Tuesday, 22 October 2024

 தமிழ்கூறு நல்லுலகின் போதி மரம் : நிலா தம்மா


வீ. கவிதா & அ. ஜெயபால்

 

ஜெய்பீம்!



புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!


 


மனித குலத்தை வழிநடத்தத் தோன்றிய ததாகதர் புத்தர் தம் வாழ்நாளில் 45 ஆண்டுகள் நாடு, நகரம், காடு, கழனி என நடந்து உயர்ந்த அறமாம் தம்மத்தைப் போதித்து வந்தார். தம்மத்தைப் போதிக்க சங்கம் இன்றியமையாதது என்பதை உணர்ந்த புத்தர், பிக்கு பிக்குணிகளைக் கொண்ட சங்கத்தைக் கட்டமைத்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் கற்பித்த உண்மைகளின் உண்மையை அறிந்த பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், நவீன இந்தியாவில் நவயான பௌத்ததை நிறுவினார். அவரின் வழிகாட்டுதலில் இந்திய பௌத்தர்கள், பௌத்தமே பரிபூரண அம்பேத்கரியம் என்று உணர்ந்து சங்கம் அமைத்து மக்களிடத்தில் இருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கி அறிவு எனும் ஞான ஒளியை ஏற்றி வருகின்றனர்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகிற்குச் சமத்துவத்தைக் கற்பித்த தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் உள்ள புத்தகயா அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் ஆகும். அங்குள்ள போதிமரம் நிலாதம்மா பௌத்த சங்கம் ஆகும். நாட்டைக் காக்க வீட்டைப் பிரிந்த புத்தர் வாழ்வின் தத்துவத்தை அறிய எங்கெங்கோ அலைந்து கடும் தவம் புரிந்து இறுதியில் பீகாரில் உள்ள புத்தகயா வந்தடைந்து போதி மரத்தடியில் அமர்ந்து தவம் புரிந்தபோது பேரறிவு எனும் ஞான ஒளியைப் பெற்றார் என்பது வரலாறு. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாய் சென்னை அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்தப் பணியாற்றும் 'நிலாதம்மா' சங்கம் உள்ளது என்பது நாங்கள் அறிந்த உண்மை.

புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற வீ. கவிதா மற்றும் அ. ஜெயபால் ஆகிய இருவரும் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சென்னையில் தங்கி கல்லூரியில் பணி தேடிக் கொண்டிருந்த காலம். செப்டம்பர் 11 மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்துவதற்காக நாங்கள் இருவரும் சென்னை அடையாற்றில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் சென்றோம். அங்குதான் முதன்முதலில் நிலாதம்மாக் குழுவினரோடு முதல் சந்திப்பு. அன்பால் வரவேற்று எங்களுக்கு எந்த வகையில் அவர்கள் உதவிட முடியும் என்ற வினாவோடு உரையாடல் தொடர்ந்தது. அப்போதைக்குக் கல்லூரியில் சேர்ந்து பணியாற்ற உதவி என்றபோது, துடிப்புள்ள இளைஞர் ஜான் ஆக்னல், 'எங்கள் மாமா முனைவர் மோகன்ராஜ் அவர்களிடம் பேசுங்கள்' என்றார். பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நிலா தம்மாக் குழுவினரோடு அங்கு கூடுவோம். உபாசகர்களான அக்காக்கள் அனுசுயா, அனுராதா மற்றும் அண்ணன் மாரியப்பன் ஆகியோரின் பேரன்பு வாழ்வின் மீதான நம்பிக்கையை எங்களுக்குள் வளர்த்தெடுத்தது. இப்படி தொடர்ந்த உறவு சில மாதங்களில் எங்கள் திருமணத்தைப் பௌத்த முறைப் படி நடத்துவதற்கான அடிப்படைப் புரிதலையும் அதைச் சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து வழிமுறைகளையும் எடுத்துக் கூறியது.

சனாதன சிந்தனைகளும் பண்பாட்டுப் பொருண்மைகளும் பெருகிப் போன இந்த சமூகத்தில் ஆகம முறையிலான திருமணத்தைப் புறக்கணிக்கிறோம் என்பதை சொல்வதற்கே துணிவைப் பெற வேண்டிய சூழலில், பௌத்த திருமணத்தின் பெருமைகளை எங்கள் பெற்றோரிடம் பேசி, நாங்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி தருகிறோம் என்று ஒப்புதலை நிலா தம்மாக் குழுவினர் பெற்றுத் தந்தார்கள்.


