Wednesday, 13 November 2024

 

ராஜ் கௌதமன் புனைவுகளில் தலித் வாழ்வியல்: கிராமத்திலிருந்து நகரம் வரை 

-  அ. ஜெயபால்
 

 

 “சாதி இந்துக்களால், தீண்டத்தகாதவர்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றிய சித்திரத்தை எப்படிச் சிறப்பாக அளிப்பது என்பதே பிரச்சினை. அவர்கள் நடத்தப்படும் விதத்தைப் பற்றிய பொதுவான விளக்கம் அல்லது சம்பவக் குறிப்புக்களை அளிப்பது என்ற இருமுறைகளால் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியும். முதலில் குறிப்பிட்டதை விட பின்னால் குறிப்பிட்டதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்”.

                                                                                           -  டாக்டர். அம்பேத்கர்.

            இந்திய சமூக அமைப்பு சாதி, மத, வருணப் பாகுபாடு என்னும் அமைப்பில் மக்களை பல்வேறு கூறுகளாக பிரித்து வைத்துள்ளது. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என  நான்கு வருணத்தை இறங்கு வரிசையில் படைத்து, வருணத்திற்கு வெளியே இருப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி  வைத்து, இழி தொழில் செய்யும் அடிமைகளாக்கி, அவர்களுக்கு எதிரான அநீதிகளை காலங்காலமாக  இழைத்து வருகிறது.  மேலும் கல்வி, நிலம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு,  வரலாற்றில் அவர்களைப் பற்றிய நேர்மையான வரலாறே இல்லாமலும் செய்து வருகிறது இந்த இந்து மயமாகிப் போன சாதிய சமூகம்.

            ஒரு சமூகம், இனம், மொழி, பண்பாடு பற்றிய தொன்மையினைக் காண நமக்கு நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பாறை ஓவியங்கள்  என்றவாறு தொல்லியல் சான்றுகளும் ஆவணக் காப்பகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்ற மன்னர்கால, சிற்றரசர் கால ஆட்சி முறை, மக்களின் கலை, பண்பாட்டு, பொருளாதார வாழ்வு முறை குறித்த பதிவுகளும்  காலனிய ஆட்சியின் போது பிரிட்டிஷாரால் தொகுத்து எழுதி வைக்கப்பட்ட குறிப்புகளும்  அறிவு ஜீவிகளின் குறிப்புகளும் அவசியமாகின்றன.

இந்தியாவில்  தலித் மக்களைப் பற்றிய பதிவு என்பது வரலாற்றில் மிகவும் குறைவே. அப்படியே பதிவு இருந்தாலும் அவற்றில், அவமானம், இழிவு, அழுக்கு, பண்பாட்டில் குறைந்தவர்கள், வன்முறை, கோபம், சோரம் போதல் முதலியவற்றைத் தான் காண முடிகிறது.  தலித் வாழ்வியலின் அம்சங்கள், மேன்மை, தாழ்வு, சாதி கொடுமை, எதிர்வினை,  நம்பிக்கை, சடங்கு, விழா, தொழில் முறை முதலிய குறிப்புகள் ஒரு தலித்தின் வாழ்க்கைப் பதிவிலிருந்து தான் பெற முடியும்.

தன்வரலாறு தலித் இலக்கியத்தின் ஒரு பகுதியாக  இல்லாமல் முக்கியமானதொரு உறுப்பாக இருக்கிறது.    தலித் வாழ்வு என்பது தத்துவமோ, கோட்பாடோ, இசங்களோ அல்ல. தலித் வாழ்வு என்பது ஒர் அனுபவம். அதில் கிண்டல், எள்ளல், கும்மாளம், கொண்டாட்டம், கோபம், அன்பு, கருணை, இறக்கம், வம்பு, துன்பம், துயரம் என எல்லாம் இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  குறிப்பாக 1930களில்  தலித் மக்களின் வாழ்வியல் பாதுகாப்பு குறித்து ‘லண்டன் வட்ட மேசை’ மாநாட்டில் பங்கு பெற்ற டாக்டர் அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் ஆகிய இருவரும் தன் வாழ்வில் நடந்த சில செய்திகளை தன்வரலாற்று வடிவில் எழுதினர்.  இதில் அம்பேத்கரின்  விசாவுக்காக காத்திருத்தல் எனும் சுயசரிதை இந்தியாவில் தலித்துகள் எவ்வாறு சாதி இந்துக்களால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை வெளிநாட்டவர் அறிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்டது. இதே போன்று ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் ஜீவிய சரித்திர சுருக்கம் அவரின் போராட்ட வரலாற்றை விவரிப்பதோடு, சாதி இந்துக்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதாகவும் இருக்கிறது. இவை தான் நமக்கு கிடைக்கிற தொடக்ககால தலித் தன்வரலாறுகள் ஆகும்.

            தமிழ்ச் சூழலில் தலித் சிந்தனை என்பது 19ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் பண்டிதர் அயோத்திதாசர் (1945-1914), ரெட்டமலை சீனிவாசன் (1860-1945),             தி. பெரியசாமிப் புலவர், ஜான்ரத்தினம் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்ற போதிலும் 1990களில் டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழா எழுச்சிக் கொண்டாட்டங்களின் போது தலித் இலக்கிய எழுச்சி கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என எழுச்சி பெற்றது. இந்நேரங்களில்  சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், நீதி இலக்கியம், மறுமலர்ச்சி இலக்கியம் என வரையறுக்கப்பட்ட இலக்கிய வகைமைகளை தலைகீழ் விகிதத்தில்  தலித் பார்வையில் ஒவ்வொன்றையும் அணுகி, ஆராய்ந்து, அவர்கள் போதிக்கும் நீதி, அறம் என்பனவற்றின் மீதான அதிகாரத்தை கேள்விக் குட்படுத்தியவர் ராஜ் கௌதமன் ஆவார். 

