Tuesday, 17 September 2024

 

ஆம்ஸ்ட்ராங் எனும் அம்பேத்கரிஸ்ட்

(அ)

பாபாசாகேப் + பகுஜன் நாயக் = சமத்துவத் தலைவர்

-       அ. ஜெயபால்


                                                       

 

            என் வாழ்க்கையிலிருந்து நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அது நான் ஒருபோதும் என் சமூகத்தைக் கைவிடவில்லை. நான் என் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் அதை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்வேன்.”   -  பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்.

 

            இந்தியச் சமூகம் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கல்வி, பொருளாதார, அரசியலில் ஒரு பிரிவினருக்குச் சுதந்திரமும் ஒரு பிரிவினருக்கு அடிமைத் தனத்தையும் கற்பித்து வந்தது. மனித குலத்துக்கு எதிரான இப்போக்கை,  ததாகதர் புத்தர் தொடங்கி மகாத்மா ஜோதிராவ் பூலே, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் முதலான ஆளுமைகள் கேள்விகேட்டுச் சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்க அரும்பாடுபட்டனர். இந்திய வரலாற்றில் புத்தரின் போதனைகள் அறியாமை இருளில் கிடந்த மக்களுக்கு  அறிவு வெளிச்சதைக் காட்டியது. நவீன இந்தியாவைக் கட்டமைத்த பாபாசாகேப் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர் தம் அறிவு நுட்பத்தின் ஆற்றலால் பல கோடி இந்திய மக்களின் மேம்பாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் வழி பாடாற்றினார்.


           

            இந்தியா முழுமைக்கும் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட இந்தியாவில் சமூக ஜனநாயகம் மற்றும் அரசியல் ஜனநாயகத்தின் உயர்ந்த மாண்பினை எடுத்துக்கூறி அரசியல் அதிகாரமே அனைத்திற்குமான திறவுகோல் என்றார். அவர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அனைத்திந்திய பட்டியலினக் கூட்டமைப்பு, குடியரசுக் கட்சி ஆகிய இயக்கங்களைத் தோற்றுவித்துக் கொள்கைகளை வரையறுத்துச் செயல்படுத்தி வந்தார். சிதறிக் கிடந்த மக்களை அரசியல் ரீதியில் அமைப்பாக்கிய டாக்டர் அம்பேத்கரின் மறைவிற்குப் பின் இந்தியாவில் அவரின் கொள்கைகளைத் தாங்கி ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியவர் மான்யவர் கன்ஷிராம்.

           

            மான்யவர் கன்ஷிராம், சாதியால் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளான  பகுஜன் (பெரும்பான்மை மக்கள்) சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்தி அவர்களுக்குள் அரசியல் தெளிவை ஏற்படுத்திச் சமூக மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர்  சமூக ஊழியர்கள் கூட்டமைப்பு (BAMCEP), தலித் மற்றும் சுரண்டப்படுவோர் கிளர்ச்சிக் குழு (DS4) ஆகிய அமைப்புகளை 1971 இல் ஏற்படுத்தி மக்களை அமைப்பாக்கிய மான்யவர் கன்ஷிராம் 1984 இல் பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்தார். இந்தியாவின் வடக்குப் பகுதியான உத்திரப் பிரதேசத்தில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் 1995, 1997, 2002 ஆகிய ஆண்டுகளிலும் 2007 ஆம் ஆண்டுத் தனிப் பெரும்பான்மையுடனும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியமைத்தது. மக்களால் பகுஜன்  நாயக் (தலைவன்) என்று மான்யவர் கன்ஷிராம் போற்றப்பட்டார்.

 

            கன்ஷிராமின் அயராத உழைப்பின் பலனாகப் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வேரூன்றி தேசியக் கட்சியாக உருப்பெற்றது. இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மான்யவர் கன்ஷிராம் பரிநிர்வாணம் அடைந்தார். அந்த 2006 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை பெரம்பூர் பகுதியில் டாக்டர் பீம்ராவ் தலித் அசோசியேஷன் எனும் சங்கத்தைக் கட்டமைத்து மக்கள் தொண்டாற்றி வருகிறார் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

 