2017 ஜீன் நான்காம் தேதி திட்டமிட்டபடி திண்டிவனத்தில், எங்கள் திருமணம் நிலாதம்மாக் குழுவினரின் தலைமையில் பௌத்தபிக்கு வணக்கத்திற்குரிய தம்மசீலர், மற்றும் உபாசகர் வாலாஜா சம்பத் அவர்களின் வழிகாட்டுதலோடு எங்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. எங்கள் திருமணத்தில் பங்கு கொண்ட பெரும்பான்மையோர் குறிப்பாக 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்குப் பௌத்தத் திருமணம் முற்றிலும் புதிதாகவும் ஏற்புடையதாகவும் இருந்ததை அன்று எங்களிடம் கூறியபோது அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது.


அதேவேளையில் திருமணத்தின் போது உபாசகர் அண்ணன் மாரியப்பன், பாபாசாகேப் அம்பேத்கர் நாக்பூர் தீட்சாபூமியில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளைக் கூற அதனை நாங்கள் வழிமொழிய, இந்துத்துவத்தைப் போற்றும் எங்கள் உறவினர் சிலருக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது என்பதையும் பகிர்ந்தனர். அது அவர்களின் சமூகம் பற்றிய புரிதலை வெளிப்படுத்தியது. அவர்களுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தோம். பின் அமைதியடைந்தனர். அதுமட்டுமல்லாது எங்களின் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் பின்பற்றும் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் அவர்களுக்குப் பௌத்த வாழ்வியலின் மீதான புரிதலை மேம்படுத்தியது. எங்களின் மீதான நம்பிக்கையையும் அதிகரித்தது.


எங்கள் திருமணத்திற்குப் பின் எங்கள் நண்பர்கள் சிலர் விழுப்புரம் பகுதியில் தங்கள் வீட்டு புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமண விழா என பௌத்த முறைப்படித் தொடர்ந்தனர். எங்கள் வீட்டில் எங்கள் தம்பியின் திருமணம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு பௌத்த முறைப்படி பெண் வீட்டார் ஒப்புதலுடன் நடைபெற்றது. தமிழகத்தில் பல பகுதிகளில் இத்தகைய நல்ல மாற்றங்கள் பல தொடந்து வருகிறது. இதற்கெல்லாம் அடிப்படை சென்னை அடையாறு அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இயங்கிவரும் நிலாதம்மா பௌத்த அமைப்பு என்பதைத் துணிவுடன் சொல்லுவதில் பெருமை அடைகிறோம்.


அறிந்த ஒன்றை செயல்படுத்துவதில் தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது. செயல்படுத்திட நல்ல ஆசிரியரும் அவரின் அமைப்பும் தேவையாய் இருக்கிறது. சமூக அமைதியை நிலைநாட்டிடும் மகத்தானப் பணியில் ஈடுபட்டு வரும் நிலாதம்மா பௌத்த அமைப்பு பேரொளியைப் பரப்பும் போதி மரமாய் விளங்குகிறது என்பது நமக்கெல்லாம் பெரும் பேறு.

 

சாது! சாது! சாது!

 

Tuesday, 15 October 2024

 

தீபக் பாண்டியன் என்னும் தீப்பிழம்பு

-       ஜெயபால் சோலை

 


உழவுத் தொழிலால்

ஊருக்கே சோறுபோடும்

உழைப்பின் அடையாளமாம்

தேவேந்திர குலத்தின் தீரனே!

 

மக்களின் குரலுக்கு

மனம் கொடுத்து

மண்ணையும் மானத்தையும் காக்க வந்த

மாவீரன் இம்மானுவேல் சேகரனாரின்

மறு உருவமே!

மள்ளரின மாணிக்கமே!

 

ஒடுக்குமுறைகளுக்கு எதிராய்

உரிமைக்குரல் கொடுத்த

பசுபதி பாண்டியனாரின் இதயத் துடிப்பே!