 

            காத்திரமான விமர்சன ஆய்வு நூல்களை எழுதிவரும் ராஜ் கௌதமனின் இலக்கியப் புனைவு நூல்கள் மூன்று ஆகும். 1. சிலுவைராஜ் சரித்திரம்,(2002) 2.காலச்சுமை (2003) 3. லண்டனில் சிலுவைராஜ் (2008). இவை மூன்றும் தமிழினி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. இவை தவிர தினமணிச் சுடர் வெளியிட்ட தலித் சிறப்பிதழில் எழுதிய பாவாடை அவதாரம் (டிசம்.31, 1994) என்ற கதையும் இந்திரன் தொகுத்து வெளியிட்ட பிணத்தை எரித்தே வெளிச்சம் நூலில் வெளிவந்த ராக்கம்மா பேத்தி(1995) என்ற கதையும் வெளிவந்திருக்கிறது. (கட்டுரையாளருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்) நூலாக வெளிவந்த மூன்று நாவலுமே தன்வரலாற்றை சொல்லுபவையாக இருக்கிறது.

            பாவாடை அவதாரம், காரைக்காலில் தான் சந்தித்த நபர் ஒருவர் பற்றியும், ராக்கம்மா பேத்தி , தன்னுடைய பாட்டியைப் பற்றியதாகவும் இருக்கிறது.  ஆக இவையிரண்டும் கூட கற்பனையில் புனைந்து சொல்லப்பட்ட கதைகளாக இல்லாமல் தன் வாழ்வில் நேரடிப் பங்களிப்பு செய்த நபர்களின் வாழ்வியலைப் படம் பிடித்து காட்டுபவையாக உள்ளது. தீவிர வாசிப்பும் எழுத்தும் கொண்ட  ராஜ் கௌதமன் மூன்று தன்வரலாற்று நூல்களை எழுதி இருப்பதன் மூலம் நமக்கு சில கேள்விகள் இயப்பாகவே எழுகிறது.

1.   1. விமர்சன நூல்கள், ஆய்வு நூல்கள் என  எழுதி வந்த ராஜ் கௌதமன் புனைவு வடிவத்தில் எழுதுவதற்கான காரணம் என்ன?

2.   2. புனைவு வடிவத்தில் தன்வரலாற்றை சொல்லுவதற்கான அவசியம் என்ன?

3.    3. தன்வரலாற்றை நான் என்று தொடங்கி விவரிக்காமல் அவன் என்று விவரிப்பதன் நோக்கம் என்ன?   

4.    4. வழமையான  தன்வரலாற்றைப் போன்றே கழிவிரக்கத்தை தூண்டுபவையாக இருக்குமா? அல்லது தலித் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இருக்குமா?

            ராஜ் கௌதமன் ஒரு பேராசிரியராக இருப்பதனாலும், மார்க்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார் போன்றோரின் எழுத்துக்களிலும், அரசியலிலும் தீவிர நாட்டமுடையவராகவும் இருப்பதனாலும் , தலித் இலக்கியத்திற்கான கோட்பாடுகளை வரையறுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்  என்பதானாலும்  அவரின் தன்வரலாற்று நாவல்கள்  தமிழ் தலித் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

            மூன்று நாவல்களிலும் சிலுவைராஜை  மைய பாத்திரமாகக் கொண்டு, தன்னை மூன்றாவது நபராகக் பார்த்து படர்க்கை நிலையில் படைத்துள்ளார். ராஜ் கௌதமன், புனைவு வடிவத்தை தேர்ந்தெடுத்தது பற்றி கூறும்போது புனைவு வடிவம்தான் ஒரு விஷயத்தை சொல்லுவதற்கும், தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வடிவம்என்றும், அதே நேரத்தில் இதில் எழுதுபவனுக்கும், வாசகனுக்கும் ஒருவித சுதந்திரம் இருப்பதாகவும் கருதுகிறார். .(காலச்சுவடு, நேர்காணல் மே, 2004:53).  தலித் வரலாறு தான் என்பதிலிருந்து தொடங்குபவையாக இருக்கிறது. ஆனால் ராஜ் கௌதமனின் தன்வரலாறு அவன்என்று தொடங்குபவையாக இருக்கிறது. இங்கு ஒருவித முரண்பாடு தோன்றினாலும்,  இவரின் தன்வரலாற்று நாவலில்  வெறும் இலக்கியம், புனைவு, வர்ணனை, நடந்த நிகழ்வு  என்றில்லாமல்  எதிர்ப்புணர்வு, விமர்சனம், எள்ளல், கிண்டல், தலைமுறைக் கோவம், சாதியத்தை அம்பலப் படுத்துதல் முதலியவற்றை எளிதில் வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கு அவருக்கு  தன்னையே மூன்றாவது நபராக பார்த்து எழுதுவது  வசதியாக இருந்திருக்கிறது. நாவல், தன்வரலாறு என இரண்டு வடிவங்களையும் கூறுகிற தன்மையாக இருப்பதால் இம்மூன்று நூல்களையும் தன் வரலாற்று நாவல் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

            ராஜ் கௌதமன் தன்வரலாற்றை எழுதுவதற்கு மூன்று காரணங்களாக                 அ. ராமசாமி கூறுவதாவது. 1. இலக்கிய வெளி சார்ந்தது  2.அவரது குடும்ப உறவு சார்ந்தது, 3. சமூக அமைப்பு மேல் அவருக்கு இருந்த கோபம் சார்ந்தது. (2008.81) . இதில் சமூக அமைப்பில் இருந்த கோவம் என்பதுதான் அவரை எழுதத் தூண்டிய காரணிகளுள் முக்கியமான காரணி என்றும் கூறுகிறார். இதனை ராஜ் கௌதமனின் மூன்று நாவல்களிலும் சாதி ஒரு முதன்மை பிரச்சினையாக இருப்பதை நாம் வாசிப்பதன் மூலம் அறியலாம்.