            2006 சென்னை மாநகராட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு மேலும் பல பணிகளைச் செய்ய திட்டம் கொண்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களிடம் அப்போது தமிழகத்தில் செயல்பட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியினர் யானைச் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவ்வாறே போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் சென்னை 99 வது பகுதி உறுப்பினராக மாநகராட்சி மாமன்றத்தில் இருந்து தீரத்துடன் செயல்பட்டார்.  துடிப்புமிக்க அம்பேத்கரிய செயல்வீரரைக் கண்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை, இந்தியாவின் இரும்பு மங்கை எனப் போற்றப்பெறும் சகோதரி மாயாவதி அவர்களிடம் அறிமுகப்படுத்தினர். பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைத் தாங்கிய ஆற்றல் மிக்க இளம் தலைவரான ஆம்ஸ்ட்ராங் அவர்களை 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் சகோதரி மாயாவதி நியமித்தார்.  பொறுப்பேற்ற அந்த நாளிலிருந்து அவரின் இறுதி மூச்சு இந்த மண்ணில் உலாவிய நொடி வரை பாபாசாகேப் அம்பேத்கரின் பிள்ளையாகப் பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராமின் மறு உருவமாகச் செயலாற்றினார்.



 

            அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஒரு தலைமை, ஒரு கட்சி, ஒரு கொள்கையின் கீழ் ஒன்றுபடுங்கள்  என்று கட்டளையிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்தை மேடைதோறும் சமகால அரசியல் செயல்பாடுகளுடன் பொருத்திக் காட்டி பேசி வந்தார். பெரும்பான்மை இந்தியர்களுக்கு வாக்குரிமை கிடைத்த வரலாறு, ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்ற தத்துவத்தின் விளக்கம், பதினான்கு மணி நேர வேலையிலிருந்து 8 மணி நேர வேலை, குடியரசு என்றால் என்ன?, அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள்,  குடிமக்களுக்குக் கற்பிக்க வேண்டிய அரசியல் அறிவு போன்ற பல்வேறு விளக்கங்களை ஒரு பேராசிரியர் போல கற்பித்து வந்தார்.

 

            2006 ஆம் ஆண்டு, சென்னை 99 வது வார்டு மன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை மாநகராட்சி மேயரிடம் பேசி தீர்வு கண்டார். 2011 ஆம் ஆண்டு, கொளத்தூர் சட்ட மன்றத் தொகுதியில் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். தொடர்ந்து சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர்ந்து தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வலிமையைக் கூட்டினார்.

 

            கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, பெரும்பாக்கம் (காஞ்சிபுரம்), கே.வி.குப்பம் (வேலூர்), உள்ளியம்பாக்கம்  மற்றும் கீழ் குப்பம் (ராணிப்பேட்டை) ஆகிய இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருநின்றவூர் நகராட்சியின்(திருவள்ளூர்) 8, 9 மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திருப்பனந்தாள் (தஞ்சாவூர்) பேரூராட்சியின் 5 வது வார்டு கவுன்சிலர் பதவியையும் மக்கள் ஆதரவுடன் தன்வயப்படுத்தி அப்பதவிகளை அலங்கரித்து  வருகிறது.  இந்த வெற்றி தமிழ்நாட்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் எழுச்சியின் ஒரு மைல்கல்லாகவும் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உழைப்பின் விளைச்சலாகவும் பார்க்கப்படுகிறது.

 

            வோட் ஹமாரா, ராஜ் துமாரா நஹீ சலேகா நஹீ சலேகா என்ற மான்யவர் கன்ஷிராமின் தாரக மந்திரத்தைத் தமிழ்ப்படுத்தி எங்கள் ஓட்டில் உங்கள் ஆட்சி நடக்காது இனி நடக்காது என்ற முழக்கத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், துண்டறிக்கைகளிலும் பதாகைகளிலும் இந்தியாவை ஆள்வதே இறுதி இலட்சியம் என்ற முழக்கத்தை இடம் பெறச் செய்து ஆட்சி அதிகாரத்தின் மீதான எண்ணத்தைப் பகுஜன் மக்களிடத்தில் விதைத்து வந்தார். அவ்வாறே, தமிழ்நாட்டிற்குத் தேவை திராவிட மாடலா? குஜராத் மாடலா? என்ற வாதங்கள் நடைபெற்ற சூழலில் தம்ழிநாட்டிற்குத் தேவை ஜெய்பீம் மாடல் ஆட்சி என்பதைக் காரண காரியங்களோடு ஜெய்பீம் மாடல் விளக்கப் பொதுக் கூட்டத்தை தமிழ்நாட்டின் மாவட்டந்தோறும் நடத்தி வந்தார்.