 

ஏரும் போரும் எம் குலத்தொழில்

எம் இனத்தில் சிறு புல்லும் கூட

போருக்குப் புறப்படும் எனும் வைர வரிகளுக்கு

விளக்காய்த் திகழ்ந்த – எங்கள்

விடிவெள்ளியே!

 

உம் பேச்சில் எத்தனை துடிப்பு

உம் நடையில் எத்தனை தோரணை

உம் சிரிப்பில் எத்தனை ஈர்ப்பு

உம் தோற்றத்தில் எத்தனை ஆர்ப்பரிப்பு

உம் சிந்தனையில் எத்தனை விடுதலைத் தாகம்

அடடா!...

 

உம்மைக் கண்டு அஞ்சிய கயவர்கள்

நேருக்கு நேர் மோத முடியாத கோழைகள்

நினைத்திருக்கலாம்

உம்மை வீழ்த்திவிட்டோம் என்று.

ஆனால் நீயோ,

தீபக் பாண்டியன் என்னும் தீப்பிழம்பாய்

இலட்சக்கணக்கான இளைஞர்களின்

இதயத்தில் குடிகொண்டு விட்டாய்.

 

விடுதலைத் தாகம் கொண்ட சமூகத்தை

வழிநடத்தும் - அனைத்து

வல்லமையும் கொண்ட

தலைவனே!

 

நீ!

டாக்டர் அம்பேத்கர் வழியில்

ஒடுக்கப்பட்டோரின்  விடுதலைக்கு

அரசியல் அதிகாரம் அவசியம் என்றாய்

மக்களோடு மக்களாய் களத்தில் நின்றாய்

புரட்சிகரக் கருத்துக்களை

எளியோருக்கும் புரிய விதைத்தாய்

தன்னைப் பின்பற்றும் யாவருக்கும்

மது, போதை கூடாது எனக் கட்டளையிட்டாய்

ஆனால்,

பொய்யைப் பரப்பிச் சுகம் காணும் கூட்டத்திற்கும்

சாதி நஞ்சை உண்ணும் ஊடகங்களுக்கும்

நீ  ரௌடியாய்த் தெரிகிறாய்.  

ஆம், அநீதியை எதிர்த்து ஒருவன்

நெஞ்சை நிமிர்த்தினால் – அவனை

எதிர்கொள்ள முடியா ஆதிக்கச் சமூகம்

அப்படித்தான் அடையாளப்படுத்தும்..

 

அடக்குமுறைகள் கண்டு அஞ்சாத மாவீரனே!

சூரியனை யாரும் கைகளைக் கொண்டு

மறைத்துவிட முடியாது என்பதற்கு

உம் இறுதி ஊர்வலமே சாட்சி.

பல்லாயிரக்கணக்கானோர் உம் உடலைச் சூழ

லட்சக்கணக்கானோர் இணைய நேரலைகளில்  சேர

எம் சகோதரிகள்

களப்போராளி தீபக் பாண்டியனுக்கு வீரவணக்கம்

என்று இடியாய் முழங்க....

நீ!

எங்கள் இல்லங்களில் தீபமானாய்

எங்கள் குலத்தின் ராஜாவானாய்

 

பாண்டியனாய் வாழ்ந்த ராஜாவே!

பத்தாம் வகுப்போடு

பள்ளிப் படிப்பை நிறுத்தும்

நம் பிள்ளைகளைப் பார்த்து

கஷ்டமா இருக்கு! என்று

நீ வேதனைப்பட்டதை

இப்போது நினைத்தாலும்

கனத்துப் போகிறது  எங்கள் இதயம்.

 

வாகைகுளம் தந்த வள்ளலே!

வாஞ்சையோடு நேசிக்கும் வாலிபத் தகப்பனே!

உம் வருகையும்

நீ ஊட்டிய விடுதலை உணர்வும்

வரலாற்றின் பக்கங்களில்

நிலைத்தத் தடங்களாய்

நீடு வாழும்.

 

சமத்துவம்

சகோதரத்துவம்

சுதந்திரம் மலரும் வரை

இந்த மண்ணில்

உம் குரல் ஒலிக்கும்.  

உம் புகழ் நிலைக்கும்.

  

வாழ்க நீ எம்மான்!