            கால வரிசைப்படி மூன்று நாவல்களும் சிலுவைராஜின் தொடக்ககால பிறப்பு, குடும்பம், ஆர்.சி. தெரு, கிராம அமைப்பு, பள்ளி நிர்வாகம்,  கிறிஸ்தவ திருச்சபை,  என தொடங்கி,  கல்லூரி வாழ்க்கை, வேலை தேடும் சூழல், கல்லூரி பேராசிரியர் பணி, திருமணம், குழந்தைகள், லண்டனில் கணவருடன் மருத்துவப் பணிபுரியும் மகளை, பார்க்க லண்டன் சென்று திரும்பிய சிலுவைத் தம்பதியர்கள்  என உண்மைக் நிகழ்வுகளோடு இலக்கியப் புனைவு தன்மையோடு இருக்கிறது.

            மேற்கூறிய அத்தனை தன்மைகளோடும் சிலுவைராஜ் தான் ஒரு தலித் என்பதால் பட்ட அவமானங்களை, கொடுமைகளை, புறக்கணிப்புகளை பால்ய பருவம் தொடங்கி பணி ஓய்வு வரை தான் அனுபவிக்க நேர்ந்த கொடுமைகளை   ராஜ்கௌதமன் மிக நேர்த்தியோடு பதிவு செய்திருக்கிறார். தன்வரலாறு பற்றி மராட்டிய தலித் எழுத்தாளர் அர்ஜூன் டாங்க்ளே கூறுவதாவது. “ தன்வரலாறு என்பது ஒரு ஒடுக்கப்பட்ட எழுத்தாளரின் வாழ்வோடு மட்டும் குறுகிப் போய் விடுவதில்லை. அது ஒரு சமூக அமைப்பின் விரிந்துரையும், சித்தரிப்பின் நீட்சியுமாகும். இன,மதவெறி, அநீதி, சுரண்டல், மற்றும் இத்தீமைகளுக்கெல்லாம் ஆளான மக்களின் வாழ்க்கைச் சித்திரமாகும்”. (1992:56)என்கிறார். இங்கு  சிலுவைராஜ் என்ற தனி மனித வரலாறு என்பது தன்வரலாறாக மட்டும் இல்லாமல் தான் சார்ந்த சமூக வரலாறாகவும் இருக்கிறது என்பதை ராஜ் கௌதமனின் தன்வரலாற்று  நாவல்களின் வழி அறியலாம்.

இனி ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்களின் வழி தலித்திய வாழ்வியல் (கொண்டாட்டங்கள், பிரச்சினைகள்) தன்மைகளைக் காணலாம். 

            இந்திய சமூகம் தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் என்ற பெரும்பிரிவின் கீழ் அவர்கள் வசிக்கும் இருப்பிட முறையையையும் தீர்மானித்துள்ளது. இன்றும் தீண்டத்தக்கவர் வாழும் பகுதி ஊர் என்றும், தீண்டத்தகாதவர் வாழும் பகுதி சேரி என்றும் பிரிந்து கிடப்பதைக் காணலாம். இப்படி ஊர், சேரி என்னும் அமைப்பைக் கட்டிக் காக்கும் கிராம அமைப்பு முறைதான் தீண்டாமையை நீடித்திருக்கச் செய்கிறது, நிலைத்திருக்கச் செய்கிறது (தொகுதி 17, ப.37) என்று  அண்ணல் அம்பேத்கார் அவர்கள் கூறுகிறார்.

கிராமப் புற தலித் வாழ்வியல்.:

            ராஜ் கௌதமின் மூன்று தன்வரலாற்று நாவல்களிலும் கிராமப் புற வர்ணனை, சித்தரிப்பு, வயல்வெளி, காடுகரை, கம்மாக் கொல்லை, ஓடை, கரு வேல மரம், பனை  மரம், என்ற இலக்கிய வர்ணனைகளும், மீன் பிடித்தது, ஓனானை அடித்து சாகடித்தது, இருட்டில் யாருக்கும் தெரியாமல் கூட்டாளிகளோடு சென்று பனங்காய் வெட்டியது, கம்மாக் கரையில்  தவள, தண்ணிப் பாம்ப பிடிச்சது என குறும்புகளும், கும்மாளமும் காணப் படுகிறது .

            தலித் கிராமப் புற வாழ்வியல்,  கல்வி மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, நவீன வாழ்க்கை, என இல்லாமல் போனாலும் அவர்களின் வாழ்வில் சந்தோசங்களுக்கும், பரிமாற்றங்களுக்கும், கிண்டல்களுக்கும், கும்மாளங்களுக்கும் குறை இருக்காது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சிலுவை  வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போகணும். ஒருமுறை சோலோ கோரஸ் ஆராதனையில் சிலுவையின் நண்பன் ஸ்டீபன் பாட மற்றவர்கள் வந்தாராதியுங்கள்  என்று கூட்டமாகப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

ஏவை  மறி கனியை/ வந்தாராதியுங்கள்!/மாட்டுக் கொட்டில் பாலனை/வந்தாராதியுங்கள்!