 

           

அரசியல் பலம் பெற்று பகுஜன் ஆட்சியைச் சாத்தியப்படுத்த தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்ட மான்யவர் கன்ஷிராம், மக்களிடத்தில் தன் சட்டைப்பையில் இருக்கும் பேனாவை எடுத்துக் காட்டி சாதிய சமூகக் கட்டமைப்பை விளக்குவார். பேனாவின் மேல் மூடிப் பிராமிணர்களையும் (15%) எழுதும் பகுதியான பேனா முள், பேனா மை உள்ளிட்ட பேனாவின் பிற பகுதி பகுஜன்களையும் (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் =85%)  குறிக்கும் என்று கூறும் மான்யவர் கன்ஷிராம், பேனாவின் மூடியை அப்புறப்படுத்தினால்தான் நம் வரலாற்றை எழுத முடியும். எனவே பகுஜனாக ஒன்றுபடுங்கள் என்றார். அவர் வழியில் வந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தன் சட்டைப் பையில் உள்ள பேனாவை எடுத்து இந்தப் பேனா நம் சட்டைப் பைக்கு வந்த வரலாற்றை எடுத்துரைத்துப் பகுஜன்களை ஒருங்கிணைத்தார்.

 

            சாதி, மத, இன, மொழி, பாலின ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடச் சமூக, அரசியல் தெளிவுள்ள கல்வியாளர்கள் அவசியம் என்பதை உணர்ந்த சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தென்னிந்திய புத்தக விகார் என்ற பதிப்பகத்தையும் அன்னை சாவித்திரிபாய் இரவு பாடசாலையையும் நிறுவி அதனைத் திறம்படச் செயல்படுத்தினார். ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களின் கவனத்தைப் பெரும் வகையில் பௌத்தம், அம்பேத்கரியம் சார்ந்த நூல்களை வெளியிட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். இவரின் ஊக்கத்தால் உருப்பெற்ற வழக்கறிஞர்கள் பலர்,Elephant  Advocate Association’ என்ற சங்கத்தைக் கட்டமைத்து  தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் வழக்குரைஞர்களாகச்  செயல்பட்டு வருகின்றனர்.

 

            அறிவியல் அறிந்த நவீன மனிதனுக்கு மதம் இருக்க வேண்டும்.  அப்படி அவன் கொண்டிருக்க வேண்டிய ஒரே மதம் புத்த மதம” என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். தலித்துகள் ஒருபோதும் இந்துக்கள் இல்லை. சதுர்வர்ண அமைப்பிற்கு வெளியே உள்ள தலித்துகள் சாதியற்றவர்கள். அவர்களின் பூர்வீக மதம் பௌத்தம். பௌத்த மதத்தில் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் எனும் உன்னதமான கோட்பாடுகள் அடங்கியிருப்பதைத் தம் வாழ்நாளின் பாதிநாள் ஆராய்ந்து அறிந்த பாபாசாகேப் அம்பேத்கர், நான் ஓர் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாகச் சாக மாட்டேன் என்று உறுதி பூண்டு 1956 அக்டோபர் 14 ஆம் தேதி நாக்பூர் தீட்சாபூமியில் லட்சக்கணக்கான மக்களோடு  தாய்மதம் பௌத்தம் தழுவினார். இது இந்தியாவில் ஏற்பட்ட  மிகப்பெரிய சமயப் புரட்சி என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராம், பாபாசாகேப் பௌத்தம் ஏற்ற 50 ஆவது ஆண்டான 2006 இல் அக்டோபர் 14 அன்று பௌத்தம் தழுவப் போவதை அறிவித்திருந்தார். ஆனால் அவர் அறிவித்த நாளுக்கு 5 நாடகள் முன்னரே பரிநிர்வாணம் அடைந்தார்.

 

            தென்னிந்தியாவின் மையமாகத் திகழும் தமிழ்நாட்டில், தொடக்கக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியம், இலக்கணம், நிகண்டு என அனைத்தும் பௌத்த நூல்களே என அறிந்த போதிசத்வா பண்டிதர் அயோத்திதாசர்,  1858 இல் கர்னல் ஆல்காட்டின் முயற்சியால் இலங்கை சென்று தீட்சை பெற்றுப் பௌத்தத்தை ஏற்றார். சென்னை ராயப்பேட்டையில் சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவி பௌத்தப் பணிகளில் எழுத்து, இயக்கம் என  ஈடுபட்டு வந்த பண்டிதர் 1914 ஆம் ஆண்டு பரிநிர்வாணம் அடைந்தார். அவரின் மறைவிற்குப் பின் பௌத்தப் பணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுவந்த சூழலில் பண்டிதர் அயோத்திதாசரின் நினைவாகச் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தன் குடியிருப்பிற்கு (பெரம்பூர்)  அருகே,  தென்னிந்திய புத்த விஹாரை, சகோதரி மாயாவதி பிறந்தநாளான ஜனவரி 15 அன்று 2018 இல் புதிதாகக் கட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு இந்தியாவின் புகழ்பெற்ற பௌத்தத் தலங்களான புத்தகயா, வாரணாசி ஆகிய இடங்களிலிருந்தும் மகாராஷ்டிரம், கர்நாடக உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புத்த பிக்குகள், பிக்குணிகள் அழைத்து வரப்பட்டனர் என்பது தமிழ் பௌத்த வரலாற்றின் முக்கியமான பாகம் ஆகும்.  மூன்று மாடி அடுக்குக் கொண்ட புத்த விகாரின் மாடியில்  சமூகத் தலைவர்களின் படங்கள், கருத்துகளோடு நூலகம் ஒன்றும் அமைத்துள்ளார்.

