புதுதில்லியிலுள்ள
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவில் 2010 –
2016 ஆம் கல்வியாண்டுகளில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முனைவர் பட்டமும் மேற்கொண்ட
காலத்தில் எனக்கு மூன்றாவது நெறியாளராக இருந்து எம்மை வழி நடத்தியவர் பேராசிரியர்
எச். பாலசுப்பிரமணியம் அவர்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப்
பிரிவில் தமிழ் மற்றும் பிற இந்திய அல்லது உலக மொழிகளுடனான ஒப்பீட்டு ஆய்வுகள்
பெரும்பாலும் மேற்கொள்ளப்பெற்று
வருகின்றன. ஒவ்வொரு ஆய்வு மாணவரும் தமிழ் அல்லாத ஏதேனும் ஒரு பிற இந்திய அல்லது
உலக மொழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், நான் இந்திய மொழிகளில் பெரும்பான்மை
மக்களால் பேசப்படுகின்ற இந்தி மொழியைத் தேர்ந்தெடுத்தேன்.
‘தமிழ் இந்தி தலித் தன்வரலாற்று நூல்கள் ஓர் ஒப்பாய்வு: வடு –
ஜூட்டன் ஒரு சிறப்புப் பார்வை’ என்னும் தலைப்பில் ஆய்வியல்
நிறைஞர் பட்ட ஆய்வை மேற்கொண்டேன். பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் எழுதிய வடு என்ற தன்வரலாற்று நூலையும் (தமிழ்)
ஓம் பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூட்டன் என்ற தன்வரலாற்று நூலையும் (இந்தி) ஒப்பிட்டு அந்த ஆய்வு அமைந்தது. ஆய்வேட்டின் ஒரு இயலாக மொழிபெயர்ப்புச்
சிக்கல்கள் என்னும் பகுதி அமைய வேண்டும் என்றும்
பின்னிணைப்பில் சொல்லடைவு கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கி.
நாச்சிமுத்து மற்றும் என் நெறியாளர் முனைவர் நா. சந்திரசேகரன் ஆகியோர் கூறியிருந்தனர். சொல்லடைவில் இந்தி சொல்,
தமிழ் ஒலிபெயர்ப்பு, இலக்கணக் குறிப்பு, தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை இடம்
பெற வேண்டும். அப்போது மத்திய இந்தி இயக்ககம் நடத்தும் சான்றிதழ் படிப்பில் (Certificate course Hindi)
சேர்ந்திருந்தேன்.
தொடக்க நிலைப் படிப்பு என்பதால் இந்தி மொழி இலக்கண அமைப்பை
என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் பேராசிரியர் எச்.
பாலசுப்பிரமணியம் அவர்களைத் தொடர்பு கொண்டு ‘இந்தி மொழிபெயர்ப்புக்காக
உங்களின் உதவி தேவை ஐயா. வீட்டிற்கு வருகிறேன்’ என்றேன்.
உடனே அவர், ‘நாளை நான் பல்கலைக்கழகம்
வருகிறேன். அங்கேயே சந்திப்போம். அலைய வேண்டாம்’ என்றார். மறுநாள் எனக்கு தேவையான பகுதிக்குரிய இலக்கணக்
குறிப்பை மட்டும் சொல்லாமல் இந்தி மொழியின் அடிப்படை இலக்கணத்தைக் (பெயர்ச்சொல், வினைச்சொல், வேற்றுமை உருபுகள்) கற்றுக்
கொடுத்தார். அது எனக்கு பின்னாட்களில் நான் படித்த பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்பிற்குப் (Advance Diploma in Hindi) பேருதவியாய்
அமைந்தது.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு ஜீலை
2012 இல் தொடங்கியது. ஆய்வுத்தலைப்பு ‘தமிழ் – இந்தி இலக்கியங்களில் கர்ணன் கதை – ஓர் ஆய்வு’ ஆகும். இதில் தமிழில் வெளிவந்த கர்ணன் குறித்த ஐந்து இலக்கியங்களையும்
இந்தியில் வெளிவந்த கர்ணன் குறித்த ஐந்து இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆய்வு
மேற்கொள்ளப்பெற்றது. இந்தியில் ராம்தாரி சிங் தினகரின் ரஷ்மீரதி (கவிதை), சேட் கோவிந்ததாஸின் கர்ணன் (நாடகம்), ஜெகதீஷ்
சதுர்வேதியின் சூர்யபுத்ர (கவிதை) பாஷனின் கர்ணபாரம் ( இந்தி
வடிவ நாடகம்) மற்றும் ஹெச். கன்ஹைலாலின் கர்ணன் (இந்தி வடிவ நாடகம்) ஆகிய ஐந்து
நூல்களை ஆய்வுக்கு முதன்மை ஆதார நூல்களாக எடுத்துக் கொண்டேன். இதில் சேட் கோவிந்த தாசின்
கர்ணன் நாடகமும் ஜெகதீஷ் சதுர்வேதியின் சூர்யபுத்ர கவிதையும் பழைய இந்தி மொழி
நடையில் எழுதப்பட்டவை. அதனைப் படித்து பொருள் புரிந்து கொள்ள மிகக் கடினமாக
இருந்தது.