வானோர் போற்றும் பாலனை/ வந்தாராதியுங்கள்!/வயித்தால் போன பாலனை /வந்...

என்று பாடிய போது அங்கிருந்தவர்கள் ஒரே சிரிப்பு , கோவில் அதிர்ந்தது. (2002:39) வெளியே வந்த சிலுவை, ஏண்டா இப்படி பாடுன என்று கேட்ட போது , ‘ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே!  என்ற ஸ்டீபனின் பதில் வாழ்வின் யதார்த்தத்தை  பிரதிபலிப்பதாக இருக்கிறது. இத்தகைய கிண்டல்கள் என்பது தலித் குழந்தைகளின் உளவியலாகவும், கடவுள், தெய்வம் என்ற சொற்களின் மீது கட்டமைக்கப் பட்ட பயம் குறித்த மதிப்பீடுகளை  ஒன்றும் இல்லாமல் ஆக்கும் விதமாகவும் உள்ளதைக் காணலாம்.

நாட்டார் வழக்காற்றியலாக தலித் தன்வரலாறு

            தலித் தன்வரலாற்றில் சாதி ஒழிப்பின் அவசியம் முதன்மைப் படுத்தபடுகிறது. அதே வேளையில்  நாட்டார் குல தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு கூறுகளையும், பேய், பில்லி, சூனியம், மந்திரம் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், ஆகியவற்றை பிரதி பலிப்பதாகவும் இருக்கிறது. இங்கு சில நிகழ்வுகளை ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்களிருந்து காணலாம்.

- குடுகுடுப்பைக்காரன் வீட்டின் எதிரே வந்து, ‘இந்த வீட்டுக்காரன்   ஐயோன்னு போறான், ஐயோன்னு போறான், பத்து நாளைக்குள்ள போராம் னு  என்று மூன்று முறை சொன்னபோது , சிலுவையின் அம்மை எந்திரிச்சி ஒப்பாரி வைக்க தொடங்கினாள்.(2002:162)

- சிலுவை,  ஒருமுறை காரைக்காலில் , வள்ளுவர் ஜோஷியரின் வற்புறுத்தலால் குடும்பத்திற்கு ஜோசியம் பார்க்க நேர்ந்தது. சிலுவை, மனைவி, மூத்த மகள், என எல்லாருக்கும் பார்த்து முடிந்த பின்  இளைய மகள் குறித்த தகவல்களை ஜோசியரிடம் சொல்லியபோது, மனதுக்குள்ளே கணக்கு போட்டு விட்டு,  இப்ப வேண்டாம்ப்பா ஒன்பது வயது கழியட்டும்னு , ஜோசியர் சொன்னார்.  (2003:272)

 -ஒன்பது வருடம் கழிந்து தகப்பன் சிலுவை மடியிலேயே உயிர் பிரிய நேர்ந்த  இளைய மகளின் இழப்பின் போது, சிலுவைராஜ், காரைக்கால் வள்ளுவ ஜோசியரின் வாக்கு,  நீ நல்லாயிருக்க மாட்ட , நாசமாகிப் போவ என்று மண்ண வாரி விட்ட  சிலுவையின் தாயின் சாபம் என எல்லாம் சேர்ந்து பலிச்சுப் போயிடுச்சே என்று நினைத்துப் பார்த்து ஓவென்று அழுதான்.(2003:278)   

குடுகுடுப்பைக்காரன் சொல்வதைக் கேட்டு சிலுவையின் அம்மை தூக்கத்திலிருந்து எழுந்து அழுவது, சிலுவையின் வாழ்வில் மகள் இழப்பால் ஜோசியரின் வாக்கை , தாயின் சாபத்தை நினைப்பது என்பவை  வைதீக பண்பாட்டு நிகழ்வாக இல்லாமல்  நாட்டார் வழக்காற்றியலின் தனி மனித  நம்பிக்கை, சடங்கு சார்ந்த ஒன்றாக  இருக்கிறது எனலாம்.

            வயல், வெளி, காடு, மேடு என வாழ்க்கைச் சூழல் ஒருபுறம் இருந்தாலும் , கிராமப் புறத்தில்தான் சாதிக் கொடுமையின் புறத் தோற்றம் எளிதில் அடையாளம் காணக் கூடிய வகையில் உள்ளது. சிலுவையின் பாட்டியையை, நாயக்கமார் ஸம்ஸாரிகள் கூப்பிடுவதை, ராஜ் கௌதமன் பின்வருமாறு விளக்குகிறார்.  ஆர்.சி. தெருக் கோடியில் வந்து நின்று கொண்டு, ‘ஏப் பிளா ராக்கி, ஏப் பிளா ராக்கி என்று சத்தங்கொடுப்பது சிலுவைக்கு எரிச்சலைத் தந்தது. (2002:82) இந்த செய்தி கிராமத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது குறித்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.  “ தீண்டத்தக்க இளைஞர் ஒருவர் தீண்டத்தகாதவரான முதியவரை விட உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். அதே போல கல்விகற்ற தீண்டாதவர் ஒருவர் எழுத்து வாசனையே இல்லாத தீண்டத்தக்கவரை விடத் தாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்”. (தொகுதி 9, ப. 42), என்று சமூக அமைப்பியலை காட்டுகிறார்.

