- புன்னகை பூத்த முகமே! எங்கே சென்றாய்....(முதலாமாண்டு நினைவுக் குறிப்பு அக்டோபர் 7, 2023)இப்படி ஒரு நினைவுக் குறிப்பை எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. மிஷபின் நினைவுகள் மிகவும் ஆழமானது. அன்பு நிறைந்தது. மலர்ந்த மலரைப் போன்றது. மிஷபுடன் பழகிய யாராக இருந்தாலும் அவரின் குழந்தைச் சிரிப்பை மறக்க முடியாது. முதல் சந்திப்பிலேயே அனைவரின் உள்ளத்திலும் பதியும் படி அவரின் வரவேற்பு இருக்கும்.2011 ஆம் ஆண்டு புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் சபர்மதி விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் அவர்களுக்கு விடுதி கிடைக்க ஆறுமாதம் ஆகும் என்பதால் அது வரை அவர் என்னுடன் தங்கியிருந்தார். டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன். அப்போது என் அறையில் தங்கியிருந்த அஸ்லாம் அவர்களைப் பார்ப்பதற்காக மிஷப் மற்றும் முஹஸின் Muhammed Muhassin என் அறைக்கு வந்தனர். அதுதான் எனக்கும் மிஷப்பிற்கும் முதல் அறிமுகம். நான் தமிழ்நாட்தைச் சார்ந்தவன் என்பதால் அவருக்கு மகிழ்ச்சி. அவர் என்னுடன் அண்ணா என்று உரையாடினார். அதே விடுதியில் என்னுடைய நண்பர் ரஹீம் அவர்களும் தங்கியிருந்தார்.நான் , ரஹீம் மற்றும் அஸ்லாம் ஆகிய மூவர் சபர்மதி விடுதியில் இருப்பதால் மிஷப் அடிக்கடி எங்கள் விடுதிக்கு வந்து எங்களுடன் சேர்ந்து உரையாடுவது, பாட்டு பாடுவது என எங்கள் நட்பு தொடர்ந்தது. பிறகு அவருக்கும் சபர்மதி விடுதியே கிடைத்தது. சில மாதங்கள் மட்டும் அங்கு இருந்தார்.பல்கலைக்கழகத்தில் எல்லா மாநிலத்து மாணவர்களும் படித்தாலும் எனக்கு மலையாள மாப்பிள்ளா நண்பர்கள் மீது நட்பு நெருக்கமானது. காரணம் அவர்களின் அன்பும் அரவணைப்பும் அரசியலும் என்னை மிகவும் கவர்ந்தது. நான் நாட்டுப்புற பாடல்கள் பாடுவது வழக்கம். அதில் ஈடுபாடு கொண்ட மிஷப் அடிக்கடி மாலை வேளைகளில் பாடச்சொல்லி கேட்பார். கைகளைத் தட்டிக் கொண்டே கூடவே பாடிக்கொண்டு வருவார். மிகவும் ரசிப்பார்.தமிழ் மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் தமிழ் மாலை என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம், நிகழ்ச்சி முடிந்தப் பின் இரவு உணவு மற்றும் பாட்டு, ஆட்டம் என இருக்கும். 2013 என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு விழா முடிந்ததும் நாங்கள் தமிழ் மற்றும் மலையாளம் பாடல்களைப் பாடிக்கொண்டு ஆடினோம். அந்த வீடியோவைப் பார்க்கும் போதெல்லாம் மிஷப் அவர்களின் புன்சிரிப்பு பூத்த அதில் பளிச்சென தெரியும்.2016 ஆம் ஆண்டு அவர் மகாநதி விடுதியில் இருந்தபோது பிரம்மபுத்திரா விடுதிக்கு நான் செல்லும் போது அவரை அடிக்கடி பார்ப்பேன். அவரின் துணைவியாரை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பிரம்மபுத்திரா பேருந்து நிறுத்தத்தில் தான் அவரை இறுதியாகப் பார்த்தது என்று நினைக்கிறேன்.இந்திய சமூகக் கட்டமைப்பில் மத ரீதியாக முஸ்லீம்களும் சாதி ரீதியாக தலித்துகளும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித்துகளும் முஸ்லீம்களும் ஒன்று சேர்ந்து போராடுவது கட்டாயம். அந்த வகையில் மிஷப் அரசியல் தெளிவுள்ள நபராக இருந்தார். பல்கலைக் கழகத்தில் நடந்த பல போராட்டங்களில் பங்கு கொண்டார். தலித் மானவர்களோடு நல்ல நட்பை மேற்கொண்டார். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் மட்டுமல்ல தலித் என்பதாலும் என் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார்.நிறைந்த அரசியல் தெளிவும் கருத்தியல் வலிமையும் இருந்தால் தான் ஒருவரால் எல்லோரிடமும் எல்லா சூழலிலும் சமநிலை மனதோடு உரையாட முடியும். அதற்கு சிறந்த சான்றாக மிஷப் வாழ்ந்தார்.ஜெயபால் அண்ணா.. எப்படி இருக்கு? என்று பார்க்கும் போதெல்லாம் விசாரிப்பார். அந்தக் குரல் இன்னும் அவரை நினைக்கும் போது என் காதில் ஒலிக்கிறது. அவரால் மகிழ்வுற்றோர் யாவரும் அவரையும் அவரின் புன்னகை பூத்த முகத்தையும் என்றும் மறக்கவே முடியாது. எங்கள் இறுதி மூச்சு உள்ளவரை அவரின் நினைவுகள் எங்களுடன் இருக்கும். அத்தகைய தாக்கத்தை எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டுச் சென்ற மிஷப் புகழ் நீடித்து நிலைக்கும். Jai Mishab
No comments:
Post a Comment