 

            தென்னிந்திய புத்த விகாரில் மாதந்தோறும் முழுநிலவு நாளில் கூடுதல், பௌத்தப் பண்டிகைகளைக் கொண்டாடுதல், திருமணம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை நடத்துதல், தாய்மதம் திரும்பும் புரட்சி எனும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பண்டிதர் அயோத்திதாசர் நிறுவிய பௌத்த சங்கத்தை நினைவுகூறும் விதத்தில் 2021 ஆம் ஆண்டு தென்னிந்திய புத்த விகாரின் 125 ஆம் ஆண்டு விழா எனும் பெயரில் உலக பௌத்தத் தலைவர்களை அழைத்துப் புத்தகம் வெளியிடுதல், கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளைப் பண்பாட்டுத் தளத்தில் ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டார்.

 

            சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தன்னுடைய நடை, உடை, பாவனை, பேச்சு உள்ளிட்ட புறத் தோற்ற அழகுகளில் பாபாசாகேப் அம்பேத்கரையும் புத்தர், பாபாசாகேப் அம்பேத்கர்  கொள்கைகளைக் கற்று தான் கொண்ட சிந்தனைத் தெளிவு உள்ளிட்ட அக அழகுகளில் பகுஜன் நாயக் கன்ஷிராமையும் பிரதிபலித்தார். சகோதரத்துவம் இல்லாத சமத்துவம், சுதந்திரம் பயனற்றது. சகோதரத்துவம் இருந்தால் தான் சமத்துவம்  மலரும் என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.  தன் வாழ்நாளில் சகோதரத்துவம் நிரம்பிய மனிதராக இருந்ததன் விளைவால்தான் மக்களால் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்று போற்றப்பட்டார்.

 

            “மனிதன் நிலையானவன் அல்ல. ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்க நேரிடும். ஆனால் சுயமரியாதையின் உன்னத லட்சியங்களைச் செழுமைப்படுத்துவதற்கும், மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஒருவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும். நாங்கள் அடிமைகள் அல்ல. போர்வீரர் குலத்தைச் சார்ந்தவர்கள்” என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றுக்கு இணங்க வாழ்ந்து, பாபாசாகேப் இழுத்து வந்தத் தேரை முன் நகர்த்திய பெருமைக்குரியவர் சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.  

 

            பகுஜன் நாயக் மான்யவர் கன்ஷிராமின் அரசியல் எழுச்சி பெற்ற மக்கள், பாபாசாகேப் அம்பேத்கரிடம், பாபாசாகேப்! நீங்கள் விட்டுச் சென்ற பணிகள் முழுவதையும் கன்ஷிராம் செய்வார்” (பாபா தேரா மிஷின் ஆதூரா கான்ஷி ராம் கரேகா பூரா) என்றனர். அவ்வாறே மான்யவர் கன்ஷிராமிடம், “கன்ஷிராம்! உங்களுடைய உன்னதமான பணி எதுவெனில் தூங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்பி விட்டாய்”. (கான்ஷி தேரி நேக் கமாயி துனே ஸோதி கோம் ஜகாய்) என்றனர். உத்திரப் பிரதேசத்தில் ஒலித்த இக்குரல் தமிழ்நாட்டிலும் ஒலித்தன. கன்ஷிராம் என்ற பெயர் இருந்த இடத்தில் மிகப் பொருத்தமாக இட்டு நிரப்பக் கூடிய பெயராக ஆம்ஸ்ட்ராங் என்ற பெயர் இருந்தது என்பதை வரலாறு இனி எழுதும்.

  ஜெய் பீம்.                              ஜெய் ஆம்ஸ்ட்ராங்


(நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க்' நூலில் வெளிவந்தக் கட்டுரை)