ராஜ் கௌதமன் குறிப்பிடும் சாதி வன்முறைகள் என்பது ஒவ்வொரு தலித்தும் தானும் கூடவே சேர்ந்து அனுபவிக்கும் தன்மையினை  ஏற்படுத்துகிறது.  இவர் குறிப்பிடும் சிலுவை ராஜ் ஒவ்வொரு அடி முன்னேற்றத்திலும் மிகப் பெரிய சோதனைகளை குடும்பம், சமூகம் சார்ந்து அனுபவிக்கிறான்.

            பள்ளிப் பருவத்தில் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையில், நாடார் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த ஞானப் பிரகாசம் , ‘போடாப் பறப் பெயல, மூஞ்சியப் பாரு (2002:273) என சாதி பெயரை சொல்லி  இழிவாக  விளிப்பது , கல்லூரி காலங்களில் புரட்சிக் குமார் , திடீர்ன்னு நீ என்ன சாதி என்று கேட்ட போது கம்யூனிசம் பேசுறவனுக்கு தேவைப்படும் சாதி,  எம்பிளாய்மெண்ட் விண்ணப்படிவத்தில் சாதிங்கிற எடத்துல எஸ்.சின்னு எழுதியும்,  என்ன சாதியின்னு எழுதலையே என்று அந்த அலுவலர் கேட்ட போது, அந்த அரங்கமே அதிரும் வகையில் சிலுவை பறையன் (2002:507) என்று கத்தியது,  போன்ற நிகழ்வுகள் சிலுவையின் பள்ளி, கல்லூரி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதி ஒடுக்கு முறைகளாக இருந்திருக்கிறது.  சாதியால் சிலுவை ஒடுக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிரான  எதிர்ப்புணர்வும் சுயமரியாதையும், தலித்தின் அடிப்படைக் குணங்களாக இருக்கிறது என்பதையும்   ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்களின்  வழி நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

            இந்து மதப் பிடியில் இருந்து சாதியின் கொடுமையில் மாண்டு வதைபடுவதை   விட ,  கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களில் தங்களை இணைத்துக் கொண்டு சமத்துவத்தோடு வாழலாம் என்றே தலித்துகள் நினைத்தனர். ஆனால் இங்கு காவி உடையில் என்றால் அங்கே வெள்ளை அங்கியில் சாதி உலாவருகிறது. இதனை பாமாவின் கருக்குவில்,  ஆசிரியப் பயிற்சி முடித்து, கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து அங்கு நிலவும் சாதி மனோபாவ நிலையைக் கண்டு  வெறுத்துப் போய், அங்கிருந்து வெளியேறிய நிகழ்வுகளிலிருந்தும் அறிய  முடிகிறது. (2006:26).  கிறிஸ்தவ பறையர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று  அவர்களுக்கு வேலை வாய்ப்பு, சலுகை முதலியவை மறுக்கப்படுகிறது. சமூகத்தின் சாதியப் பார்வை எல்லா  மதத்திலும் வேரூன்றி இருக்கிறது. இதனால் ராஜ்கௌதமன் குறிப்பிடும் சிலுவை ஒருகட்டத்தில் தன்னுடைய மதத்தை இந்து வாக மாற்றிக் கொள்கிறார் . இங்கு அவர் இந்து மதக் கருத்தியல்களை ஏற்றுக் கொண்டார் என்பதாக இல்லாமல் , உயர்கல்வி, உயர்துறைகளில் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கான செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது எனக் கொள்ளலாம்.

            கல்வி, திருச்சபை என  நிறுவனம் சார்ந்து ஒடுக்குமுறை ஒரு பக்கம் இருந்தாலும், உள்ளூரில் நிலவும் சாதி வன்கொடுமைகள் தான் தலித் ஒருவனை கிராமப் புற வாழ்விலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொள்ள வழி கோலுகிறது. இங்கு ராஜ் கௌதமன் காட்டும் சிலுவை இடம் பெயர்வு சிந்தனை பற்றி கூறுவதாவது:  சிலுவை குடியிருக்கும் ஆ. சி. தெருக் காரங்களுக்கும், சாலியக் குடிகளுக்கும் கல்லறை தொடர்பான சண்டையில் வெட்டு குத்து , போலீஸ், கேஸ் ன்னு அலையிறது சிலுவைக்கு பிடிக்கல, ' ‘பி. எஸ்சி. முடிச்சிவிட்டு அப்பிடியே வேல கீல பாத்துக்கிட்டு அசலூர்ல போய் பொழைக்க வேண்டியது தான் என்ற எண்ணம் தலை தூக்கியது(2002:340)    சாதிய மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும் ஒரே சாதிக்குள் உள்ள பொறாமையும், பொச்சரிப்பும், வளர்ச்சியை பிடிக்காத மக்களின் குரூர பார்வையும்  ஒரு தலித்தை நகரம் நோக்கி செல்ல வைக்கிறது.

நகர்ப் புற தலித் வாழ்வியல் :

            கிராமப் புறம் தான் தீண்டாமையைக் கட்டிக் காக்கிறது என்ற எண்ணம், ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்களில் வரும் நகர்ப் புற சாதி வன்முறையின் முன் தோற்றுப் போகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல்களில் கிராமம், நகரம் என இரு மையங்களிலும் சரி நிகர் தலித் வாழ்வை நுணுக்கமான முறையில் பதிவு செய்திருக்கிறார்.   மலங்காட்டுப் பகுதியில் ஒரு சேரியில் பிறந்த சிலுவைராஜ்  படிப்பு, வேலை, என நகரம் சார்ந்து இடம்பெயர்ந்து தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார். 

