறையினருக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும். கொங்குச் சீமையின் நிகழ்த்து வெளியின் பிதா மகன் அமரர் சடையன் வாத்தியார் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் பற்றிய குறிப்பு நமக்கு நூலில் கிடைக்காதது சற்று வருத்தமே.
 'என்னாடா இவனெல்லாம் வேஷம் போட்டு கூத்தாடும்போது நம்பளால முடியாதா?' என்ற கொம்பாப்பட்டி ராஜி போன்ற கலைஞர்களின் கலை உணர்வும்,மண் உணர்வும் தான் இன்றும் தெருக்கூத்தின் உயிப்புத் தன்மையை கலை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்நூலில் அக்கப்போரு பகுதியை படிக்கிறபோது நிச்சயம் நாம் மண்ணின் கலை இதழாக வெளிவரும் "மணல்வீடு" இதழை படிக்கின்ற அனுபவத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மணல் வீடு கலை இதழும், மணல் வீடு பதிப்பாக வெளிவரும் அருங்கூத்தும்(டிசம்.2010 ) தமிழ் தெருக்கூத்து வரலாற்றில் தன் தடத்தை பதித்துள்ளது என்று துணிந்து சொல்லலாம்.

Wednesday, 22 August 2012

எழுச்சித் தமிழர் பொன்விழா புது தில்லியில் 21.8.2012 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. தில்லி சாக்கியா சொசைட்டி மற்றும் தில்லி தமிழ் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஏராளமான தமிழ் மக்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்  வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 










22.8.2012 புதன் அன்று புது தில்லியில் எழுச்சித் தமிழர் அண்ணன் 
தொல். திருமாவளவளவன் வீட்டில் எடுத்துக் கொண்ட படம்



Monday, 13 August 2012

எனது மேசையின் மீது புத்தகம்

மேசை மீது வைக்கப்பட்ட புத்தகம்
இன்னும் திறக்கப்படாமலே இருக்கிறது.
எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன
புதிய புத்தகங்கள் வர போக இருக்கின்றன
அதற்குத் துணையாக இதழ்களும் .


அடுக்கி வைக்கப்படும் சூழலில் மட்டும்
மனம் அடுக்கிக் கொள்கிறது
படிக்க வேண்டியதை,
எழுத வேண்டியதை
கட்டாயத்தின் பேரில் திருப்பப்படும்
புத்தகங்களின் குறிப்புகள் மட்டும் எழுதப்படுகிறது
வேறொன்றும் செய்ய முடியவில்லை

புத்தகங்கள் என்னைப் பார்த்து 
ஏளனமாய் சிரிப்பதை உணர்கிறேன்.
வாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது
இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும் என்று.
கைப் பேசியும் மடிக்கணினியும் 
கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்னை.

தீவிர வாசிப்பு
தீவிரமாய் குறைந்து போனது என்னில்.
விமர்சனங்களைப் படித்து 
விமர்சனம் பேசுபவனாய் இருக்கிறேன்.
நவீனம் சுறுசுறுப்பா? சோம்பலா?
விவாதங்கள் தேவையில்லை.
இருந்தும் 
செயல்படுவேன் என்ற நம்பிக்கையில் இன்றும்

Thursday, 9 August 2012

என்னை அறிதல்

உன்னை அடையாளம் 
காட்டமுடியவில்லை என்னால் 
உன் வெற்றிடத்தையும் 
நிரப்ப முடியவில்லை என்னால் 

நீ இருக்கிறாய் என்பதை மட்டும் 
உணர முடிகிறது 
தேடி அலைகிறேன் 
இந்த பிரபஞ்சம் முழுவதும் 
நினைவின் நீட்சி எல்லை தாண்டி செல்கிறது 
நீ இருந்தததற்கான 
அத்தனை தடயங்களையும் 
தூசு தட்டி பார்க்கிறேன். 

என் தனிமையை 
உன்னைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறேன் 
வனாந்தர உலகை காண்கிறேன். 
மூளை முழுக்க போதை 
காட்டாற்று வெள்ளம் போல் எண்ணங்களின் சீற்றம் 
ஓட்டம் கொள்ளத் துடிக்கிறேன் ஊர் ஊராய்
நீ என்னிலிருந்து வெளியேறும் வரை.

Wednesday, 8 August 2012

நகரத்து வாசல்


கண்முன்னே மாலை இருட்டிக் கொண்டிருக்கிறது
அசையாமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளை, மஞ்சள், சிகப்பு என

விளக்குகள் தெரிய ஆரம்பித்தன
சாலையில் வாகனங்களின் இரைச்சல்
காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
வீட்டிற்கு செல்வதில்
அனைவரும் மும்புரமாகி இருந்தனர்.

குருவிகள் அவைகளுக்குள் கொஞ்சியபடியே

பறந்து கொண்டிருக்கின்றன
வாயிற்படியில் அமர்ந்திருக்கிறேன்
என்னை நோக்கி கையசைக்கும்
ரெட்டைஜடை பின்னலிட்ட பெண்ணொருத்தி
தேநீர் கொண்டுவந்து குடிக்கச்சொல்லி
வற்புறுத்தும் என் மனைவி
விளையாடச் சென்ற பிள்ளைகளின்
வரவை எதிர்பார்த்தபடி நான்

உறக்கம் கண்களை தழுவத் தொடங்கிற்று.

செயலற்றவனாய் ரசித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வின் அத்தனை ரகசியங்களையும்.