என்னுடைய இணை நெறியாளர் பேராசிரியர் ராம் சந்திரா என்னுடைய ஆய்வேடு தொடர்புடைய இந்தி இலக்கியப் பகுதிகளை விளக்கிய
போதிலும் முதன்மை ஆதார நூல்களை நன்கு
அறிந்து கொள்ள பேரா. எச். பாலசுப்பிரமணியம் அவர்களே பெரிதும் பங்காற்றினார்.
அந்த சூழலில் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. யாரையும் எதற்காகவும்
தேவையின்றி அலையவைப்பதை ஒருபோதும் விரும்பாத அவர் முடிந்தவரை எங்கு சந்திக்கிற
வாய்ப்பு உள்ளதோ அங்கேயே இருக்கும் இடத்தில் அமர்ந்து கிடைக்கும் நேரத்திக்குள்
எவ்வளவு கற்றுத்தர முடியுமோ அவ்வளவு கற்றுத் தருவார். வாய்ப்பு இல்லாதபோது
வீட்டிற்கு வரச்சொல்லுவார். அப்படி செல்லும் போது மதிய உணவை அவரே சமைத்துப்
பரிமாறுவார். உணவு கொடுத்து கல்வியை ஊட்டும் அவரின் தாய்மைப் பண்பு எத்தகையது
என்பதை எழுத்தில் எளிதாக சொல்லி விட முடியாது.

2015 மார்ச் மாதம் தமிழ்ப்புலத்தில்
திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ‘திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்புகள் ஓர்
ஆய்வு (ரவீந்திரகுமார் சேட் , எச். பாலசுப்பிரமணியம்
மொழிபெயர்ப்பை முன்வைத்து)’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினேன்.
அப்போது எனக்கு ஏற்பட்ட ஐயங்களைத்
தொலைபேசியில் உடனுக்குடன் தீர்த்து வைத்தார். அக்கட்டுரையில் இந்தியில் வெளிவந்த
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களுள் ரவீந்திரகுமார் சேட் மற்றும் எச்.
பாலசுப்பிரமணியம் ஆகியோரின் மொழிபெயர்ப்பு நூல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த
நூலாகத் திகழ்கிறது என்பதை விளக்கியுள்ளேன். இக்கருத்தரங்கம் முடிந்த அடுத்த மாதம்
(ஏப்ரல் 2015) பாரதியும் சமகால ஆளுமைகளும் என்னும் தலைப்பில் அடுத்த தேசியக்
கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ‘பாரதி, ராம்தாரிசிங் தினகர் படைப்புகளில் பாரதம்’ என்னும்
தலைப்பில் கட்டுரை எழுதினேன். கருத்தரங்கில் கட்டுரையை வாசித்தப்பின் நான்
இருக்கையில் அமர்ந்தபோது, பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம்
என்னருகே வந்து ‘Proud of you’ என்று வாழ்த்தினார். அப்போது அச்சொல் ’ இதைவிடப்
பெரிய அங்கீகாரம் வேறேதும் இல்லை என்ற உணர்வையும் இந்த நிலையை இனிவரும் நாட்களிலும் தொடர
வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.
2016
ஜீலையில் ஆய்வேட்டை ஒப்படைத்தப்பின் சென்னையில் கல்லூரியில்
பணிபுரிந்துகொண்டிருக்கும் போது என்னுடைய நெறியாளர் முனைவர் நா. சந்திரசேகரன்
அவர்கள் தொலைபேசியில் அழைத்து என்னுடைய வாய்மொழித் தேர்வு நாளை அறிவித்தார். அதற்காக
ஆயத்தமான நான்,
பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம்
ஐயாவிடம் தகவல் தெரிவிக்காமல் டெல்லி சென்று வாய்மொழித் தேர்வுக்கு முந்தைய நாள் தொடர்பு
கொண்டேன். தொலைபேசியை எடுத்த உடன், ‘நாளை
வந்துவிடுவேன். வாழ்த்துகள்’ என்றார். வெளியே சென்றவர்கள், தற்போது உள்ள மாணவர்கள் என்று எதையும்
பாராமல் துறையில் எந்த மாணவருக்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்து
அவர்களின் பயணத்தில் இந்த வயதிலும் தன்னையும் இணைத்துக் கொள்கிறாரே! எப்படி அவரால்
முடிகிறது என்று உண்மையில் வியந்து போனேன். அவ்வாறே சொன்னபடி என்னுடைய முனைவர்
பட்ட வாய்மொழித் தேர்வு நாளன்று எப்போதும்
போல் முன்னரே வந்து வாய்மொழித் தேர்வு முடிந்து புறத்தேர்வாளரை வழி அனுப்பும் வரை உடனிருந்தார்.
அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என்று எனக்கு அப்போது தெரியாது.

கல்வி, தகுதி, வயது, குடும்பச்
சூழல் மற்றும் இன்னபிற எந்த காரணங்களையும்
பொருட்படுத்தாமல் தன்னை நாடி அனைவருக்கும் உழைத்தவர் பேராசிரியர் எச்.
பாலசுப்பிரமணியம் ஐயா. இனம், மொழி, சாதி, சமயம், பால் என்ற எந்த எல்லைக்குள்ளும் இல்லாது எண்ணம், சொல், செயல்களில் நேர்மையும் எளிமையும் கொண்டு என்னைப் போல்
எண்ணற்றோர் ஏற்றத்தில் துணையாய் நின்ற பேராசிரியரின் புகழ் காலம் உள்ளளவும்
நிலைக்கும். அதற்கு அவரின் வாழ்வே சாட்சி.
முனைவர்
அ. ஜெயபால்