            சிலுவை தமிழ்த் துறையில் பேராசிரியாராக காரைக்கால், பாண்டிச்சேரி ஆகிய நகர்புறங்களில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப வாழ்க்கை , உறவுகள் என்ற ஓட்டு மொத்த வாழ்க்கை நகர்ப் புறத்தில் நகர்கிறது.  சிலுவை தான் பணி புரியும் இடங்களில் நிலவும்  சக பேராசிரியர்களின் சாதிய மனோபாவம், ஒடுக்கு முறை ஆகியவற்றினால் அவரை, அவர்களிடமிருந்து ஒரு அன்னியனைப் போல உணர வைத்தது . மனிதர்கள் வெளியில் காட்டுகிற முகம் வேற, பழக்கத்திலும் இயக்கத்திலும் அவர்களுக்குள்ளிருந்து வெளிப்படும் முகம் வேற (2003:112) என்பதை அடையாளம்  காணுகிறபோதுதான் சிலுவை தன்னுடைய பாமரத்தனத்தை உணர்ந்தவராகிறார். சிலுவையைப் போன்றே ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு சூழலில்   தங்கள் பாமரத்தனங்களை உணர்கிறார்கள்.

            தலித்துகள் கல்வி பெறக் கூடாது என்பதில் சாதி இந்துக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இன்றும் கூட அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் தலித்துகள் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். அதற்கு மெரிட் என்னும் அளவுகோளைக் கொண்டு தலித்துகளை உயர்கல்வி, உயர்துறைகளில் வர விடாமல் தடுத்து வருகின்றனர்.  சிலுவை வேலைக்கு சேர்ந்த புதிதில் . சிலுவையைப் பார்த்து ஆசிரியர் ஒருவர்,  எஸ்சி. க யாராச்சும் சயின்ஸ் டிபார்மெண்டல இருக்காங்களா? ஆனாப் பாருங்க. எங்க டிபார்மெண்ட்லதான் எஸ்சி. க ஜாஸ்தி. சயின்ஸ் பாடம் இவங்க மண்டையில ஏராதில்ல அதான் " (2003:133) . என்று புலம்புகிறார். இது போன்ற கல்வி சார் சாதி கொடுமைகள் தலித் மானவர்களை உளவியலாக பாதிக்கச் செய்கிறது.

            முற்றிலும் நகர்புற சூழலில் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர்  தலித்துகளுக்கு கல்வி நிறுவனம்தான் சாதிக் கொடுமையின் மையமாக செயல்படுகிறது. ராஜ் கௌதமனின்  தன்வரலாற்று நாவல்களில், சாதி தெரியாமல் வளர்ந்து வந்த  சிலுவையின் மகள், டி.சியில போடுறதுக்கு தான் என்ன சாதி என்று தந்தையாகிய சிலுவையிடம் கேட்ட போது, 'பறையன் கேஸ்ட்' என்று சிலுவை சொன்னதும், மகள் அழத் தொடங்கி விட்டாள். மகள் வட்டியும், முதலுமாக இந்தச் சாதியில் பிறந்ததற்காக அவமானப்பட்டுக் கொண்டிருப்பாளோ?  என்று வருந்திய சிலுவை , அழுததற்கான காரணம் கேட்ட போது,   ஸ்கூல்ல  இது கெட்ட வார்த்தப்பா, இதச் சொல்லிதான் ஒருத்திய ஒருத்தி திட்டுவாங்க. (2003: 274). என்று கூறுகிறாள்.

            பிற சாதியினருக்கு நன்றாகப் படிப்பது மிகவும் சாதாரமான இயல்பான ஒன்றாக இருக்கக் கூடும்.ஒரு தலித்துக்கு அது சுயமரியாதை சார்ந்த  ஒரு விஷயம், அவனுக்கு மறுக்கப்பட்ட பல விஷயங்களை அவன் நன்கு படிப்பதன் மூலமே பெற முடியும். (ப. 53, நேர்காணல், காலச்சுவடு மே. 2004) என்று நேர்காணல் ஒன்றில் கூறும் ராஜ் கௌதமன் கல்வி ஒன்றுதான் ஒரு தலை முறை தலை நிமிர்வுக்கான பிடிமானம் என்பதை தன்வரலாற்று  நூல்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருவைதை காணலாம்.

            சிலுவையின் மகள் பிளஸ் டூவில் மாநிலத்தில் இரண்டாம் இடத்தை வகித்த போது பத்திரிக்கைக்காரர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலார்கள், என எல்லோரும் தன் வீட்டிற்கு வந்து தன் மகளை பேட்டி கண்ட போது, சிலுவை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை.  இந்த சாதி சமூகத்தைப்  பார்த்து, " இப்ப என்ன சொல்றீங்க?. ஒரு எஸ்சி யால படிக்க முடியாதா? எல்லோரையும் பீற்றடிக்க முடியாதா? பிளஸ் டூ தேர்வுல எஸ்ஸ்.சிக்கின்னு கோட்டா சிஷ்டத்துல மார்க் போடுறாங்களா? புளூக்குள மார்க் வந்திடுச்சினு சொல்லுவீங்களா?  என்று தன் தலைமுறையினரின் கோவத்தை வெளிப்படுத்துகிறார்.  இந்த வார்த்தைகளை நாம் வெறும் சொற்களாக  பார்க்க முடியாது.

 தலித் சாதி மறைத்து வாழுதல்.

            நகர்ப் புற தலித்துகளில் பெரும்பான்மையோர் தங்கள் சொந்த சாதியை மறைத்து வாழ்வதும், பிராமணர் போன்று தன்னுடைய செயல்பாடுகளையும், பேச்சுகளையும் உருவாக்கிக் கொண்டு வாழ்வதும், உயர்சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டு சாதியின் பிடியிலிருந்து தப்பித்து கொள்ள  நினைப்பவர்களாகவும் தான் உள்ளனர்.  சிலுவை சந்தித்த நபர்களில் பலர், பொது வெளியில் சாதியை எவரேனும் கேட்க நேர்ந்தால் நாயுடு வென்றும்  நாடார் என்றும் சொல்லிக் கொள்ளும் தலித்துகளாக இருக்கின்றனர். அதற்கு அவர்கள்  'எதுக்கு நம்ம சாதி பத்தி அனாவசியமாகச் சொல்லணும்?'(2003:153) என்றும் பதில் கூறுகின்றனர் . அதுவும் மெத்தப் படித்தவர்களாலே இத்தகைய விவாதம் முன்வைக்கப்படுகிறது.

            இப்படி சாதியை மறைத்து கொண்டு வாழத் துடிக்கும் தலித்தாகயிருந்தாலும், சாதி அடையாளத்தோடு, சாதி ஒழிப்பிற்காக களப்பணியாற்றக் கூடிய தலித்தாகயிருந்தாலும், கல்வி, பொருளாதார மேன்மை, புறத்தோற்றத்தில் தூய்மை, நேர்மை என எத்தனை பண்பு நலன்களைக் கொண்டவர்களாயிருந்தாலும் இந்த சாதிய சமூகம்  சாதியின் அடிப்படையில் தான் மனிதனின் குண நலன்களை வகைப்படுத்துகிறது. தலித்துகள், நகர்ப் புறச் சூழலில் தங்குவதற்கு வாடகை வீடு கிடைப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை  ராஜ் கௌதமன் பின்வருமாறு விளக்குகிறார். " நீங்கள் என்ன வர்ணம்? என்ன சாதி?, கிறிஸ்டியனா?, இந்துவா? வேல பாக்குறீங்களா? வெஜிட்டேரியானா? , நான்-வெஜிட்டேரியானா?  எத்தினி குழந்தைக? பெரியவங்க உண்டா? என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் பதில் சொல்லுவதிலிருந்து தப்பிக்கச் சொந்தமான ஒரு வீடு வேணும். இப்படியே போனா கடேசியில ' நீங்க மனுசனா?, இல்ல மிருகமா?ன்னு கூட கேட்டாலுங் கேப்பாங்க.” (2003: 49) இத்தகைய கேள்விகள் தனி மனித உளவியலை மிகவும் பாதிக்க கூடியதாவும், மிகக் கொடூரமான வலியையும் தருவதாக உள்ளது என்பதையும் சிலுவையின் நகர்ப்புற வாழ்விலிருந்தும், நண்பர்களின் வாழ்வியலிருந்தும் அறிய முடிகிறது.

 லண்டன் நகர தலித் வாழ்க்கை

            இந்தியாவில் பிறந்து வளர்ந்த எவரும் சாதியின் சாயம் இல்லாமல் உலகில் எங்கும் சென்று வாழ முடியாது. வர்ணாசிரம கட்டமைப்பு போதிக்கும் ஏறு- இறங்கு வரிசை  மனோபாவம் எல்லோரிடத்திலும் ஏதோ ஒரு வடிவில் குடி கொண்டுள்ளது. கல்வி மறுக்கப்பட ஒரு சமூகத்திலிருந்து பல்வேறு  போராட்டத்தின் மூலம் இழந்த மாண்பை மீட்டெடுத்து வரும் தலித்துகள் கல்வி, வேலை அரசியல் என தன் வாழ்நாளில் நகரம், தலை நகரம், வெளிநாடு என பயணிக்க நேர்கிறது.

            இங்கு  ராஜ் கௌதமனின் லண்டனில் சிலுவை ராஜ் என்ற தன்வரலாற்று  நாவல், லண்டனில் டாக்டர் தொழில் புரியும் சிலுவையின் மகளையும்  மருமகனையும் காணச் சென்ற சிலுவை தம்பதியரின்  ஐம்பது நாட்கள் வாழ்க்கையை சொல்லுகிறது. முற்றிலும் வேறுபட்ட ஒரு தேசத்தில், இந்திய கிராமத்து சேரியில் பிறந்த  சிலுவை, தான் சந்திக்கும், தன்னோடு தொடர்புடைய அத்தனையோடும்(வீடு, சாலை, கட்டிட அமைப்பு, ஆடை , மனித உறவுகள் ) விலகிய நிலையில் நின்று ஒப்பிட்டு நோக்கில் அணுகி  இந்திய தேசத்தை நினைத்து மகிழ்வதும், வருத்தப்படுவதும் என தன்வரலாற்று நாவல் நகர்கிறது.

            ஒரு பிரதேசம் கடந்து வேறு பிரதேசம் பயணிக்கும் ஒருவன் அங்கு நிலவும், தட்ப வெப்பம், மொழி, உணவுப் பழக்கங்கள், உடை , கலாச்சாரம், பண்பாடு, அந்த நாட்டு சட்ட ஒழுங்கு விதிகள்  என பல்வேறு சிக்கல்களை, இடர்பாடுகளை  சந்திக்கிறான். இவைகளையும் தாண்டி நம்மூர்க்காரரா என்று அன்போடு ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கிற   போது அத்தனை  இடர்ப்பாடுகளும்  அவனை விட்டு விலகி  விடுகிறது. இங்கு ராஜ் கௌதமனின் லண்டனில் சிலுவைராஜில் சிலுவை, ‘ஒருநாள் சாலையில் பயணித்த போது, முன் சென்ற தமிழரிடம் பேசுவதை  தவிர்த்து விடுகிறார். அதற்கு காரணம் கூறும்போது  “தமிழன் என்றறிந்ததும்  அடுத்து அறிய விரும்புகிற அடையாளம் எதுவாக இருக்கும் என்பது சிலுவைக்கு நன்கு தெரியும். (2008: 107). என்று கூறுகிறார். 

            சாதி வழி அதிகார சுகம் கண்ட எவருக்கும் , எங்கு சென்றாலும், எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தான் எதிர்கொள்ளும் நபர் எந்த சாதியோ என்றுதான்  அவரின் உளப்பாங்கு கேட்டுக் கொண்டிருக்கும். இந்தியாவில் பிற மாநிலங்களில் தமிழ்ப் பெயரால் அமைக்கப்படும் சங்கம் என்பதும், வெளிநாடுகளில் இந்திய இன உணர்வால் கூட்டப்பெறும் அமைப்பு என்பதும்  பிராமினர்களின் சங்கமமாகவும்,  மேல் தட்டினரின் சங்கமுமாகத்தான் இருக்கிறது.  இதனை சிலுவை லண்டனிலும் கண்டதை ராஜ் கௌதமன், கூறும்போது,  எத்தனையோ பாரம்பரிய நோய்களில் இவர்களுக்கு சாதியும் ஒரு நோயாக இருக்கலாம் என்றும் வெளி நாடுகளில் தங்கி வேலை பார்க்கிற தலித் இளைஞர்கள் இந்தியர்களைக் காண்பதைத் தவிர்த்து வருவது ஏனென இப்போது விளங்கியது.(2008:68) என்றும் கூறுகிறார். ராஜ் கௌதமனின்   இந்த வார்த்தைகளோடு , ‘வெளி மாநிலங்களில் தங்கி படிக்கிற, வேலைபார்க்கிற  தமிழ் தலித் இளைஞர்கள் தமிழர்களைக் காண்பதைத் தவிர்த்து வருகின்றனர்என்பதையும்  சேர்த்துக்  கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

            ராஜ் ஜௌதமனின் தன்வரலாற்று நாவல்களில் அவர் பிறந்து வளர்ந்த வட்டாரம் , கிருஸ்தவ திருச்சபை, கல்வி நிறுவனம், சாதி வன்மம், தலித்துகளின் குலதெய்வ வழிபாடு, நம்பிக்கை, வாழ்வியல் சடங்குகள் என அத்தனையும்காண முடிகிறது. அதே நேரத்தில்    தலித் வாழ்வியல் என்பது ராஜ்  கௌதமனின் வார்த்தைகளில் சொல்வதென்றால்  நிகழ்கால வன்முறைகளின் அத்தனைக் கூறுகளையும் கொண்டதாக இருக்கிறது.  உலகமயமாதல்,  தாராளமயமாதல், நவீனமயமாதல் என உலக ஒர்மை பேசும் அதே வேளையில் ஒவ்வொரு தலித்தின் தன்வரலாறும்  நமக்கு வேறொரு உலகைக் காட்டிக் கொண்டிருக்கிறது.   மிகப் பெரிய  விஞ்ஞான, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியினூடாக தலித்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் இன்று மிக நுட்பமாகி வருகிறது. இந்த வேளையில் தலித்துகளின்  சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்கு  கலக/எதிர் அரசியலை மீளாய்வு  செய்வதும் வென்றெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதிகாரம் கருத்திசை மட்டுமல்ல மௌனத்தையும் உற்பத்தி செய்கிறது. எனவே மௌனத்தை உடைப்பதே எழுத்தாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் பணி என்பார் எட்வர்ட் செயித். அந்த வகையில் ராஜ் கௌதமன் இங்கு நிலவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான  சமூக  மௌனங்களை உடைத்திருக்கிறார்.

பயன்பட்ட  நூல்கள்:

அம்பேத்கர். டாக்டர்        - பாபசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 25, 2000

                                          - பாபசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி17,1999

                                               - பாபசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 9, 1999

அர்ஜூன் டாங்க்ளே            -தலித் இலக்கியம் போக்கும் வரலாறும் 1992

அழகரசன் (பதிப்பாசிரியர்)  -  பக்தி: அனுபவம்-அரசியல் மாற்று பதிப்பகம், 2010

இந்திரன்                               - பிணத்தை எரித்தே வெளிச்சம், அலைகள் பதிப்பகம்,1995

பாமா                                    -கருக்கு, பாரதி புத்தகாலயம்,  2006

பாரதி.ச, முத்துகந்தன்.சி, கார்வண்ணன்.அ, பொன்னுசாமி.பி – வெட்சி (தமிழக தலித் ஆக்கங்கள்), பரிசல் 2009

ராமசாமி.அ               - மையம் கலைத்த விளிம்புகள் ,ஆழி பதிப்பகம், 2008

ராஜ் கௌதமன்        - சிலுவை ராஜ் சரித்திரம், தமிழினி பதிப்பகம், 2002

                                  -காலச்சுமை, தமிழினி பதிப்பகம்,  2003

                                   -லண்டனில் சிலுவைராஜ், தமிழினி பதிப்பகம் , 2008

                                   - தலித்திய விமர்சனக் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம் , 2011

                                   -தலித் பண்பாடு , கௌரி பதிப்பகம், 1993

 

இதழ்.

காலச்சுவடு, மே, 2004